ஞாயிறு, 31 மே, 2020

30.05.2014, 31.05.2014 காசி யாத்திரை (5ஆம் நாள் மற்றும் 6ஆம் நாள்)

காசி யாத்திரை (நாள் 5) 
வைகாசி 16 (30.05.2014) வெள்ளிக் கிழமை  

சின்னக்கீரமங்கலத்தில் இருந்து புறப்பட்டு புளியால் வழியாகத் தேவகோட்டை வந்து சேர்ந்தோம். சுமார் 21 கி.மீ. பயணம்.
வழியில் ரொட்டி தேநீர்,
புளியாலைக் கடந்து சாலையோரம் இருந்த கோயில் வளாகத்தில் காலை உணவு.
நல்ல வெயில்.



அந்த வேகாத வெயிலில், ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் தேவகாட்டையின் எல்லையில் வந்து நின்று யாத்திரிகளை வரவேற்றார்.  யாத்திரிகர் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.  என்னைப் பார்த்ததும் “வாங்க, திருப்பூவணம் ” என்று மகிழ்ந்து கூறி வரவேற்றார்.  ஜமீன்தார் அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையும் உபசரிப்பும் எங்களுக்குப் பெருமை சேர்த்தது, மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

தேவகோட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் தர்ம பரிபாலன சங்கத்தில் தங்கினோம்.  மதிய உணவு.  ஓய்வு.

நாட்டுக் கோட்டை நகரத்தார் பெருமக்கள் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.  திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் துணைத் தலைவரான திரு. பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஆச்சி அவர்களுடன் வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள்.

https://goo.gl/maps/BBDEWi1XJ7cD2gYi8
--------------------------------------------------

காசி யாத்திரை (நாள் 6)
வைகாசி 17 (31.05.2014) சனிக்கிழமை, 
இன்று யாத்திரை பயணம் ஓய்வு நாள்.
தேவகோட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் தர்ம பரிபாலன சங்கத்திலேயே  தங்கி இருந்தோம்.

இன்றும், நாட்டுக் கோட்டை நகரத்தார் பெருமக்கள் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.  திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையில் தலைவரான பேராசிரியர் இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்களும் வந்திருந்து ஆசி பெற்றார். பயணத்தின்போது களைப்பு ஏற்பட்டாமல் இருக்கச் சில மந்திரங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்து அடியேனையும் வாழ்த்தி யருளினார்.

இன்று ஓய்வு நாள் என்பதால், யாத்திரிகர்களில் சிலர் அவரவர் துணிகளைத் துவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டனர்.  

யாத்திரை பயணத் திட்டம் செய்தி அனுப்புதல் -
எங்களில் சிலருக்கு மட்டும் நேற்றும் இன்றும் என இரண்டுநாட்களும் நாள்முழுவதும் வேலை யிருந்தது.  குருசாமி அவர்கள், யாத்திரையின் போது தங்கும் இடங்களில் உள்ள அடியார்கள், அந்த ஊர்த் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மற்றும் உபயதாரர்கள் என அனைவரது முகவரிகளையும் தட்டச்சு செய்து நகல் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.   அத்துடன் தமிழ், தெலுங்கு, கர்நாடகா, இந்தி, ஆங்கிலம் முதலான மொழிகளில் பயணத்திட்டத்தையும் அச்சடித்துக் கொண்டு வந்திருந்தார்.
அந்தந்த முகவரிகளுக்கு உரிய மொழியில் உள்ள பயணத்திட்ட அறிவிப்பை பச்சைவர்ண உறையில் வைத்து, ஒட்டி, தபால்தலையும் ஒட்டி, அந்தக் கடிதங்களை மாநிலம் வாரியாகவும், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியகவும் பிரித்து அடுக்கினோம்.   இந்தப் பணி முடிந்த பின்னர், குருசாமி அவர்கள் அன்பர் ஒருவரிடம் இவற்றைச் சேர்த்து தபால்நிலையத்தில் சேர்க்கச் சொல்லி ஒப்படைத்தார்.

மாலைநேர வழிபாடு, ரொட்டி தேநீர், 
வழிபாடு, இரவு உணவு.
ஓய்வு.

5 மற்றும் 6 ஆம் நாட்கள் - எனது அனுபவம்
நான் இதுபோன்று நடந்து பழக்கம் இல்லாத காரணத்தினால், எனக்கு மிகுந்த அசதியாக இருந்தது.  ஜமீன்தார் அவர்கள் என்னை ஆசிர்வதித்ததும், ஐயா பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஆச்சி அவர்களுடன் வந்திருந்து என்னை ஆசீர்வதித்துச் சென்றதும்,  ஐயா இராம. திண்ணப்பன் அவர்கள் வந்து பார்த்து ஆசிவழங்கிச் சென்றதும் மட்டுமே எனக்குத் தெம்பாக இருந்தது.  மற்றபடி நான் எனது உடலால் மிகவும் சோர்ந்து போய் விட்டேன்.
------------------------------------------------------------------
யாத்திரை தொடரும் .... ....


சனி, 30 மே, 2020

29.05.2014 காசி யாத்திரை - 4ஆம் நாள்

காசி யாத்திரை ( 29.05.2014 - 4ஆம் நாள்) 
வைகாசி 15 (29.05.2014) வியாழக்கிழமை.

தேவிபட்டிணத்தில் அதிகாலை 3மணிக்கெல்லாம் பலரும் எழுந்து பயணத்திற்குத் தயாரானார்கள். சிலர் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்தார்கள்.   வழக்கமான நித்திய வழிபாடு முடிந்தவுடன், ஹார்லிக்ஸ் பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு யாத்திரிகர்கள் நடக்கத் தொடக்கினோம்.  மழை வரலாம் என்று கருதி அனைவரும் கையில் குடை எடுத்துக் கொண்டனர்.  வழியில் மங்கலம் அருகே காலை நேரத் தேனீர் அருந்தினோம்.  சனவேலி அருகே காலை உணவு உண்டோம்.  சனவேலியைக் கடந்து, சாலையோரம் உள்ள ஐயப்பன் கோயிலில் தங்கினோம்.  ( கோயில் இருப்பிடம் = MVQC+42 Sanaveli, Tamil Nadu) .  கோயிலில் மின்சார மோட்டார் போட்டுவிட்டார்கள்.  சில யாத்திரிகர்கள் குளித்தோம்.  ஆனால் உப்புத் தண்ணியாக இருந்தது.  


