ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

26.05.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை, ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்

இராமேசுவரம், தங்கச்சிமடம் அருகே 
ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்


இராமேசுவரம் - காசி பாதயாத்திரை

26.05.2014 அன்று முதல்நாள் பயணம்.  மாலை நேரத்தில் இராமேசுவரம் தெற்குக் கோபுர வாயில் அருகே உள்ள கண்டனூர் நாட்டார்கள் விடுதியிலிருந்து புறப்பட்டு தங்கச்சிமடம் அருள்மிகு முருகன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

வரும் வழியில் அருள்மிகு ஏகாந்த இராமசாமி கோயிலின் தீர்த்தத்தை அருந்தி இறைவனை வழிபட்டோம்.












ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்,  துளசிதாஸ் ஸ்தாபனா சிவலிங்கம். 
கோயிலின் உள்ளே உள்ள அமிர்தவாபி தீர்த்தம்   சிறப்புடையது.  இந்த் தீர்த்தம்   தேவர்களுக்காகவும், வானவீரர்களுக்கும் ஸ்ரீராமரால் , கோயில் உள்ளே உண்டாக்கப்பட்டுள்ளது தான் அமிர்தவாபி தீர்த்தம்.  இது அமிர்தத்துவமானது. இந்த புண்ணிய தீர்த்தத்தை பார்த்தாலும், பருகினாலும் ஆயுள் அபிவிருத்தியும் வளமான வாழ்க்கையும் அமையும்.

https://goo.gl/maps/27aJzcKSAg22

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

சனி, 29 செப்டம்பர், 2018

காசி சோழிமாதா வழிபாடு

காசி சோழிமாதா வழிபாடு




காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது இராமேசுவரம் - காசி 110 நாட்கள் பாதயாத்திரையின் நிறைவாகக் காசிமாநகர் வந்து சேர்ந்தோம்.  காசியில் 10 நாட்கள் தங்கியிருந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டோம்.
20.09.2014 அன்று சோழிமாதா கோயிலுக்கு வந்து வழிபட்டோம். “சோழிபலன் உனக்கு, காசிபலன் எனக்கு” என்று கூறி சோழிகளைப் போட்டு வழிபடச் சொல்கின்றனர்.   இந்த மாதாவை வழிபட்டு எங்களது காசிமாநகரில் உள்ள தெய்வங்களின் வழிபாட்டை நிறைவு செய்து கொண்டோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 19 செப்டம்பர், 2018

காசிஸ்ரீ காளைராசன்

காசிஸ்ரீ பட்டம் பெற்றது

காசிஸ்ரீ  கி.காளைராசன்

காசிஸ்ரீ பட்டம் பெற்ற பாதயாத்திரிகர் 19.09.2014



வணக்கம்.
இன்று 19.09.2014  ஶ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தின் உதவி நிர்வாக அலுவலர் அவர்கள், குருஜி பச்சைக்காவடி அவர்களது தலையில் இராமேஸ்வரம் காசி பாத யாத்திரிகர் அனைவருக்கும் "காசி ஶ்ரீ" பட்டம் வழங்கினார்.

திருப்பூவணக் காசி, திருப்பூவணம்

திருப்பூவணக் காசி, திருப்பூவணம்

திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’

திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’

பேராசிரியர் இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்கள் நல்லாசி வழங்குகிறார்



 






“திருப்பூவணக் காசி” என்ற நூலை எழுதி 24.09.2007 திங்கள் கிழமை அன்று  திருப்பூவணம் கோயிலில் வைத்து வெளியிட்டோம்.  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நூலை வெளியிட, மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கு அருள்மிகு ஸ்ரீ ப்ரித்தியங்கிராதேவி கோயில் ஸ்ரீ ஞானசேகர சுவாமிகள் பெற்றுக் கொண்டார்கள்.

