பச்சைக்காவடி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சைக்காவடி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 அக்டோபர், 2020

08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22

 ஆறு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை -  குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து   சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டு 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகிலும், பாதயாத்திரையின்போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.

இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர்.     

இன்று  136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)  பிள்ளையார்பட்டியில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

12.08.2014 காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம்

காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம் 
ஆனால் உண்மை
அனைத்தும் ஆனைமுகத்தான் அருள்

காசி புனித பாதயாத்திரையில் ஓர் அற்புத நிகழ்ச்சி - 

    வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, ஆடி 27 (12.08.2014) செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் கண்கட்டி (kankati) என்ற ஊரில் உள்ள  (https://goo.gl/maps/YHvDWMNx9fMYHg4D7) ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு  சுமார் 25 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு புட்டிபூரி (Butibori) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  https://goo.gl/maps/78SuewjLEePP2NLU6

 அந்த ஊரில் உள்ள மருத்துவர் ஒருவரின் மகனும் அவரது நண்பர்களும் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர். அந்த மருத்துவருக்குச் சொந்தமான நீண்ட பெரிய அடுக்குமாடி வணிக வளாகம் சாலையோரம் இருந்தது.  அந்தக் கட்டிடத்தில் தங்கினோம்.  கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.      மதிய உணவிற்குத் தேவையான காய்கறிகள், சமையல் எண்ணைய், குடிதண்ணீர் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர்.  குறிப்பாக மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்களுக்கு வெற்றிலையும் பாக்கும் தேடிப்பிடித்து வாங்கி வந்து கொடுத்தனர்.

மாலைநேரத்தில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான அந்த மருத்துவரும் அவரது நண்பர்கள் சிலரும் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.  நீண்ட  நேரம் குருசாமி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். 

அந்த மருத்துவர் மிகப் பெருஞ் செலவில் இந்த வணிக வளாகத்தைக் கட்டியுள்ளார்.  முக்கால்வாசி வேலைகள் முடிவடைந்தநிலையில்,  உள்ளூர் அரசியல் வாதியிடமிருந்து மிரட்டல்,  அந்த இடத்தை தொழிற்சாலை வளாகமாக மாற்றித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்,  அதனால் இந்தக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.   மருத்துவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.   வாய்தா எல்லாம் வாங்கி முடித்தபின்னர்,  வழக்கறிஞர் இதை சட்டப்படி மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.  தீர்ப்பும் அப்படியே வழங்கப்பட்டுள்ளது.    அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.   அங்கும் அரசுக்குச் சதாகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இனி எந்தவொரு நாளிலாவது அரசு தரப்பில் ஆட்கள் வந்து கட்டிடங்களை இடித்துத் தள்ளுவார்கள் என்ற நிலை.   அந்நாளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்றுள்ளார்.

இந்த ஊரில் சாலையோரம் உள்ள இந்தக் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்துள்ளது.  இங்கே சென்று யாத்திரிகர்களுடன் தங்கியுள்ளார்.  யாத்திரிகர்கள் வந்து கட்டிடத்தில் தங்கியுள்ள செய்தியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வழியாகச்  சொல்லி அனுப்பி யுள்ளார்.   செய்தி அறிந்த அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான மருத்துவர்,  நேரில் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அப்போது, இந்தக் கட்டிடம் பெரும் பொருட் செலவில் கடன்வாங்கிக் கட்டப்பெற்றுள்ளதையும்,  நீதிமன்றங்களில் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த நாளிலும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படலாம் என்ற தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

அது கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள், இங்கே எங்களைத் தங்கும்படிச் செய்தவர் பிள்ளையார் ஆவார்.  பிள்ளையார் எங்களை இங்கே தங்கச் சொல்லித்தான் நாங்கள் இங்கே தங்குகிறோம்.  நீங்களும் முழு நம்பிகையுடன் 108 நாட்கள் பிள்ளையாரைத் தினமும் வழிபாடு செய்து வாருங்கள்.  இந்தக் கட்டிடம் உங்கள் கையை விட்டுப் போகாது என்று கூறி ஆசீர்வதித்துள்ளார்.