காலை மணி 10.30 அளவில் கோட்டக்கரை ஆற்றைக் கடந்து நடந்து வந்து கொண்டிருந்தோம்.  நல்ல வெயில்.  

மதியம் சாப்பாடு.
மதியம் சாப்பாட்டிற்குப் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாடானை கைகாட்டியை நோக்கி நடக்கத் தொடக்கத் தொடங்கினோம்.  மாலைநேரத்தில் அருமையாகக் காற்று வீசியது. நானும் சிவாப்பாவும் கடைசியாக நடந்து வந்துகொண்டிருந்தோம்.  எங்களுக்கும் பின்னால் குருசாமி அவர்களும் திரு. அங்கமுத்து சாமியும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.  எங்களுக்கு முன்னால் நடந்து சென்ற அனைவரும் கைகாட்டியில் உள்ள ஒரு கடைக்கு அருகே எங்களுக்காக் காத்திருந்தனர். நாங்கள் கைகாட்டிக்கு வரும்போது மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது.  கைகாட்டியில் உள்ள மருந்துக்கடையில் சில யாத்திரிகர்கள் மாத்திரைகள் வாங்கிக் கொண்டனர்.

கைகாட்டியைக் கடந்து சாலையின் கிழக்குப் பகுதியில் ஊரணி (ஊரணி இருப்பிடம் = https://goo.gl/maps/dbzX2UkU3wbsubXbA) அருகே பெட்ரோல் பங்க் இருந்தது.  அதன் எதிரே உள்ள வீட்டில் தங்கினோம்.  சில யாத்திரிகர்கள் ஊரணியில் குளித்துவிட்டு வந்தனர்.   வீட்டில் இருந்தவர்கள் குருசாமியைக் கும்பிட்டு விபூதி வாங்கிக் கொண்டார்கள்.  

இரவு உணவு.  குருசாமி அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களையும் அழைத்து இரவு உணவில் கலந்து கொள்ளச் செய்தார். 
கடந்த ஆண்டு குருசாமி இங்கு வந்து தங்கியபோது,  குருசாமி அவர்களுக்கு அருளிச் செய்தவாறு எதிர்பாராத வகையில் விசேஷம் நடைபெற்றது  என்று குருசாமியிடம் கூறிக் கொண்டிருந்தனர்.   

எனக்கு மிகவும் அசதியாக இருந்த காரணத்தினால் வீட்டின் மொட்டை மாடிக்குத் தூக்கச் சென்று விட்டேன்.  நாங்கள் தங்கியிருந்த வீடு சிறியது.  அதன் மொட்டை மாடியில் சிலரும், கீழே சிலரும் தங்கினோம்.  கடுமையான வெயில் காரணமாக மொட்டைமாடி அதிகச் சுடாக இருந்தது.  வெகுநேரம் ஆன பின்பே எனக்குத் தூக்கம் வந்தது.


https://goo.gl/maps/hvdgNhV8E1xQn728A
இன்றைய பயணம் தேவிபட்டிணத்திலிருந்து புறப்பட்டு சனவேலி வழியாகத் திருவாடானை கைகாட்டி அருகே உள்ள சின்னக்கீரமங்கலம் வந்து தங்குதல். சுமார் 36 கி.மீ.

4ஆம் நாள் - எனது அனுபவம் -  யாத்திரை புறப்பட்ட முதல்நாள் நல்ல வெயில், எனது உடலில் இருந்த தெம்பு தீர்ந்து போனது.  இரண்டாம் நாள் நல்லமழை, எனது உடலில் இருந்த தினாவெட்டு தீர்ந்து போனது.
மூன்றாம் நாள் நல்லவெயிலில் சுமார் 33 கி.மீ. நடைப் பயணம், மிகவும் சோர்ந்து தொத்தமாடு மாதிரி நடந்து வந்தேன்.   சிவாப்பாவுக்குச் செருப்புக்கடியால் நடக்கமுடியாமல் சிரமம்,  அதனால் மெதுவாக என்னுடன் நடந்து வந்தார்.  இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிக் கொண்டே நடந்து வந்தோம்.  எங்களுக்குப் பின்னால் குருசாமி நடந்து வந்து கொண்டிருந்தார்.  குருசாமி எங்களுக்குப் பின்னால் நடந்து வருவது மட்டுமே எங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தது.  நான்காம் நாளான இன்றும் 36கி.மீ. பயணம்.  எனது உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து விட்டன.  மொட்டைமாடியில் அசந்து படுத்தாலும் கடுமையான வெக்கை.  தூக்கம் முழுமையாக இல்லாமல் போனது.  உடலும் உள்ளமும் சோர்வடைந்த நிலையில், காசிக்கு நடக்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே எனது நடைப்பணயத்திற்குத் துணையாய் இருந்தது.  அப்படியே தூங்கிப் போனேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

26.05.2014 காசி யாத்திரை முதல்நாள் - மூத்தவருடன் என் முதல் அனுபவம் -

26.05.2014 காசி யாத்திரை முதல்நாள் 
மூத்தவருடன் என் முதல் அனுபவம் 

குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு 1ஆம் எண்.  யாத்திரிகர்களில் மிகவும் மூத்தவரான திரு. மதுரை திரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு 2ஆம் எண். இப்படியாக வயதுமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, மிகவும் இளையவரான ஆந்திரா திரு.சிவாப்பா அவர்களுக்கு 21 ஆம் எண்.  அடியேனுக்கு 18ஆம் எண்.  யாத்திரிகர் அனைவரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு 25.05.2014 அன்று இராமேசுவரம் சென்று சேர்ந்தோம். 26.05.2014 அன்று காலையில் இராமேசுவரத்தில் தீர்த்தமாடி முடித்து வழிபாடு செய்துவிட்டு மடத்தில் வந்து தங்கியிருந்தோம்.  என்னை வழியனுப்ப வந்திருந்த எனது உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.  
அப்போது அருகில் அமர்ந்திருந்த ஐயா கந்தசாமி அவர்கள் அவரது அலைபேசியைப் பிரித்துப் பிரித்து மாட்டிக் கொண்டிருந்தார். மிகவும் கவலையாகக் காணப்பட்டார்.  அவரது முக வாட்டத்தைக் கண்டு பொறுக்க மாட்டாமல், அவரருகில் சென்று என்னவென்று விசாரித்தேன்.  அவரது மகன் அவரைக் கூப்பிட்டுப் பேசினாராம்.  ஆனால் இவரால் அவரது மகனைத் திரும்பிக் கூப்பிட்டுப் பேச இயலவில்லையாம்.  மிகவும் வருத்தமாகக் கூறினார். 