“காசியைக் கண்ணால் பார்த்ததுகூடக் கிடையாது.  திருப்பூவணக் காசி என்று எழுதி வெளியிட்டுள்ளேன். அடியேன் காசிக்குச் சென்று வழிபட அருள் செய்திட வேண்டும்”  எனத் திருப்பூவணனிடம் வேண்டிக் கொண்டேன்.   நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடிக் கொண்டிருந்தன.  2014ஆம் ஆண்டு சித்திரை வளர்பிறை பிரதோசம் அன்று திருப்பூவணத்தில் அன்னதாசம் நன்முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது.  மானாமதுரை சுவாமிஜி அவர்களும், திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர், மனிதருள் புனிதர் பேராசிரியர் இராம.திண்ணப்பன் ஐயா அவர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவர் அருகிலும் போய் நின்று கொண்டிருந்தேன்.  இருவரும் என்னை அருகில் அழைத்து அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.   அப்போது, சுவாமிஜி அவர்ளையும், ஐயா திண்ணப்பன் அவர்களையும் பணிந்து வணங்கிக் “காசிக்கு நடந்து செல்ல விரும்புகிறேன்”, எனக்கு அருளுங்கள் என வேண்டிக் கொண்டேன்.   ஐயா திண்ணப்பன் அவர்கள்,  பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் காசிக்குப் பாதயாத்திரை செல்லும் போது சொல்கிறேன்.  நீங்களும் அவருடன் காசிக்குப் போய் வாருங்கள் என அருளிச் செய்தார்கள்.

ஐயா திண்ணப்பன் அவர்கள் சொன்னபடியே, காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களுடன் தொடர்பு கொண்டு என்னையையும் அவர்களுடன் காசிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். 

24.05.2014  பொன்னமராவதி வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது வீட்டிற்குச் சென்று,
25.05.2014 அன்று பொன்னமராவதியில் வழிபாடு செய்து கொண்டு, பிள்ளையார்பட்டியில் வழிபாடு செய்து கொண்டு இராமேசுவரம் சென்று சேர்ந்தோம்.

26.05.2014 அன்று இராமேசுவரத்தில் காலையில் வழிபாடு செய்து கொண்டு, மாலை நேரத்தில் இராமேசுவரம் தெற்குக் கோபுரம் அருகில் இருந்து காசி பாதயாத்திரையைத் துவக்கினோம்.

12.09.2014 அன்று காசி மாநகர் சென்று சேர்ந்தோம்.

19.09.2014 அன்று “காசிஸ்ரீ” என்ற பட்டத்தை, அருள்மிகு காசி விசுவநாதர் ஆலய நிருவாகி எங்களுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்.

அருள்மிகு திருப்பூவணன் மின்னாள் திருவருளாலும்,
அருள்மிகு சக்குடி ஆதிமீனாட்சி உடனாய ஆதிசொக்கநாதர் திருவருளாலும்,
அருள்மிகு புலிக்கரை ஐயனார்  திருவருளாலும்,  
மற்றும் நான் வழிபடும் தெய்வங்களின் திருவருளினாலும்,
மானாமதுரை சுவாமிஜி அவர்களது நல்லாசியினாலும், 
பேராசிரியர் ஐயா திண்ணப்பன் அவர்களது நல்லாசியினாலும்,
மற்றும் நான் வழிபடும் தெய்வம் நிகர் நல்லோர்களின் ஆசியினாலும்
“காசிஸ்ரீ காளைராசன்” என்ற பட்டம் இன்று (19.09.2014) எனக்குக் கிடைத்தது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பிரயாகை (அலகாபாத்) வழிபாடு

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
....
ஆவணி 29 (14.09.2014) யாத்திரை 112 ஆம்  நாள் .
காலை மணி. 5.00 க்கு குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் யாத்திரிகர் அனைவரும் வாடகை வாகனங்களில் அலகாபாத் பயணம் ஆனோம்.

காலை 9.00 மணிக்கு பிரயாகை நகரத்தார் சத்திரத்தில் காலை உணவு .

படகில் திருவேணி சங்கமம் சென்று புனித நீராடினோம் .

கங்கையில் புதுப்புனல் வந்து கொண்டு இருந்தது.
யமுனையில் பச்சை நிறத்தில் தண்ணீர் ஓடியது .

நதிகள் ஒன்று சேரும் இடத்தில் தீர்த்தம் பிடித்தது க் கொண்டோம் .
குருஜி அனைவருக்கும் தேவையான தண்ணீர் குடுவை களை வாங்கிக் கொடுத்திருந்தார் .

