காசிஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசிஸ்ரீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

19.09.2014 காசிஸ்ரீ பட்டம் பெறுதல் - காசி பாதயாத்திரை 117 ஆம் நாள், புரட்டாசி 3

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

காசிஸ்ரீ பட்டம் பெறுதல்
இன்று  117 ஆம் நாள் - புரட்டாசி 3 (19.09.2014) வெள்ளிக் கிழமை.  தினசரி காலைவழிபாட்டை முடித்து, காலை உணவு சாப்பிட்டு முடித்ததோம். சுப ஓரை நேரம் தொடங்கியதும் சுமார் 10.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு காசிதேவஸ்தான அலுவலகத்திற்குச் சென்றார்.

காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள் வெறொரு பணி காரணமாகச் சென்றிருந்தார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் அவர் பணியில் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து வந்தனர்.  மதியம் 12.30 மணி ஆகிவிட்டது.  யாத்திரிகர்கள் வந்து காத்திருப்பதைத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவித்தனர்.  அதற்கு அவர்,  யாத்திரிகர்களை மதியம் சாப்பிட்டுவிட்டு வருமாறும்,  அதற்குள் தானும் திரும்பி வந்து விடுவதாகவும் கூறினார்.  எனவே குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்ளை அழைத்துக் கொண்டு சத்திரத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் தேவஸ்தான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

‘காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள்’ மதிய உணவு நேரத்திற்குப் பின்னர் அலுவலத்திற்கு வந்திருந்தார்.  மதியம் 1.00 மணி முதல் 3.00 மணிவரை சுபஓரை நேரம் என்பதால்,  அந்த சுபஓரை நேரத்தில் குருசாமி பச்சைக்காவடி அவர்களை முதலாவதாக அழைத்துக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   
குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தொடர்ந்து  யாத்திரிகர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கு உரிய “காசிஸ்ரீ” பட்டத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.   

அந்த நிமிடத்தில் இருந்து யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு காசி விசுவநாதார், அருள்மிகு காசி விசாலாட்சி, அருள்மிகு காசி அன்னபூரணி மற்றும் காசியில் உறைந்துள்ள அனைத்துத் தெய்வங்களின் திருவருளால்  “காசிஸ்ரீ” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் ஆனோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு இது 11ஆவது பாதயாத்திரை யாகும்.  எனவே அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப் பெற்றுள்ள 10 சான்றிதழ்களையும் சரிபார்த்து, அந்தப் பத்துச் சான்றிதழ்களையும் ஒன்றாக்கி, அத்துடன் இந்த 11ஆவது பாதயாத்திரையும் சேர்த்து மொத்தமாக ஒரே சான்றிதழாகக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   இதனால் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு வழங்கிப்பெற்ற காசிஸ்ரீ சான்றிதழில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பெற்ற காசிஸ்ரீ பட்டங்கள் தொடர்பான வாசகம் இடம் பெற்றிருந்தது.

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர் அனைவரும் பெரிதும் மகிழ்ந்து, குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் முதன்மைச் செயல்அலுவலர் அவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினசரி இரவு வழிபாட்டை முடித்து, இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர்,  யாத்திரிகளும், சமையல் பணியாளர்களும், உறவினர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம்.


இரவு 8.17 மணி

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 19 செப்டம்பர், 2018

காசிஸ்ரீ காளைராசன்

காசிஸ்ரீ பட்டம் பெற்றது

காசிஸ்ரீ  கி.காளைராசன்

காசிஸ்ரீ பட்டம் பெற்ற பாதயாத்திரிகர் 19.09.2014



வணக்கம்.
இன்று 19.09.2014  ஶ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தின் உதவி நிர்வாக அலுவலர் அவர்கள், குருஜி பச்சைக்காவடி அவர்களது தலையில் இராமேஸ்வரம் காசி பாத யாத்திரிகர் அனைவருக்கும் "காசி ஶ்ரீ" பட்டம் வழங்கினார்.