அவரது அலைபேசியை வாங்கி என்ன என்று பார்த்தேன். 
அது மிகவும் பழையது.  பிய்ந்து போன வெளியுறை. உடைந்து போன பின்பக்க மூடி.   அதில் இருந்த ஒளித்திரை (display screen) வேலை செய்யவில்லை. அதை அவரிடம் சொன்னேன்.  

அதுதான் எனக்குத் தெரியுமே.  என் மகனுடன் எப்படிப் பேசுவது? என்று கேட்டார்.  உங்களது மகனின் எண்ணைச் சொல்லுங்கள், எனது அலைபேசியிலிருந்து அழைத்துப் பேசலாம் என்று சொன்னேன்.  

அதுதான் எனக்குத் தெரியுமே.  ஆனால் எனது மகனின் அழைபேசி எண் இந்த அலைபேசியில்தானே உள்ளது.  அதைத்தானே பார்க்க முடியவில்லை என்று சொன்னார். யாத்திரை முழுதும் இதை வைத்துக் கொண்டு எப்படிச் சிரமப் படுவீர்கள்? மேற்குக் கோபுரம் அருகே செல்போன் கடை உள்ளது.  அங்கே போய் இதைச் சரி செய்யலாம் என்றேன்.  

அதுதான் எனக்குத் தெரியுமே, ஆனால் என் மகனுக்குத் தகவல் தெரிந்தால், இங்கே வந்து இதைச் சரிசெய்து கொடுத்துவிடுவான் என்றார்.  இன்னும் சிலமணி நேரத்தில் யாத்திரை ஆரம்பிக்கப் போகிறது.  எனவே இங்குள்ள கடையிலேயே இதைச் சரிசெய்து கொண்டு யாத்திரைக்குத் தயாராக வேண்டியதுதான் என்றேன்.  

அதுதான் எனக்குத் தெரியுமே, இந்த வேகாத வெயிலில் அந்தக் கடைக்கு நான் எப்படிச் செல்ல முடியும் என்று மிகவும் வருத்தமாகச் சொன்னார். 
ம்… சரி, உங்களது செல்போனைக் கொடுங்கள், நான் அந்தக் கடைக்கு எடுத்துச் சென்று சரிசெய்து கொண்டு வந்து கொடுக்கிறேன் என்றேன்.  என்னிடம் அவரது செல்போனைக் கொடுப்பதற்கு மிகவும் யோசித்தார்.  ஐயா, நல்லபடியாகச் சரிசெய்து கொண்டு வந்து கொடுக்கிறேன், வழியில் போன்பேச முடியாமல் சிரமப்படாதீர்கள் என்று பலமுறை சொல்லி, அவரைத் திருப்திப் படுத்தி, அவரது செல்போனை வாங்கிக் கொண்டு மேற்குக் கோபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  

உச்சி வெயில், வெயில் என்றால் வெயில், அப்படியொரு வெயில்.  சும்மா வறுத்து எடுத்தது.  செல்போன் கடைக்கு வந்து சேர்ந்தேன்.  ஆனால் அந்தக் கடை பூட்டி யிருந்தது.  அருகில் உள்ள கடைக்காரரிடம் விசாரித்தேன்.  இவ்வளவுநேரம் இருந்தார், இப்போதுதான் போயிவிட்டார்.  அவரது செல்போனில் கூப்பிடுங்கள் என்று சொல்லி, கடைக்காரரின் செல்போன் நம்பர் எழுதியிருந்த இடத்தைக் காண்பித்தார்.  அந்த எண்ணில் அவரை அழைத்தேன்.  சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார்.  காத்திருந்தேன், காத்திருந்தேன்.  சுமார் 25-30 நிமிடங்கள் ஆகிவிட்டது.  வந்து சேர்ந்தார், கடையைத் திறந்தார்.  என்னிடமிருந்து அலைபேசியை வாங்கிப் பார்த்தார்.  டிஸ்பிலே புதிதாகத்தான் மாற்ற வேண்டும் என்றார்.  பரவாயில்லை மாற்றிக் கொடுங்கள் என்றேன்.  5 நிமிடத்தில் சரி செய்து கொடுத்தார்.  அவர் கேட்ட தொகையைக் கொடுத்தேன்.  சாமி, நீங்கள் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டீர்கள். எனவே இந்த போனின் உறையையும் புதிதாக மாற்றித் தருகிறேன் என்று சொன்னார்.  அந்த செல்போனுக்குப் புதிய உறை மாற்றிக் கொடுத்தார்.  எனக்கோ காலதாமதம் ஆகிவிட்டதே என்ற கவலை.  அந்த வேகாத வெயிலில் வேகவேகமாக வேர்க்க விறுவிறுக்க நடந்துவந்து விடுதியை அடைந்தேன். 
எல்லாரும் சாப்பிடுவதற்காகப் பந்தியில் உட்கார்ந்து இருந்தனர்.  

குருசாமி அரோகரா சொல்லி முடித்தபின்னர்தான் அனைவரும் சாப்பிட வேண்டும்.  மிகவும் சரியாக, நொடிப்பொழுது நேரத்தில் எனக்கான இடத்தில் போய் அமர்ந்து விட்டேன். என்னப்பா இப்படியெல்லாம் தாமதப்படுத்துகிறாய் என்று குருசாமி கோபித்துக் கொண்டார்.  ஆனால் மறுநொடியில் அரோகரா சொல்ல ஆரம்பித்துவிட்டார். வழிபாடு முடிந்து மதிய உணவும் முடிந்தது.  செல்போனைப் பெரியவரிடம் கொடுத்தேன்.  வாங்கிப் பார்த்தார், எவ்வளவு பணம் அப்பா, நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி அவரது பணப்பையை எடுத்தார்.  அதெல்லாம் பணம் வேண்டாம், உங்கள் கடைசித் தம்பி போல் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.  எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, செலவுத் தொகையை வாங்கிக் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். பலவாறு அன்பாக எடுத்துச் சொன்ன பிறகே அமைதியானர்.  