யாத்திரிகர் திரு. சின்னக்கருப்பன் செட்டியார் மகன் திரு.சி. ஐயப்பன்  அவர்கள்
அலகாபாத் நகரில் வசித்து வருகிறார் .
அவர் யாத்திரிகர்களை அவரது இல்லத்திற்கு அழைத்தார் .
அவரது அழைப்பை குருஜி அவர்கள் ஏற்றுக் கொண்டார் .
யாத்திரிகர் அனைவரும் அவரது இல்லத்திற்கு சென்றோம் .

அவரது இல்லத்தின் வாயிலில் தம்பதி சமேதராக நின்று வரவேற்றனர் .

குருஜிக்கு பாதபூஜை செய்து வழிபட்டு வரவேற்றனர் .

மதிய உணவு சிறப்பாக சுவையாக இருந்தது . குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் உணவு பரிமாறினர்.

அங்கிருந்து மாலை 3.20 க்கு புறப்பட்டு இரவு 8.00 மணிக்கு காசி மாநகர் வந்து சேர்ந்தோம் .
காசியில் நல்ல மழை பெய்து தெருவில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது.

சத்திரத்தில் இரவு உணவு .

இரவு 10.40க்கு அருள்மிகு விசுவேசுவர் அர்த்தசாம வழிபாடு நிவேத்திய பிரசாதம் கொண்டு வந்து குருஜியிடம் வழங்கினார்கள்.

குருஜி அவர்கள் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்று எங்களுக்கும் அதை பகிர்ந்து அளித்தார் .

எல்லாம் அருள்மிகு காசி விசுவேசுவர் திருவருள் மேன்மை .

மெய்யப்பர் அனைவருக்கும் அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி , அன்னபூரணி , காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் சித்திப்பதாக ...

அருள்மிகு திருப்பூவணக்காசி நாதன். மற்றும் மின்னாள் திருவருளைச் சிந்தித்து ,
அன்பன்
கி.காளைராசன் .

நகரத்தார் மாண்பு, வட்டகை கூட்டம்,

நகரத்தார் மாண்பு, வட்டகை கூட்டம்

M.சூரக்குடி, காசிஸ்ரீ, கரு.சுப.சீ. மாதவன் செட்டியார் 

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் எல்லோருக்கும் பொதுவான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் 'வட்டகை கூட்டம்', அதாவது 64 ஊர் வட்டகை கூட்டம் கூட்டுவார்கள் . அப்படி கூட்டக் கூடிய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் . ஆனால் சமீபத்திய காலத்தில் அப்படி ஒரு கூட்டம் கூட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னாள் அப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மேற்படி கூட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோவிலூரில் நடைபெற்றதாகவும் அது சமயம் அனைத்து ஊர் நகரத்தார்களும் கூடியிருந்து கூட்டம் ஆரம்பிக்க இருந்த நேரம் "காக்கா வெள்ளையன் செட்டி" என்ற செட்டியார் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குதிரையில் வேகமாக வந்ததாகவும், குதிரை வேகமாக வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் நகரத்தார்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகாமையில் வந்து நிறுத்தியதில் குதிரை பிளறி நின்றதால் தூசி கிளம்பி அனைவர் மீதும் படிந்ததால் அனைவரும் கோபமாகி "வெள்ளையஞ் செட்டி நகரத்தார்களை மதிக்கவில்லை, மதிக்காமல் நடந்து கொண்டதால், அவர் நகரத்தார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அபராதம் கட்ட வேண்டும் " என்று ஒரு மனதாகத் தீர்மானம் போட்டார்களாம், ஆனால் அதற்கு வெள்ளையஞ் செட்டி ஒத்துக் கொள்ளாமல் வாதம் செய்தாராம். அவருக்கு ஆதரவாக சிலரும் வாதம் செய்தார்களாம். அப்போது நகரத்தார்கள், "ஒன்று மன்னிப்பு கேள் அல்லது அபராதம் செலுத்து. தவறினால் சாதி முறைப்படி தள்ளி வைப்போம்" என்று எச்சரித்தார்களாம். அதற்கும் ஒத்து வராததால் இறுதியில் காக்க வெள்ளையஞ் செட்டியையும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களையும் சேர்த்து சுமார் 22 புள்ளிகளை சாதி முறைப்படி தள்ளி வைப்பதாக அறிவித்து கூட்டம் முடிக்கப்பட்டதாக ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.
கோவிலூர் மடத்தில் உள்ள பழைய பதிவு ஏடுகளில் இதுபற்றிய விபரம் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