திருப்பூவணக் காசி, திருப்பூவணம்

திருப்பூவணக் காசி, திருப்பூவணம்

திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’

திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’

பேராசிரியர் இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்கள் நல்லாசி வழங்குகிறார்



 






“திருப்பூவணக் காசி” என்ற நூலை எழுதி 24.09.2007 திங்கள் கிழமை அன்று  திருப்பூவணம் கோயிலில் வைத்து வெளியிட்டோம்.  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நூலை வெளியிட, மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கு அருள்மிகு ஸ்ரீ ப்ரித்தியங்கிராதேவி கோயில் ஸ்ரீ ஞானசேகர சுவாமிகள் பெற்றுக் கொண்டார்கள்.

“காசியைக் கண்ணால் பார்த்ததுகூடக் கிடையாது.  திருப்பூவணக் காசி என்று எழுதி வெளியிட்டுள்ளேன். அடியேன் காசிக்குச் சென்று வழிபட அருள் செய்திட வேண்டும்”  எனத் திருப்பூவணனிடம் வேண்டிக் கொண்டேன்.   நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடிக் கொண்டிருந்தன.  2014ஆம் ஆண்டு சித்திரை வளர்பிறை பிரதோசம் அன்று திருப்பூவணத்தில் அன்னதாசம் நன்முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது.  மானாமதுரை சுவாமிஜி அவர்களும், திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர், மனிதருள் புனிதர் பேராசிரியர் இராம.திண்ணப்பன் ஐயா அவர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவர் அருகிலும் போய் நின்று கொண்டிருந்தேன்.  இருவரும் என்னை அருகில் அழைத்து அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.   அப்போது, சுவாமிஜி அவர்ளையும், ஐயா திண்ணப்பன் அவர்களையும் பணிந்து வணங்கிக் “காசிக்கு நடந்து செல்ல விரும்புகிறேன்”, எனக்கு அருளுங்கள் என வேண்டிக் கொண்டேன்.   ஐயா திண்ணப்பன் அவர்கள்,  பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் காசிக்குப் பாதயாத்திரை செல்லும் போது சொல்கிறேன்.  நீங்களும் அவருடன் காசிக்குப் போய் வாருங்கள் என அருளிச் செய்தார்கள்.

ஐயா திண்ணப்பன் அவர்கள் சொன்னபடியே, காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களுடன் தொடர்பு கொண்டு என்னையையும் அவர்களுடன் காசிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். 

24.05.2014  பொன்னமராவதி வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது வீட்டிற்குச் சென்று,
25.05.2014 அன்று பொன்னமராவதியில் வழிபாடு செய்து கொண்டு, பிள்ளையார்பட்டியில் வழிபாடு செய்து கொண்டு இராமேசுவரம் சென்று சேர்ந்தோம்.

26.05.2014 அன்று இராமேசுவரத்தில் காலையில் வழிபாடு செய்து கொண்டு, மாலை நேரத்தில் இராமேசுவரம் தெற்குக் கோபுரம் அருகில் இருந்து காசி பாதயாத்திரையைத் துவக்கினோம்.

12.09.2014 அன்று காசி மாநகர் சென்று சேர்ந்தோம்.

19.09.2014 அன்று “காசிஸ்ரீ” என்ற பட்டத்தை, அருள்மிகு காசி விசுவநாதர் ஆலய நிருவாகி எங்களுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்.

அருள்மிகு திருப்பூவணன் மின்னாள் திருவருளாலும்,
அருள்மிகு சக்குடி ஆதிமீனாட்சி உடனாய ஆதிசொக்கநாதர் திருவருளாலும்,
அருள்மிகு புலிக்கரை ஐயனார்  திருவருளாலும்,  
மற்றும் நான் வழிபடும் தெய்வங்களின் திருவருளினாலும்,
மானாமதுரை சுவாமிஜி அவர்களது நல்லாசியினாலும், 
பேராசிரியர் ஐயா திண்ணப்பன் அவர்களது நல்லாசியினாலும்,
மற்றும் நான் வழிபடும் தெய்வம் நிகர் நல்லோர்களின் ஆசியினாலும்
“காசிஸ்ரீ காளைராசன்” என்ற பட்டம் இன்று (19.09.2014) எனக்குக் கிடைத்தது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்