அவர் அமைதியான மறு நொடியே ஆரம்பமானது அடுத்த பிரச்சினை.  இந்த போனில் இருந்த உறை எங்கே? அதைக் கொடு என்று கேட்டார்.  அண்ணே, அந்த உறை மிகவும் பழைய உறை, கிழிந்து போய் இருந்தது, அதனால் அதையும் கடைக்காரர் மாற்றிக் கொடுத்துவிட்டார் என்றேன்.  

அதுதான் எனக்குத் தெரியுமே, ஆனால் அந்தப் பழைய உறை எனக்கு வேண்டும் என்றார்.  அண்ணே, அது எதற்கு?  அது அவசியம் வேண்டுமென்றால், மீண்டும்                 தெற்குவாசலில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டுமே என்றேன்.  ஆமாம் தம்பி, அந்தப் பழைய உறை எனக்கு அவசியம் வேண்டும், அதில் ஒரு முக்கியமான செல்போன் நம்பர் குறித்து வைத்துள்ளேன் என்றார்.

வேறு வழி, அந்தக் கொழுத்தும் வெயிலில் மீண்டும் தெற்குக்கோபுர வாசலில் இருந்து மேற்குக் கோபுர வாசலுக்கு நடந்து சென்று, கடையில்                 குப்பைக்கூடையில் கிடந்த அந்தப் பழைய கிழிந்து போன அந்தச் செல்போன் உறையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.
இதற்குள் யாத்திரிகள் அனைவரும் அன்னதான வண்டிக்கு முன் வரிசையாக நிற்க ஆரம்பித்து விட்டனர்.  நானும் கடைசி ஆளாகச் சென்று கடைசி வரிசையில் நின்று கொண்டேன்.  நல்லவேளை ஒருசில நிமிடங்கள் காலதாமதம் ஆகியிருந்தால் குருசாமி என்னைத் தேடியிருப்பார்.


திங்கள் கிழமை சுபஹோரை நேரமான மாலை மணி 3.00க்கு வழிபாடு ஆரம்பித்து குருசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் விபூதி கொடுத்தார். சுபவேளையில் காசிக்கான எங்களது பாதயாத்திரை இனிதே தொடங்கியது.
செல்போன் சரியான மகிழ்ச்சியில் அண்ணனும், அதைச் சரி செய்து கொடுத்த திருப்தியில் தம்பியும் யாத்திரையைத் தொடங்கினோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 29 மே, 2020

26.05.2014 காசி யாத்திரை முதல்நாள் என் அனுபவம் - நடையன்.

26.05.2014 காசி யாத்திரை 
முதல்நாள்  - என் அனுபவம் (நடையன்) 

26.05.2014 அன்று காசிக்கான பாதயாத்திரையானது சுபஹோரை மாலை 3.00 மணிக்குத் தொடங்கியது.  ஆனால் நான் தெற்குக் கோபுரத்திற்கும் மேற்குக் கோபுரத்திற்கும் அந்த வேகாத வெயிலில் நடந்ததையும் சேர்த்துக் கொண்டால்,  காசிக்கான எனது பாதயாத்திரை சுபஹோரை யான நன்பகல் 12.00 மணிக்கே தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும்.

வீடு உண்டு அலுவலகம் உண்டு என்றிருப்பேன்.  அலுவலுகத்தில் எனக்குக் குளிர்சாதனவசதி இருந்தது.  எனவே வெயிலின் கொடூரம் என்றால் என்ன வென்றே தெரியாமலேயே இருந்தேன்.  இந்த யாத்திரையின் முதல்நாளே என்னை வெயில் வறுத்து எடுத்து விட்டது.  யாத்திரையானது மதியம் 3மணிக்குத் துவங்கும்போது,  மேற்கே சூரியன் சுட்டெரித்தது.  அந்த வெயிலில்தான் தெற்குக் கோபுர வாயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கி இலட்சுமணதீர்த்தம் வந்து சேர்ந்தோம்.  இப்போது வெயிலின் கொடுமை குறைந்து விட்டது.  அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

நடையன் - 
இலட்சுமண தீர்த்தத்தில் இருந்து தங்கச்சிமடத்திற்குப் பயணமாகத் தயார் ஆனோம். அப்போது குருசாமி என்னை அழைத்துச் சாலையோரம் உடைந்து சிதறிக் கிடந்த பீர்பாட்டில்களின் கண்ணாடித் துண்களைக் காண்பித்தார். குருசாமி என்ன சொல்லவருகிறார் என்பது எனக்குப் புரிந்து விட்டது.  புரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், நீங்கள் சொல்வதே சரி என்பதுபோன்று எனது தலையை ஆட்டிக் கொண்டு குருசாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்கத் தொடங்கினேன். 


எனது கால்கள் நடந்து கொண்டிருந்தாலும், எனது மனம் குருசாமி அவர்கள் அன்று சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தது.  வைகாசி 6 (20.05.2014) செவ்வாய்க் கிழமை யன்று, முதன்முதலாகக் குருசாமி அவர்களை நான் சந்தித்தபோது யாத்திரையில் நானும் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.  அப்போது அவர் என்னிடம், யாத்திரையின் போது அவசியம் நடையன் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.  எனக்குக் குருசாமி என்ன சொல்லுகிறார் என்று விளங்கவில்லை.  நடையன் என்றால் என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை.  இருந்தாலும், குருசாமி என்ன சொன்னாலும் சரியே என்ற எண்ணத்தில், சரி யென்று தலையாட்டி வைத்தேன்.  