அன்று தள்ளி வைக்கப்பட்ட 22 புள்ளிகளும் நான்கு தலைமுறைகளுக்கு பிறகு இப்போது 2000 புள்ளிகளாக தேவகோட்டைக்கு பக்கத்தில் S. சொக்கநாதபுரம் குமாரவேலூர், சீனமங்களம், சண்முகநாதபட்டிணம், M.சூரக்குடி, ஏரியூர், O.புதூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் தங்களையும் "நகரத்தார்கள்தான் " என்று அறிவித்து தங்கள் திருமணங்களுக்கு நகர கோயில் மாலை சந்தனம் கிடைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக நகரத்தார்களிடம் கோரிக்கை வைத்து பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேவகோட்டையிலிருந்து வெளி வரும் மாத இதழ் "அப்பச்சி " என்ற பத்திரிகையில் மேற்படி இதழின் ஆசிரியர் அப்பச்சி சபாபதி அவர்கள் இதன் விபரங்களை மேற்படி பத்திரிகையில் விரிவாகவும் விபரமாகவும் எழுதி இருக்கிறார்கள். இதற்கு ஆதரவாக பல நகரத்தார்களிடம் இருந்து ஆதரவு கடிதம் எழுதி மேற்படி பத்திரிகையில் பதிவு செய்து வருகிறார்கள். நகரத்தார்களின் முக்கியமான பெரியவர்களை பலமுறை சந்தித்து முறையிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

நகரக் கோயில்கள் ஒன்பதற்கும் நேரில் சென்று விபரங்களைச் சொல்லி மாலை சந்தனம் கேட்டுள்ளார்கள். எல்லாக் கோயில்களிலுமே முதலில் மாத்தூர் கோயிலில் மாலை சந்தனம் பெறச் செய்யுங்கள், மற்ற கோயில்களிலும் பெறலாம் என்று சொல்லியுள்ளார்கள்.  அதன்படி சில மாதங்களுக்கு முன் மாத்தூர் கோயிலில் கூடிய கூட்டத்திற்கு தேவகோட்டை ஜமீன்தார் அவர்கள் மூலம் கோரிக்கை வைத்ததற்கு மாத்தூர் கோயில் பங்காளிகள் நாங்கள் தனித்து முடிவு எடுக்க முடியாது. எல்லோரையும் கலந்து பேசி கோவிலூர் சாமிகள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அதன்படி முடிவு செய்வோம் என்று சொல்லி உள்ளார்கள்.

காரைக்குடி பட்டுவேட்டி இராமநாதன் செட்டியார் அவர்கள், நகரத்தார்கள் வரலாற்றை ஆரம்பகாலம் முதல் தொடர்கட்டுரையாக அப்பச்சி இதழில் எழுதி வருகிறார்கள்.  அவர்கள் நகரத்தார்களின் வரலாற்று சம்பவங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.  இது சம்பந்தமாக வெளிநாடு களுக்கும் சென்று ஆதாரங்களைச் சேகரித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது .
தங்கள் முன்னர்கள் செய்த தவறுக்கு வருந்தி நகரத்தார்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவும் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.
நற்பண்புகளுக்கும் நல் நிருவாக பொறுப்புகளுக்கும் தானதருமங்களுக்கும் பெயரும் புகழும் பெற்ற சமூகமாக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் விளங்கி வருபவர்கள்.