நீதிமன்றங்கள் எல்லாம் கைவிரித்துவிட்ட இந்த இக்கட்டான நிலையில்,  எல்லாமும் முடிந்துவிட்டது என்ற நிலையில்,  இனிமேல் கட்டிடத்தை இடிப்பதுதான் பாக்கி என்ற நிலையில், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறிய இந்தச் சொற்கள் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளன.

அரும்பாடு பட்டுக் கட்டிய கட்டிடம் இடிபடக்கூடாது, என் உழைப்பில் கட்டிய அந்தக் கட்டிடம் என்றும் என்னிடமே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்த மருத்துவர் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வந்துள்ளார்.

கட்டிடத்தை இன்று இடிப்பார்கள், நாளை இடிப்பார்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றுள்ளன.  அரசியலில் திடீர் மாற்றமாக அந்த ஊரில் இருந்த மற்றொருவர் பதவியேற்க, அவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் தொழில்வளாகம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கொண்டுபோய் அரசிடம் கொடுத்துள்ளார்.  அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு,  அவர் கூறிய இடத்தில் தொழில்வளாகம் ஆரம்பிக் அரசு உத்தரவு வழங்கிவிட்டது.  

அரசின் இந்தப் புதிய ஆணையால், மருத்துவரின் இந்தக் கட்டிடம்  இடிபடாமல் தப்பித்துவிட்டது.  எல்லாமும் முடிந்துவிட்டன என்றிருந்த  நிலையில் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வழிகாட்டுதலின்படித் தினமும் பிள்ளையாரை வழிபட்டதன் பலனாகத் தங்களது சொத்து மீண்டும் தங்களுக்கே வந்துவிட்டது என்று அந்த மருத்துவர் அகம் மகிழ்ந்து கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னாளில் அந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் ஆனைமுகத்தானுக்கும் குருசாமிக்கும் அடியார் ஆகிவிட்டோம் என்றும் கூறி மகிழ்ந்தார்.

எல்லாம் ஆனைமுகத்தான் திருவருள்.   அனுதினமும் ஆனைமுகத்தானை வணங்குதல் செய்வோம்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு ஆனைமுகத்தான் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


செவ்வாய், 22 செப்டம்பர், 2020

23.09.2014 காசி பாதயாத்திரை - 121 ஆம் நாள், புரட்டாசி 7

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து, காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

இன்று  121 ஆம் நாள் - புரட்டாசி7 (23.09.2014) செவ்வாய்க் கிழமை 

இராமேசுவரம் திருப்புதல் -  நேற்றும் இன்றும், காசி-இராமேசுவரம் தொர்வண்டியல்  இராமேசுவரத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் காசியில் இருந்து புறப்பட்டு அன்னதான வண்டியில் சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்தனர். குருசாமி அவர்கள் அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.


காலை 6.46 மணிக்குத் தொடர்வண்டி  ஆந்திரா மாநிலம் நெல்லூர் வந்து சேர்ந்தது.   காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் அடுத்து கூடூர் சந்திப்பு (GUDUR JN) வந்ததும் இறக்கிக் கொள்வதாகவும்,  அங்கிருந்து பேருந்தில் அவரது ஊருக்குச் செல்வதாகவும் கூறினார்.  அவர் எங்களுடன் இராமேசவரம் வருவதற்கு விரும்பம் தான், ஆனால் இராமேசுவரத்தில் இருந்து மீண்டும் அவரது ஊருக்குத் திரும்புவதற்குத் தோதான பேருந்து வசதியோ, தொடர்வண்டி வசதியோ இல்லாத காரணத்தினாலும்,  அவருக்குச் சரியாகத் தமிழ் பேச வராத காரணத்தினாலும் அவர் கூடூரில் இறங்கிக் கொள்வதாகக் கூறினார். பின்னர் ஒருநாள் அவர் தனது நண்பருடன் சேர்ந்து இராமேசுவரம் வந்து வழிபாடு செய்து கொண்டு திரும்பிக் கொள்வதாகவும் கூறினார். 