நடையன் என்றால் என்ன? என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், செருப்பு அல்லது காலணி என்று சொல்ல மாட்டார்கள், நடையன் என்று சொல்லுவார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அதாவது யாத்திரையின்போது அவசியம் செருப்புப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.  புராணத்தில் பாதுகை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


புனிதமான பாதயாத்திரையின் போது நடையன் ஏன் அவசியம் போட வேண்டும்?    பண்டைய காலத்திலேயே பாதயாத்திரையின் போது, மரத்தினால் ஆன நடையனைப் பயன்படுத்தியுள்ளனர்.  நடையன் அணிந்துள்ளபடி  சிற்பம் ஒன்று ஆவுடையார்கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.  காளையார்கோயிலுக்குச் சித்தமூர்த்தியாகச் சிவபெருமான் எழுந்தருளியபோது, சிவபெருமான் தந்தப்பாதுகை அணிந்து வந்ததாகக் காளையார்கோயில் புராணம் குறிப்பிடுகிறது.


விரதம் இருந்தும், வேண்டுதலுக்காவும் பழனி திருச்செந்தூர் திருத்தணி முதலான திருத்தலங்களுக்குப் பாதயாத்திரை செல்வோர் நடையன் அணிந்து கொள்வதில்லை.  ஆனால் இந்தப் பாதயாத்திரை அனைத்தும் 10 அல்லது 20 நாட்களில் முடிந்து விடும்.  மேலும் இதுபோன்ற பாதயாத்திரை நாட்களில் அடியார்கள் கூட்டங்கூட்டமாகப் பெரும் எண்ணிக்கையில் நடந்து செல்வார்கள்.  எனவே சாலையோரம் எந்தவொரு கண்ணாடியோ முள்ளோ கிடக்காது.  அப்படியே கிடந்தாலும் அவற்றை அடியார்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள்.  எனவே காலில் கண்ணாடியோ முள்ளோ குத்தும் என்பதற்கான வாய்ப்பே இல்லை.

ஆனால் இராமேசுவரம் காசி பாதயாத்திரைப் பயணத்தில், காசிக்குச் செல்லும் (NH 7) தேசிய நெடுஞ்சாலையில் காசிக்குப் பாதயாத்திரை செல்பவர்கள் மட்டுமே நடந்து செல்வார்கள்.  அருகில் இருக்கும் கிராமத்தினர்கூட  மிதிவண்டியிலோ இருசக்கர வாகனத்திலோதான் செல்வார்கள்.  காசி பாதயாத்திரையின் போது நடையன் அவசியம் அணிந்து கொண்டு நடப்பதே தற்காப்பு ஆகும் என்று குருசாமி அவர்கள் கூறியுள்ளார் என்பதையும் அறிந்து கொண்டேன்.  

தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களும், மற்றும் பிற வாகன ஓட்டுநர்களும் வண்டியில் இருந்தபடியே பீர் குடித்துவிட்டு, அந்தப் பாட்டில்களைச் சாலையோரும் தூக்கிப்போட்டு விடுகின்றனர்.  அது சாலையோரம் பரவிக் கிடக்கிறது.  இராமேசுவரம் தொடங்கி, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய தென்மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் சாலையோரம் பீர்பாட்டில்கள் உடைந்து கிடப்பதை இந்தப் பாதயாத்திரையின் போது பார்த்தேன்.  மத்தியப்பிரதேசம் உத்திரப் பிரதேசம் ஆகியமாநிலங்களில் இவற்றைக் காண இயலவில்லை.(ஒருவேளை இந்த மாநிலங்களில் உள்ளவர்கள் பீர் பழக்கத்திற்கு அடிமையாகமல், பீடா பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பது காரணமாக இருக்கலாம்)

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் அவரவர் கால் அளவிற்கு ஏற்ப 5 ஜோடி நடையன்களை வாங்கி யாத்திரையின்போது இலவசமாகக் கொடுத்தார். கூடுதலான நடையன்களை இருப்பில் வைத்திருந்தார்.  தேவைப்பட்டால் அவற்றை எடுத்துக் கொடுப்பார்.  நடையன் தேய்ந்து போனாலோ, பிய்ந்து போனாலோ அவரவருக்கு வழங்கப்பட்ட புதிய நடையனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

நடையன் மட்டுமல்ல, குடை, தொப்பி, தண்ணீர்ப்பாட்டில்,  பிரம்பு, டார்ச்லைட், போர்வை, ஜமுக்காளம், பற்பசை, பிரஸ், குளியல்சோப்பு, துணிதுவைக்கும் சோப்பு, தேங்காய் எண்ணை, கொசுவர்த்தி, கொசுவலை, கொடிக் கயிறு, சொக்காய்(சட்டை), வேட்டி, துண்டு என யாத்திரைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்குவார்.

காசி பாதயாத்திரைக்கு நடையன் மிகவும் முக்கியமானது, நடையன் இல்லாத நடைப்பயணம் ஆபத்தானது என்பதை அறிந்து கொண்டேன்.  ஆனால் நடையனால் ஒருவருக்குத் துன்பம் உண்டானது.  அந்தக் கதையையும் சொல்கிறேன்……

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

28.05.2014 - காசி யாத்திரை (3ஆம் நாள்)

28.05.2014 - காசி யாத்திரை (3ஆம் நாள்) 



இன்றைய பயணம் சுமார் 33 கி.மீ.
பிரப்பன்வலசை பாம்பன்சுவாமிகளின் முருகன்கோயிலில் இருந்து புறப்பட்டு உச்சிப்புளி வழியாக, பனைக்குளம் ஆத்மசாந்தி நிலையம் வந்து சேர்ந்தோம்.   ஆத்மசாந்திநிலையத்தின் பொறுப்பாளர் அம்மா அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
காலை உணவு.  ஓய்வு. 

https://goo.gl/maps/GJKsYxAAMF1dFRkS9

ஆத்மசாந்தி நிலையத்திற்குள்ளே அன்னதானவண்டி  நுழையும் போது தரையில் போடப்பட்டிருந்த சிறிய சிமிண்ட் ஸ்லாப் ஒன்று உடைந்து போனது.  அதைப் புதிதாக மாற்றுவதற்கான செலவுத் தொகையைக் குருசாமி அவர்கள் ஆத்மசாந்தி நிலையத்தை நிருவகித்த அம்மா அவர்களிடம் கொடுத்தார்.  இதை நாங்களே சரி செய்து கொள்கிறோம், பணம் வேண்டாம் என்று அம்மா அவர்கள் கூறினார்.  இருந்தபோதும், செலவிற்கான தொகையைக் குருசாமி அவர்கள் கொடுத்துவிட்டார்.