அதற்கு எடுத்துக் காட்டாக இந்த விசயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
M.சூரக்குடி கரு.சுப.சீ. மாதவன் செட்டியார் ,
மெயின் ரோடு,
ஆலத்தூர் P.O.,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி 093630 73151
வலையபட்டி பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேஸ்வரம் காசி 11ஆவது பாதயாத்திரையில் உடன் பாதயாத்திரையாக 26.05.2014 புறப்பட்டு 12.09.2014 அன்று எல்லா சாமிகளும் நல் ஆரோக்கியத்துடன் காசி வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் கங்கையில் தீர்த்தமாடி காசி விசுவநாதரை தரிசித்த மகிழ்ச்சியுடனும் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த விஷயமாக தங்களுடன் கலந்து உரையாடல் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

---------------------------------------------

காப்பியக் கவிஞர் ஐயா மீனவன் அவர்களின் கருத்து -

காசிப் பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்து வந்துள்ள காளை அவர்களே, 

உறுதிக் கோட்டை நகரத்தாரைச் சேர்த்துக் கொள்வது பற்றிய கருத்துரையைக் கண்டேன்.  வட்டகைக் கூட்டம் 96 ஊர்க் கூட்டம் என்று கூறுவர்.  96 ஊர் என்பது இன்று 74 ஊர்களாகச் சுருங்கி விட்டது.  இவற்றைப் பின்னர்த் தொடர்ந்து வருங்கால கட்டத்தில் எழுதுகின்றேன்.  அப்படிப்பட்ட ஊர்க் கூட்டம் சமீப காலத்தில் நடத்தப்படவில்லை என்று எழுதி உள்ளீர்கள். இதுவரை மூன்று கூட்டங்கள் நடந்துள்ளன.  அனைத்துக் கூட்டங்களும் கோயிலூரில்தான் நடந்தன.  முதற் கூட்டம் நட ந்த காலம், நான் பிறப்பதற்கு முன்.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்.அதில் எடுத்த முடிவுகள்  ஒரு சிறு கையேடாக வெளி வந்தது.   அது கோயிலூர் நூலாகத்தில் நான் கண்டு
படித்துள்ளேன்.   அதில் வெளிவந்த முடிவுகள் பல எனக்குத் தெரிந்த வரையில் பின்  பற்றப்படவில்லை.   இரண்டாவது கூட்டம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் அதாவது  கோயிலூர் மடத்தின் ஒன்பதாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் இராம நாத சுவாமிகள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.  அதுவும் 3 நாள்கள் நடைபெற்றது.  அதில் எடுத்த முடிவுகளும் நூலாக அச்சாகி வந்து மேற்படி மடாலயத்தில் உள்ளது.  நான் அதில் கலந்து கொண்டு கவிதை பாடியவன்.  அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில கூட்டம் முடிந்து ஒருவாரத்திலேயே மீறப்பட்டது.  அதற்காக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அதன்பின் 12 ஆம் ஆதீனகர்த்தராக 
விளங்கிய சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் காலத்தில் நடந்தது.  அதுவும் 3 நாள்கள் நடைபெற்றது. இதுபற்றி நகரத்தார்களின் கருத்துக்களை அறிய விரும்பிய சுவாமிகள் பல ஊர் நகரத்தார் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
உறுதிக்கோட்டை நகரத்தாரை இணைப்பது பற்றிய பேச்சு அப்பொழுதுதான் வந்தது.  சுவாமிகள் அதற்கு ஆதரவு உடையவர்களாய் இருப்பினும் நகரத்தார்களின் கருத்தை  அறியப் பல நகரத்தார் சங்கங்களிலும் பேசிக் கருத்தறிய முற்பட்டார்கள்.  சில இடங்களில்  பலத்த எதிர்ப்புகளும் கிளம்பின. சுவாமிகளின் நேர்முக உதவியாளராக நான் இருந்தமையால் உடன் சென்றேன். இவ்வாறு செய்யச் சுவாமிகளுக்கு என்ன உரிமை உள்ளது என்று
கூடச் சிலர் பேசினர்.  கூட்ட நிகழ்வில் இதை ஒரு பொருளாகக் கொண்டு வந்தால் கூட்டத்தை நடைபெற விட மாட்டோம் என்றும், சிலர் சேர்க்கா விட்டால் நடத்த விட மாட்டோம் என்றும், பல பேச்சுக்கள் எழுந்தமையால் பலருடைய ஏகோபித்த கருத்தின்படி அது நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாமலேயே போயிற்று.இன்றும் பட்டுவேட்டி இராமநாதன் செட்டியார், உறுதிக் கோட்டையார் வகையைச் சார்ந்த சீனமங்கலம் சோமசுந்தரம் செட்டியார் போன்றோர், இன்னும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.  அண்மையில் மாத்தூரில் நடந்த கூட்டத்திலும்  இருவகையான கருத்துக்களால் எண்ணம் ஈடேறவில்லை என்று சீனமங்கலம் சோமசுந்தரம் செட்டியார் கூறினார்.  அவர்களைச் சேர்க்கலாம் என்பது என்போன்றார் சிலருடைய
கருத்தாகும். பலர் இக்கருத்தை எதிர்க்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