காலை 8.16 மணிக்குத் தொடர்வண்டி கூடூர் வந்து சேர்ந்தது.
 

காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று,  கூடூர்  சந்திப்பில் இறங்கிக் கொண்டார்.  யாத்திரிகர் அனைவரும் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம்.

காசிஸ்ரீ மாதவன் அவர்கள்  யாத்திரிகர் அனைவருக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.   காசிஸ்ரீ தனசேகரன் அவர்களின் துணைவியார் திருமதி தனசேகரன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் குளிர்பானங்களும் வழங்கினார்கள்.

மாலை 6.00 மணிக்குத் தொடர்வண்டி திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தது.  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர்கள் பழங்களும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்தனர். 

இரவு 8.30 மணிக்குக் காரைக்குடியில் காசிஸ்ரீ காளைராசன் அவர்களது சம்பந்தி திரு. பழனியப்பன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் இரவு உணவும் தண்ணீரும் பழங்களும் வழங்கினார். 

நள்ளிரவுக்கு மேல் இராமேசுவரமும் சென்று சேர்வோம்.  நாளை புதன்கிழமை காலையில் இராமேசுவரத்தில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

21.09.2014 காசி பாதயாத்திரை - 119 ஆம் நாள், புரட்டாசி 5

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 110 நாட்கள் பயணம் செய்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து கொண்டிருந்தோம். நேற்று அருள்மிகு காலபைரவர் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று  வழிபாடு செய்து எங்களது பாதயாத்திரையை நிறைவு செய்தோம்.

இராமேசுவரம் திருப்புதல் -
இன்று  119 ஆம் நாள் - புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக் கிழமை.  

குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதானவண்டியில் திரும்பி வருவதாகவும், மற்றபிற யாத்திரிகர் அனைவரும் காசி-இராமேசுவரம் தொடரியில் பயணம் செய்வதாகவும் குருசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி மற்றபிற யாத்திரிகர் அனைவரும் மாலை 7.00 மணிக்குக் காசியில் இருந்து இராமேசுவரத்திற்குப் பயணம்.  நேற்று மாலை நேரத்தில் காலபைரவரைக் கும்பிட்டுவிட்ட காரணத்தினால் இனிமேல் அருள்மிகு காசி விசுவநாதர் உட்பட, காசியில் உள்ள பிற கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் எனக் குருசாமி அவர்கள் அறிவுரை வழங்கினார். 

காசியில் உள்ள கடைகளுக்குச் சென்று அவரவருக்கு வேண்டிய திண்பண்டங்களையும் மற்றபிற பொருட்களையும் வாங்கி மூடையாகக் கட்டி வைத்துப் பயணத்திற்கு அனைவரும் ஆயத்தமானார்கள்.   தொடரியில் படுக்கைக்குக் கீழே வைப்பது போன்று மிகவும் குறைவான உயரத்தில் மூடையாகக் கட்டி வைத்தனர்.

கீழே கடைகள்,  மாடியில் ஸ்ரீ பிரகஸ்பதி கோயிலும் இருந்தது.  கோயில் இடத்தில் கடையா? கடையின் மாடியில் கோயிலா? என்ற சிந்தனைகளுடன் கடைவீதியில் காசிஅல்வா, தேன்நெல்லி, காசி லட்டு, காசி மிட்டாய், அப்பளம் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்தோம்.

ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திரத்தில் பயணத்தின்போது சாப்பிடுவதற்குத் தேவையான உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்.  பயணத்தின்போது இந்த உணவுப் பொட்டலங்கள் பசியைப் போக்கின.