மதிய உணவிற்குப் பின் தேவிபட்டினத்திற்கு நடக்கத் தொடக்கினோம்.  பாதைகளில் பனைமரங்கள் நிறைந்து இருந்தன.  அமைதியான கிராமங்கள் ஆங்காங்கே இருந்தன.

கால் புண்ணும், கண் மருந்தும்
திரு. சிவாப்பா (எண் 21) அவர்கள் காலில் செருப்புப் போடும் பழக்கம் இல்லாதவர்.  அவர் எப்போதும் வெறும் காலுடன் நடப்பவர்.  ஆனால் இந்த யாத்திரையில் சாலையோரங்களில் கண்ணாடித் துண்டுகள் அதிகம் கிடக்கின்ற காரணத்தினால், யாத்திரிகர் அனைவரும் அவசியம் நடையன் (செருப்பு) அணிந்து கொள்ள வேண்டும் என்பது குருசாமியின் கட்டளை.  எனவே சிவப்பாவும் நடையன் போட்டுக் கொண்டு நடந்தார்.  இதனால், இரண்டு நாட்களாக அவருடைய கால்பெருவிரல் இடுக்கில் தோல் உரிந்து புண் உண்டாகி யிருந்தது.  இன்றைய பயணத்தில் நடையன் போட்டுக் கொண்டு நடக்கும் போது வலியால் மிகவும் வருந்தினார்.  கிராமப்புறச் சாலைகளில் கண்ணாடித் துண்டுகள் கிடக்கவில்லை.  எனவே இன்றையதினம் நடையனை இடது கையில் பிடித்தபடி வெறும் காலுடன் நடந்தார்.    தார்ச்சாலைகளில் மட்டும் நடையனைப் போட்டுக் கொண்டார்.  மாலை 6.30 மணி அளவில் தேவிபட்டிணத்தில் உள்ள நகரத்தார் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.  ஊரில் எல்லையில் இருந்த ஊருணியில் யாத்திரிகர்கள் சிலர் குளித்துவிட்டு விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.   

“மெட்ராஸ் ஐ” என்று சொல்லப்படும் கண்நோய்க்குப் போடப்படும் பிதுக்கு மருந்தைக் கால்ப் புண்ணுக்குப் போடும்படிக் குருசாமி அவர்கள் சிவாப்பாவிடம் கொடுத்தார்.  கண்மருந்து எப்படிக் கால் புண்ணுக்குச் சரியாகும்? என்று எனக்கு ஏகப்பட்ட ஐயங்கள்.  ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் சிவாப்பாவின் கால்புண் முற்றிலும் குணமாகிவிட்டது.  அவர் நடையனைப் போட்டுக் கொண்டு அருமையாக நடப்பதைக் கண்டதும் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

தேவிபட்டிணத்தில் நகரத்தார் விடுதிக்கு,  எங்களுக்கு முன்னதாகவே அன்னதான வண்டியில் வந்து சமையலை முடித்து வைத்திருந்தனர்.  
இரவு உணவு.
தங்கல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 28 மே, 2020

27.05.2014 - காசி யாத்திரை ( 2ஆம் நாள்)

காசி யாத்திரை ( 27.05.2014 - 2ஆம் நாள்)

             தங்கச்சி மடம் முருகன் கோயிலில், அதிகாலை 3.30 மணிக்கு அனைவரும் எழுந்து யாத்திரைக்குத் தயார் ஆனோம்.  விநாயகர் அகவலும், பெருமாள் போற்றியும் பாடி வழிபாட்டை முடித்துக் கொண்டவுடன், அனைவருக்கும் ஹார்லிக்ஸ் மற்றும் ரொட்டி கொடுத்தார்கள்.  4.00 அளவில் அன்னதான வண்டிக்கு முன் அனைவரும் மூன்றுமூன்று பேர்களாக வரிசையில் நின்றோம்.  குருசாமி அவர்கள் வலம்வந்து சூடம் காட்டித் தேங்காய் உடைத்து அன்றைய யாத்திரையைத் தொடக்கி வைத்தார்.   சுமார் 4.05 இருக்கும் பாம்பன் பாலம் தொடங்கும் இடத்தில் கால்வைத்ததுதான் தாமதம்.  காற்று என்றால் காற்று, சும்மா சுழன்று சுழன்று அடித்தது, ஆளையே தூக்கிச் செல்லுவது போன்று பலத்த சூரைக் காற்று வீசியது.  சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.  மழையில் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் நனைந்து விடாமல் பாதுகாப்பதே சிரமம் ஆகிப்போனது.  சட்டையைக் கழற்றிச் செல்போனைச் சுற்றிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.  சிறிது நேரத்தில் மின்வெட்டு, பாலத்தில் விளக்குகள் எரியவில்லை. முழுவதும் நனைத்தபடியே அனைவரும் பாம்பன் பாலத்தில் கும் இருட்டில் கையில் வைத்திருந்த டார்ச்லைட் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தோம்.  மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.  பாலத்தில் ஓரத்தில் நடைபாதையில் நடந்து சென்றால், ஆங்காங்கே நடைபாதையில் இருந்த சிமிண்ட் ஸ்லாப்களை அகற்றி வைத்திருந்தனர்.  எனவே நடைபாதையில் நடப்பது மிகவும் ஆபத்தாக இருந்தது.  சாலையில் அப்போதைக்கு அப்போது சில வண்டிகள் வேகமாகச் சென்றன.



      ஒரு இருசக்கர வாகனத்தில் (பைக்கில்) சென்ற இருவர், யாத்திரிகர் ஒருவர் மீது மோதும்அளவிற்கு மிகவும் அருகே சென்று, நல்லவேளையாக விலகி விரைந்து சென்று விட்டனர்.   வாகனங்கள் கடந்து செல்லும்போது சாலையிலிருந்த தண்ணீர் எல்லாம் யாத்திரிகர்மேல் அள்ளி இறைத்துச் சென்றன.   சிறிது நேரம் ஆகஆக சூரிய வெளிச்சம் தெரியத் தொடங்கியது.  சரியாகப் பாம்பம் பாலத்தைக் கடந்து முடிக்கும் போது, மழையும் காற்றும் நின்று போயின.