    இனி அடுத்த கூட்டம் கோயிலூரில் கூட்டப்படுமானால் சேர்ப்பை எதிர்பார்க்கலாம்.

காப்பியக் கவிஞர்-நா.மீனவன்
16 Sep 2014, 17:11
-----------------------------------------------

சனி, 15 செப்டம்பர், 2018

சங்கு இலை, வெங்கலக் குரல், இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம், பாட்டி வைத்தியம்

வெங்கல உடம்பும் , வெங்கலக் குரலும் வேண்டுமா?

சங்கு இலை, வெங்கலக் குரல், 
இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம், 
பாட்டி வைத்தியம்

சங்கு இலை

சங்கு இலை, மூலிகை
அந்தக் காலத்தில் நாடக மேடையில் ஒலிபெருக்கி இல்லாமலேயே எல்லோரும் கேட்கும் வகையில் எட்டுக்கட்டையில் பாடினார்கள். அது எப்படி அவர்களால் முடிந்தது?

சங்குஇலை, இது சளி ஆயுளுக்கும் வராமல் தடுத்து வெங்கலம் போன்ற உடம்பையும் வெங்கலக் குரலையும் அளிக்கும் அரியதொரு மூலிகையாகும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (435)
என்கிறார் திருவள்ளுவர்.

நோய் வருமுன்னே காக்க வேண்டும். வாதம் பித்தம் கபம் என்று வகைப்படுத்துவர். இதில் சளியினால் பீடிக்கப்பட்டுத் துன்பப்படுவோரே அதிகம் எனலாம். அம்மைநோய், இளம்பிள்ளைவாதம் முதலான நோய்கள் வராமல் தடுப்பதற்காக
குழந்தைகளுக்குத் நோய்த்தடுப்பு மருந்து வழங்கப்படுவதுபோல்,
சங்குஇலைச் சாற்றைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி ஆயுளுக்கும் வராது.
15 இலைகளைப் பிடுங்கி இடித்துச் சாறு எடுத்து ஒரு சங்கில் வைத்துக் கொடுக்க வேண்டும்.

3 மாதக் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையும்,
1 வயதுக்கு மேல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையும்,
1வருடம் 6 மாதம் வரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
3மாதம் முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்குத்தான் சிறந்த பலன் அளிக்கும்.
பெரிகுழந்தைகளுக்கு இது மிகுந்த பலனை அளிக்காது.

இந்த மூலிகை கண்மாய்க்கரைகளில் அதிகமாக வளர்ந்திருக்கும்.
ஒவ்வொரு கணுவிற்கும் நான்கு முற்கள் இருக்கும்.
இந்த முற்களை வைத்து இந்த மூலிகையை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

வைத்தியர்.சேவை குருசாமி.
98422 19939
திருப்பூவணம்

புதன், 12 செப்டம்பர், 2018

காசியில் வழிபடவேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?
குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .
யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.
இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .
அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.
1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11 நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .
மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

11.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை, மீசைக்கார நண்பன்

யாதும் ஊரே யாவரும் தமிழர்....

மீசைக்கார நண்பன்


இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.
109ஆவது நாள் பயணம்.
ஆவணி 26 ( 11.09.2014) வியாழக்கிழமை.

அதிகாலையில் சமோகரா என்ற ஊரிலிருந்து புறப்பட்டு சுனார் என்ற ஊரைநோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
காலை மணி 8.15 அளவில் ஆற்றின் கரையோரம் உள்ள பட்ரி (PADARI) என்ற ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.
வேகமாக நடப்போர் எல்லாம் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர். ஓரிருவர் எனக்கும் பின்னே வந்து கொண்டிருந்தனர்.