மாலை 6.00 மணிக்குச் சுபஹோரை நேரத்தில் யாத்திரிகர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து காசி தொடரி சந்திப்பு நிலையத்தை அடைந்தோம்.   சரியான நேரத்தில் வண்டி புறப்பட்டது.  எல்லோரும் அவரவர் உறவினர்களுக்குத் தொலைபேசி வாயிலாக அவரவர் வருகையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.  “காசிஸ்ரீ” என்ற பட்டத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

சனி, 19 செப்டம்பர், 2020

20.09.2014 காசி புனித பாத யாத்திரை நிறைவு நாள் - 118 ஆம் நாள், புரட்டாசி 4

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

காசி புனித பாத யாத்திரை நிறைவு நாள்
இன்று  118 ஆம் நாள் - புரட்டாசி 4 (20.09.2014) சனிக் கிழமை.  

யாத்திரிகர்களும் உறவினர்களும் காசிமாநகரில் உள்ள சிறப்பான இடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .

காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்லா விஸ்வநாதர் கோயில் (பிர்லா மந்திர்).   சங்கட் மோட்சன் - ஆஞ்சநேயர் கோயில். இங்கு சுத்தமான நெய்யில் சுவையான லட்டு விற்பனை செய்கின்றனர்.   துளசிதாசரின் ‘மானஸ் மந்திர்’.  துர்க்கா குண்ட் (துர்க்கை கோயில்).   ஹனுமான் காட்டிலுள்ள சிவன் கோயில் முதலான இடங்களுக்குச் சென்ற வந்தனர்.











குடிமாதா (சோழி மாதா) கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துகொண்டு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.   மதிய உணவு.

காசியில் காலபைரவர் வழிபாடு - மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக  2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபாடு செய்து, அருள்மிகு காலபைரவரின் திருவருளைப் பெற்றோம். 

இத்துடன் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது.

நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு.  

இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .

அருள்மிகு திருப்பூவணநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து, குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், காசி விசாலாட்சி, காசி அன்னபூரணி, காசி காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் 
சித்திப்பதாக .....

அன்பன்
காசிஶ்ரீ,  முனைவர், நா.ரா.கி. காளைராசன் .

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

19.09.2014 காசிஸ்ரீ பட்டம் பெறுதல் - காசி பாதயாத்திரை 117 ஆம் நாள், புரட்டாசி 3

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

காசிஸ்ரீ பட்டம் பெறுதல்
இன்று  117 ஆம் நாள் - புரட்டாசி 3 (19.09.2014) வெள்ளிக் கிழமை.  தினசரி காலைவழிபாட்டை முடித்து, காலை உணவு சாப்பிட்டு முடித்ததோம். சுப ஓரை நேரம் தொடங்கியதும் சுமார் 10.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு காசிதேவஸ்தான அலுவலகத்திற்குச் சென்றார்.

காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள் வெறொரு பணி காரணமாகச் சென்றிருந்தார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் அவர் பணியில் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து வந்தனர்.  மதியம் 12.30 மணி ஆகிவிட்டது.  யாத்திரிகர்கள் வந்து காத்திருப்பதைத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவித்தனர்.  அதற்கு அவர்,  யாத்திரிகர்களை மதியம் சாப்பிட்டுவிட்டு வருமாறும்,  அதற்குள் தானும் திரும்பி வந்து விடுவதாகவும் கூறினார்.  எனவே குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்ளை அழைத்துக் கொண்டு சத்திரத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் தேவஸ்தான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

‘காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள்’ மதிய உணவு நேரத்திற்குப் பின்னர் அலுவலத்திற்கு வந்திருந்தார்.  மதியம் 1.00 மணி முதல் 3.00 மணிவரை சுபஓரை நேரம் என்பதால்,  அந்த சுபஓரை நேரத்தில் குருசாமி பச்சைக்காவடி அவர்களை முதலாவதாக அழைத்துக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   
குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தொடர்ந்து  யாத்திரிகர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கு உரிய “காசிஸ்ரீ” பட்டத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.   