      யாத்திரையின் முதல்நாளில் வெயிலில் வறுத்து எடுத்து, இரண்டாம்நாளில் கொட்டும் மழையில் குளிரக்குளிரக் குளிப்பாட்டி, இயற்கையானது எங்களை இராமேசுவரம் தீவில் இருந்து வழியனுப்பி வைத்தது.

     பாம்பன் பலம் முடியும் இடத்தில் இருந்த ஒரு ஐஸ் கம்பெனியில் எனக்கு முன்னால் நடந்து சென்ற யாத்திரிகர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.  அனைவரும் அவரவர் வேட்டி துண்டுகளைப் பிழிந்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

  வழியில் மண்டபம் கடலோரக் காவல்படை குடியிருப்பு அருகேயுள்ள பேருந்துநிறுத்தம் அருகே காலை உணவு சாப்பிட்டோம்.  அந்தப் பேருந்து நிறத்ததில் படுத்துக்கிடந்த ஒருவருக்குக் குருசாமிஅவர்கள் உணவு வழங்கினார்.
    காலை உணவு முடிந்தவுடன், அங்கிருந்து புறப்பட்டு பிரப்பன்வலசையில் உள்ள பாம்பன்சுவாமிகள் கோயிலுக்குச் சென்று சேர்ந்தோம்.  சுமார் 26 கி.மீ. பயணம்.

     கோயிலில் இருந்த சுவாமிகள் எங்களை வரவேற்று உபசரித்தார்.  யாத்திரிகர் சிலர் முருகன் மீது பக்திப்பாடல்களைப் பாடி வணங்கினர்.  யாத்திரிகள் அனைவரும் அன்று அங்கே கோயில் வளாகத்திலேயே தங்கினோம். அன்று மதியம் சுவையான உணவு.  சமையல்காரர்களுக்கு யாத்திரிகர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

            பாம்பன் சுவாமிகள் பற்றிய கதைகளைக் கேட்டபடி அங்கேயே அன்றைய பொழுது கழிந்தது.

 அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்,

(குறிப்பு - எனது நினைவில் இருந்ததை எழுதியுள்ளேன். கூடுதல் குறைச்சல் இருந்தால் அன்புடன் சுட்டிக்காட்டிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

புதன், 27 மே, 2020

26.05.2014 காசி பாதயாத்திரை

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை 

26.05.2014 (முதல்நாள்)


வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களுக்கு இது 11ஆவது காசி பாதயாத்திரை.  இதற்கு முன் இவர் 10முறை இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.  ஒவ்வொரு முறையும் 20 அடியார்களைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.  இதற்குக் கட்டணம் ஏதும் இவர் வாங்குவதில்லை.  உணவு உடை என அனைத்தையும்  பல உபயதாரர்களிடமிருந்து பெற்று  யாத்திரைக்குப் பயன்படுத்துகிறார்.   இந்த 2014ஆண்டில் நடைபெற்ற யாத்திரையில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அழைத்துச் சென்ற 20 யாத்திரிகர்களில் அடியேனும் ஒருவன்.


26.05.2014 அன்று  இராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு,
110 நாட்களில், 
7 மாநிலங்களைக் கடந்து,  2464 கி.மீ. நடந்து ,
12.092014 அன்று காசிமாநகர் சென்று சேர்வதாகப் பயணத் திட்டம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 19 யாத்திரிகளும்  என மொத்தம் 20 யாத்திரிகர்கள்.

திட்டமிட்டபடி,   யாத்திரையின் முதல் நாளான வைகாசி 12ஆம் நாள் (26.05.2014)  திங்கள் கிழமை, இராமேசுவரம் தெற்குக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள கண்டனூர் விடுதியிலிருந்து புறப்பட்டு காலை 6.00 மணிக்கு அக்னி தீர்த்தத்தில் (கோயில் வாயில் எதிரே உள்ள கடலில்) குறித்து மண் எடுத்தோம்.  மதிய உணவை விடுதியில் முடித்துக் கொண்டு யாத்திரைக்கான அனைத்துப் பொருட்களையும் வண்டியில் ஏற்றினோம்.  மாலை 3.30 மணிக்கு இராமேசுவரம் கிழக்கு வாயிலில் நின்று தீபம் காட்டி கோபுரத்தையும் நுழைவாயிலையும் வணங்கிக் கொண்டு காசி பாதயாத்திரிகள் நின்றோம்.  குருசாமி அவர்கள் தேங்காய்மேல் சூடம் வைத்து ஏற்றி 5 முறை யாத்திரிகர்களை வலம் வந்து சிதறுதேங்காய் உடைத்து யாத்திரிகருக்கும் மற்றும் அடியார்களுக்கும் விபூதி பிரசாதம் வழங்கினார்.  அனைவரும் கிழக்குக் கோபுர வாயிலில் இருந்து புறப்பட்டுத் தெற்குக் கோபுர வாயிலை அடைந்தோம்.  அங்கு யாத்திரிகர்களுக்குச் சமையல் செய்வதற்கென சமையல்காரர் மூவரும் இருந்தனர்.  அன்னதான வண்டியின் ஓட்டுநர் ஒருவரும் இருந்தார். 


குருசாமி யாத்திரிகர்களை வண்டியின் முன் நிறுத்தி முன்புபோல் இப்போதும் யாத்திகர்களை வலம் வந்து சிதறுகாய் உடைத்து விபூதி பிரசாதம் கொடுத்தார்.   அங்கிருந்த அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு யாத்திரையைத் தொடங்கினோம்.  மாலை 5.15 மணிக்கு ஏகாந்த நாதர் கோயில் வந்து சாமி கும்பிட்டுவிட்டு உடனே புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு தங்கச்சிமடம் அருள்மிகு முருகன் கோயில் சென்றடைந்தோம்.










தங்கச்சிமடம் மெய்யன்பர் சிலர் வந்து குருசாமியை வணங்கி யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.  இரவு பிள்ளையார் மற்றும் முருகன் வழிபாடு.  கோயில் மண்டபத்தில் இரவு தங்கினோம்.

பாதயாத்திரை தொடரும்......

