சனி, 16 நவம்பர், 2019

29.06.2014 ஐயப்பன் புலி வாகனனா?

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் புலி வாகனனா?


2014ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி 110நாட்கள் பாதயாத்திரை.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் 20 யாத்திரிகர்களை உடன் அழைத்துச் சென்றார்.  இந்தப் புனிதமான பாதயாத்திரையில் கலந்துகொண்ட சில யாத்திரிகர்கள் ஐயப்பகுருசாமிமார்கள்.  எங்களை யெல்லாம் பாதயாத்திரையாகக் காசிக்கு அழைத்துச் சென்ற குருசாமி பச்சைக்காவடி அவர்களும் ஐயப்பகுருசாமி ஆவார்.  ஆனால் எனக்குத்தான் 57 வயதாகியும் ஐயப்பனை ஒரு முறையேனும் தரிசிக்கும் பேறு கிடைக்கவில்லை.

காசி பாயாத்திரையில் வழிநெடுகிலும் பல ஐயப்பன் கோயில்களில் தங்கும் பேறு பெற்றோம்.  அதிலும் குறிப்பாக பெங்களூரு எலகங்கா ஐயப்பன் கோயிலில் 28 & 29.06.2014 இரண்டு நாட்கள் தங்கும் பெரும் பேறு பெற்றோம்.

அப்போது அங்கிருந்த ஐயப்பன் படத்தைக் காட்டி "புலி வாகனன் " என்றனர்.  மஹிஷியை வதம் செய்தார் ஐயப்பன்.. அவருக்கு நன்றி செய்யும் பொருட்டுத் தேவேந்திரனே புலியாக உருமாறி, ஐயப்பனுக்கு வாகனமானார்.
சுவாமி ஸ்ரீஐயப்பன் சரிதம் இதை விரிவாகச் சொல்கிறது என்றனர்.

என்னிடம் கேட்டால்?!

தாயின் உடல்நலனுக்காகப் புலிப்பால் கொண்டுவரக் கானகத்துள் செல்கிறார் ஐயப்பன்.  "புலிப்பால்"  வேண்டும் என்றால், குட்டி போட்ட புலி வேண்டும்.  குட்டி போட்டுள்ள எந்தவொரு மிருகமும் வேறெந்த  மிருகத்தையும்  அருகில் அண்ட விடாது.  குட்டி போட்டுப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்புலியின் அருகில் யாரேனும் செல்லமுடியுமா?

ஸ்ரீ தர்மசாஸ்தா சென்றார்.  புலிப்பால் வேண்டிக் குட்டிபோட்டுப் பால்கொடுக்கும் பெண்புலியை அழைத்துவந்தார்.

ஆனால் குட்டி போட்டுப் பால்கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்புலிமேல் யாரேனும் சவாரி செய்வார்களா?
தானமாகப் பால்கொடுக்க முன்வந்த பெண்புலிமேல் சவாரி செய்வது தர்மம் ஆகுமோ?
வாயில்லா ஜீவனை வதைத்திடுவார்களோ?
தர்மசாஸ்தா இத்தகைய அதர்மத்தைச் செய்வாரோ?

எனவே என்னிடம் கேட்டால் .....
1) ஐயப்பன் சொல்லுக்குப் புலி அடங்கி நடக்கும் என்பதே சரியாகலாம் !
2) ஐயப்பன் பால் கொடுக்கும் பெண்புலி மேல் ஏறி வந்தான் என்பதும், ஐயப்பனை "புலி வாகனன்" என்பதும் தவறாகலாம் !
3)படத்தில் புலியுடன் அதன்  குட்டிகளைக் காட்டுவது சரியாகலாம் !
4) படத்தில் ஐயப்பனுடன் பல புலிகளைக் காட்டுவது தவறாகலாம் !
5) அல்லது புலிப்பாலைத் தானமாகக் கொடுக்க முன்வந்த பெண்புலியின் ஜோடிப்புலியான ஆண்புலியின் மீது ஐயப்பன் ஏறி வந்தார் என்பது சரியாகலாம் .

எனது கருத்து சரியா ....?
“குட்டிபோட்டுப் பால்கொடுத்துக் கொண்டிருந்த பெண்புலியை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறி ஸ்ரீ ஐயப்பன் வந்தானா?” என்ற  எனது இந்த ஐயத்தை, ஸ்ரீதர்மசாஸ்தாவின் வரலாற்றை நன்கு அறிந்த  ஐயப்பசுவாமிகள் யாரேனும்  நீக்கி அருள வேண்டுகிறேன்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனின் திருவடி தரிசனம் வேண்டி,
https://groups.google.com/forum/#!topic/thiruppuvanam/bFMRHvFPO7U

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 1 (17112019) ஞாயிற்றுக் கிழமை.
---------------------------------------
புராண விளக்கம் -
எனது இந்தப் பதிவை வாட்ஸ்ஆப் செய்தி வழியாக அறிந்த நண்பர் காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு 29.06.2020 அன்று விளக்கம் அளித்தார்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் வாகனமாக உள்ளது பெண்புலி அல்ல என்றும்,  மஹிஷியை வதம் செய்தவுடன் இந்திரன் தலைமையிலான தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஸ்ரீ ஐயப்பனைக் கண்டு வழிபட்டனராம்.  அப்போது தேவர்தலைவனான இந்திரனே புலியாகமாறி ஸ்ரீ ஐயப்பனுக்கு வாகனம் ஆகியுள்ளார்.   தேவர் பலரும் புலியாக மாறி உடன் வந்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் பெண்புலியாக மாறிப் புலிப்பால் கொடுக்க வந்துள்ளார்.  இதுவே புராணம் கூறும் கருத்து ஆகும். எனவே  குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பெண்புலியை ஸ்ரீ ஐயப்பன் வாகனமாகப் பயன்படுத்தவில்லை என்ற விளக்கத்தை அளித்தார்.

நீண்ட காலமாக என் மனதில் நிலைத்திருந்த ஐயத்தைப் போக்கிய காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆனி 16 (30.06.2020) செவ்வாய்க் கிழமை.
---------------------------------------