அந்த நிமிடத்தில் இருந்து யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு காசி விசுவநாதார், அருள்மிகு காசி விசாலாட்சி, அருள்மிகு காசி அன்னபூரணி மற்றும் காசியில் உறைந்துள்ள அனைத்துத் தெய்வங்களின் திருவருளால்  “காசிஸ்ரீ” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் ஆனோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு இது 11ஆவது பாதயாத்திரை யாகும்.  எனவே அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப் பெற்றுள்ள 10 சான்றிதழ்களையும் சரிபார்த்து, அந்தப் பத்துச் சான்றிதழ்களையும் ஒன்றாக்கி, அத்துடன் இந்த 11ஆவது பாதயாத்திரையும் சேர்த்து மொத்தமாக ஒரே சான்றிதழாகக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   இதனால் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு வழங்கிப்பெற்ற காசிஸ்ரீ சான்றிதழில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பெற்ற காசிஸ்ரீ பட்டங்கள் தொடர்பான வாசகம் இடம் பெற்றிருந்தது.

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர் அனைவரும் பெரிதும் மகிழ்ந்து, குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் முதன்மைச் செயல்அலுவலர் அவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினசரி இரவு வழிபாட்டை முடித்து, இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர்,  யாத்திரிகளும், சமையல் பணியாளர்களும், உறவினர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம்.


இரவு 8.17 மணி

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 16 செப்டம்பர், 2020

17.09.2014 காசி யாத்திரை - 115 ஆம் நாள், புரட்டாசி 1

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 115 ஆம் நாள் - புரட்டாசி 1 (17.09.2014) புதன் கிழமை.

காலையில் அருள்மிகு காசிவிசுவநாதர் வழிபாடு.  கூட்டம் கூடுதலாக இருந்தது.  யாத்திரிகர்கள் கூடுதலாகச் சிறிது நேரம் சந்நிதியில் நின்று வழிபாடு செய்ய அனுமதித்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர்களும் அருள்மிகு காசிவிசுநாருக்கு அவரவர் கைகளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டனர்.

மதிய உணவிற்குப் பின்னர் பலரும் காசியில் பொருட்கள் வாங்குவதற்குச் சென்றனர்.  தீர்த்தம் உத்திராட்சம் சிறியவிக்கிரகங்கள் மற்றும் பல வழிபாட்டுப் பொருட்களும், காசியில் செய்யப்படும் தோசைக்கல் முதலான பொருட்களும் நகரத்தார் சத்திரத்திரத்திலும் தரமாகவும் விலைகுறைவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

யாத்திரிகர்களும் யாத்திரிகர்களின் உறவினர்களும் நகரத்தார் சத்திரத்திற்கும், கடைவீதிக்கும்  சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டனர்.







காசியில் துணிமணிகள் விலை மலிவு.  நுணுக்கமாக விலை விசாரித்து வாங்கினால் மிகவும் இலாபம்.   காசியிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரத்தில் ஒருவர் வேகவேகமாக வந்து இரண்டு 5அடி உயர சூட்கேஸ்களை ஏற்றினார்.  நல்லவேளை வண்டி நகரும்போதே அவரும் ஏறிவிட்டார்.  அவருக்கு உதவி செய்த காரணத்தினால்  என்னுடன் நட்புடன் பேசினார்.  அவர் கும்பகோணம் என்றும் காசிக்கு வந்து சேலைகள் வாங்கிச் செல்வதாவும் கூறினார்.  ஏ.சி. வண்டியில் பயணம் செய்து இவற்றை வாங்கிச் செல்கின்றீர்களே? உங்களுக்கு இலாபம் கிடைக்குமா? என்று கேட்டேன்.  காசியில் சேலைகள் மிகவும் விலை மலிவு,  இந்த இரண்டு சூட்கேஸ்களில் உள்ள சேலைகளை விற்றால் போதும், ஒரு வருட வியாபரத்திற்குச் சமம் என்றார்.   கடைகள் தெரிந்து, துணிகளின் தரம் தெரிந்து, அவற்றின் விலை தெரிந்து வாங்கினால், காசியில் சேலைகள் மிகமிக விலை மலிவு.  ஏ.சி.யில் பயணம் செய்தால் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

14.09.2014 திருவேணி சங்கமம் - புனிதத் தீர்த்தமாடுதல்

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
14.09.2014 திருவேணி சங்கமம் புனிதத் தீர்த்தமாடுதல் .....