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 22 மே, 2020

22/05/2016 தைலாபுரம் அறுபடைவீடு பாதயாத்திரை


அறுபடைவீடு பாதயாத்திரை 22/05/2016 தைலாபுரம் 


12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை. சுவாமிமலையில் வழிபாடு முடித்து திருத்தணிகை செல்லும் வழியில் 22.05.2016 காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் வந்து சேர்ந்தோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பழமுதிர்சோலை  திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

வைகாசி 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடந்த பயணக் குறிப்புகள் -
துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை









இன்று காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் பஞ்சவடி கோயில் எதிரே தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும், திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

மாலை 04.00 மணிக்கு யாத்திரிகர்கள் சிலர் புறப்பட்டுச் சென்ற தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து திரும்பினர்.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன். கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி. கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.
















திங்கள், 11 மே, 2020

30.05.2016 அறுபடைவீடு யாத்திரை திருத்தணியில் நிறைவு

அறுபடைவீடு யாத்திரை 
பயணக் கட்டுரை - நிறைவுப் பகுதி

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய  ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி வைகாசி – 15 (28.05.2016) சனிக் கிழமை
இன்று காலை 02.30 மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 13 கி.மீ. நடந்து காலை 07.00 மணிக்கு அரக்கோணம் சோதிநகரில் இருக்கும் குமாரராசா திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.  இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் திரு. பத்மநாபன் அவர்கள், அவருடைய நண்பர் அரக்கோணம் திரு.சோமசுந்தரம் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்.  ஆந்திராவிலிருந்து காசிஸ்ரீ சிவாப்பா அவர்களும் அவரது நண்பரும் அதிகாலையிலேயே திருத்தணிக்கு வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றனர்.  இன்று இரவு தினமணி பத்திரிக்கையின் நிருபர் வந்திருந்து பச்சைக்காவடி அவர்களைப் பேட்டி எடுத்துச் சென்றார்.

துன்முகி வைகாசி – 16 (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை


காலை மணி 05.40க்கு திருத்தணிகை சென்றடைந்தோம்.  திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.  திருத்தணிகை பரம்பரை குருக்கள் அவர்கள் நகரவிடுதிக்கு வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார்.

துன்முகி வைகாசி – 17 (30.05.2016) திங்கள் கிழமை




இன்று காலை 06.15 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்டு மலைக்கோயிலுக்குச் சென்றோம். காலை 8.00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்கு பெற்று சுவாமி தரிசனம் செய்தோம். அபிடேகத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்த மண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம். சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.
இந்த ஏற்பாடுகளை எல்லாம் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மேலும் பஞ்சாமிர்த அபிடேக காணிக்கையையும் அவர்களே செலுத்தினார்கள்.  காலை 09.30 மணிக்கு விடுதிக்குத் திரும்பி வைந்து காலை உணவு சாப்பிட்டோம். பிறகு குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரும் ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

மதியம் 12.30 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி, காசிஸ்ரீ தியாகராசன், ஓட்டுனர் ஆறுமுகம் மூவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு 01.00 மணிக்கு அன்னதான வண்டியில் திருத்தணியிலிருந்து திரும்பிப் புறப்பட்டனர். இரவு 11.00 மணிக்கு வலையபட்டியை அடைந்து வண்டியில் இருந்த சமான்களை எல்லாம் இறக்கி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர்.

திருத்தணியில் விடுதியில் இருந்த யாத்திரிகர்களும் சமையல்காரர்களும் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி தொடரி நிலையம் வந்து அங்கிருந்து 04.55 மணிக்கு புறப்பட்ட மின்வண்டியில் பயணித்து இரவு 07.30 மணிக்கு சென்னை மத்திய தொடரி நிலையத்தை அடைந்தோம். பின் அங்கிருந்து வண்டி மாறி சென்னை எழும்பூர் நிலையத்தை இரவு 08.00 மணிக்கு அடைந்தோம்.

எழும்பூர் நிலையத்தில் காசிஸ்ரீ தனசேகரன் அவர்களது மனைவி திருமதி.குமாரி அவர்கள் சாமிகளுக்கு வடை போண்டா குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்கள். இரவு பலகாரத்தை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் மருமகள் திருமதி.சாந்தி அவர்கள் கொடுத்து உபசரித்தார்கள்.
அனைவரும் சென்னை இராமேச்சுரம் விரைவு வண்டியில் காரைக்குடிக்குப் பயணித்தோம்.

துன்முகி வைகாசி – 18 (31.05.2016) செவ்வாய்க் கிழமை







காலை 05.00 மணிக்கு குருசாமி பச்சைக்க்காவடி அவர்கள் வலையபட்டியில் இருந்து அன்னதானவண்டியில் புறப்பட்டு காரைக்குடி தொடரி நிலையத்திற்கு வந்து காத்திருந்து விரைவு வண்டியில் வந்த யாத்திரிகர்களை வரவேற்று ஆசிர்வதித்தார். காரைக்குடி தொடரி நிலையத்திலிருந்து ஒரு சிற்றுந்து மூலம் யாத்திரிகர்கள் அனைவரும் புறப்பட்டு காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது இல்லத்தை அடைந்தோம். அங்கே அனைவரும் குளித்து காலைஉணவு சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு ஆலத்துப்பட்டிக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
பின்னர் வயிரவன்பட்டி வந்து வழிபாடு செய்து கொண்டு, நகரவிடுதிக்கு வந்து மதியஉணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தோம். மாலை 04.15 மணிக்கு வயிரவன்பட்டியில் இருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி வந்து அங்கு காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் வீட்டில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டோம். பிறகு பிள்ளையார்பட்டி சென்று அருள்மிகு கற்பகவிநாயகருக்கு நடந்த மாலைநேர அபிடேகத்தைப் பார்த்து சுவாமி தரிசனம் செய்து கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம்.

“வாழ்கமன்னவன்செங்கோன்மழைமுகில்
வாழ்கநான்மறைவாணவர்கணானிலம்
வாழ்கவைதிகசைவமலர்த்திரு
வாழ்கவஞ்செழுத்துண்மைநன்மந்திரம்“

அறுபடைவீடு பாதயாத்திரை இறையருளால் இனிதே முற்றிற்று.
ஓம் சரவணபவ.
சுபம்
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

ஆறுபடைவீடு முருகனின் திருவருள் இந்தப் பயணக்கட்டுரையைப் படித்தோருக்கும் ஆகுக.



இவண்,
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்