நான் நடந்து செல்வதைச் சாலையோரம் உள்ள கடையில் உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீசைக்காரர் என்னை அவரிடம் வருமாறு சைகை காட்டி அழைத்தார். நான் அவரைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தேன். உடனே அவர் எழுந்து வந்து என்னிடம் ஏதேதோ கேட்டார், ஏதேதோ சொன்னார்.

“இராமேசுவரம் - காசி பாதயாத்திரை. 109ஆவது நாள் பயணம்” என்பதை மட்டும் இந்தியில் சொன்னேன்.
அதைக் கேட்ட அவர் தனது மீசையை முறுக்கிக் காட்டி ஏதேதோ சொன்னார், ஏதேதோ கேட்டார்.
“உடல் பலமும், மனவளமும் மனிதனுக்குத்தேவை, ஆன்மிகம் வழிபாடு தேவையற்றது” எனச் சொல்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

மீசைக்கு மீசைதான் சரியாகும் என்று மனதிற் பட்டது. அதனால், எங்களுடன் பாதயாத்திரை வந்து கொண்டிருந்த காசிஸ்ரீ ‘தொப்பை’ என்ற களியபெருமாள் அவர்கள் வரும் வரை, நின்று அமைதியாக அவரது இந்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவரும் மீசையை மட்டும் முறுக்கி கொண்டே ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நண்பர் தொப்பைசாமி அவர்கள் எனது அருகில் வந்தும், அவரை அழைத்து அவரது மீசையை முறுக்கிக் காட்டச் சொன்னேன்.

தொப்பைசாமி அவரது மீசையை முறுக்கிக் காட்டியதுதான் தாமதம். அந்த மீசைக்காரர் எங்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரிதும் மகிழ்ந்து நெகிழ்ந்து ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.

எங்களைக் காசிக்கு அழைத்துச் சென்ற எங்களது குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அருகே வந்துவிட்ட காரணத்தினால் பத்ரி மீசைக்காரரிடம் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காசி இங்கிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு.

முறுக்கு மீசைக்கு இவ்வளவு மதிப்பா?






அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

திங்கள், 10 செப்டம்பர், 2018

09.09.2014, இராமேசுவரம் காசி பாதயாத்திரை

09.09.2014, ஆவணி 24, செவ்வாய் கிழமை.
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை,
107ஆவது நாள்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹனுமானா என்ற ஊரில் இருந்து புறப்பட்டோம். ஊரின் எல்லையின் உத்திரப்பிரதேசம். அதிகாலையில் விடியும் நேரம் உத்திரப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம்.
மலைத் தொடரின் அடிவாரத்தில் மோகோரை (Mahugari) என்ற ஊரில் ஆற்றின் தென்கரையில் உள்ள Dramandganj துர்கை, அனுமன் கோயிலில் தங்கி இளைப்பாறினோம்.
மாலை நேரம் இங்கிருந்து புறப்பட்டு பரோதா (Belan Baraudha), லால்கஜ் (Lalganj) ஊரிகளின் வழியாகச் செண்பத்பள்ளி என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.
நவராத்திரி விழாவிற்காக குச்சியில் வைக்கோல் சுற்றிக் களிமண்ணால் பூசித் துர்க்கை பொம்மைகள் செய்து கொண்டிருந்தனர்.






















































ஹனுமானா ஊரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மலைப் பாதையில் Bhairo Baba Mandir அருகே சென்று கொண்டிருந்த போது யாத்திரிகர்களைக் கண்டு, வண்டியை நிறுத்தி, இறங்கி வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசி பெற்றனர். 
லால்கஞ் ஊரின் எல்லையில் கோலிக்குண்டு விளையாடும் குழந்தை ஒன்றைப் பார்த்தோம்.
இங்கு ஆற்றின் அருகே சிமிண்ட் கால்வாய் கட்டி மிகப் பெரிய அளவில் நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.
https://goo.gl/maps/zF1FQJh6gnE2