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 112 ஆம் நாள் - ஆவணி 29 (14.09.2014)  ஞாயிற்றுக் கிழமை.

அதிகாலை 5.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்களது  தலைமையில் யாத்திரிகர் அனைவரும் வாடகை வாகனங்களில் அலகாபாத் பயணம் ஆனோம்.  

4.45 am


7.35 am

அலகாபாத் செல்லும் வழியில் காலை 7.30 மணிக்கு அனைவரும் தேநீர் சாப்பிட்டுக் கொண்டோம்.


9.07 am

9.20 am

காலை 9.30 மணிக்கு பிரயாகை நகரத்தார் சத்திரம் சென்று சேர்ந்தோம்.

9.24 am

9.43 am
சத்திர நிர்வாகிகள் குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்று உபசரித்தனர்.  குருசாமி அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.


9.44 am
அனைவருக்கும் சத்திரத்தில் காலை உணவு.

10.45 am




10.45 am

11.06 am

திரிவேணி சங்கமம் - மூன்று படகுகளில் ஏறி மூன்றுநதிகளும் சேரும் இடத்திற்குச் சென்று  தீர்த்தம் ஆடினோம்.   கங்கையில் புதுப்புனல் வந்து கொண்டு இருந்தது.   யமுனையில் பச்சை நிறத்தில் தண்ணீர் ஓடியது. சரசுவதி பூமிக்குள்ளே இருந்து வெளிவந்து கங்கை யமுனையுடன் இங்கே ஒன்று சேர்கிறது.  அந்த இடத்தில் படகுகளை நிறுத்தி, படகுகளுக்கு இடையே கயிற்றைக்கட்டி, அதில் பலகை ஒன்றை இணைத்து, அந்தப் பலகையில் நம்மை நிற்கச் செய்து, திரிவேணி சங்கமத்தில் இறக்கி விடுகின்றனர்.  பலகையில் நின்றுகொண்டு கயிறைப் பிடித்தபடி  மூழ்கித் தீர்த்தமாடினோம்.   நீரின் அடிப்பகுதியில் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.  அந்தக் குளிர்ச்சியான தண்ணீரானது பூமிக்குள் இருந்து மேலே வரும் சரசுவதி நதியின் நீராகும் என்று கூறினர்.  எல்லோருக்கும் இது போன்று திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடினோம்.

குருசாமி அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு தீர்க்கக் குடுவைகளை (plastic cane) வாங்கிக் கொடுத்திருந்தார்.   அதில் கங்கா தீர்த்தம் பிடித்து வைத்துக் கொண்டோம்.


12.54 pm


12.54 pm

12.54 pm
யாரே தெரியவில்லை, பார்ப்பதற்கு மதுரைக்காரர்கள் போன்று தெரிந்தது.  அவர்களும் தீர்த்தமாடித் திருப்பிக் கொண்டிருந்தனர்.

1.48 pm
காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் அவர்களது மூத்த மகன் திரு.சி. ஐயப்பன் அவர்கள்  அலகாபாத் நகரில் வசித்து வருகிறார்.  அவர் யாத்திரிகர்களை அவரது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவரது அழைப்பைக் குருஜி அவர்கள் ஏற்றுக் கொண்டு, யாத்திரிகர்களை  அவரது இல்லத்திற்கு சென்றார்.

ஆச்சி திருமதி சின்னக்கருப்பன் அவர்களும், காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது மகன் திரு ஐயப்பன் அவர்களும், திருமதி சாந்தி ஐயப்பன் அவர்களும் தம்பதி சமேதராக அவர்களது இல்லத்தின் வாயிலில் நின்று வரவேற்றனர். 

 திரு ஐயப்பன் அவர்களும், திருமதி சாந்தி ஐயப்பன் அவர்களும் தம்பதி சமேதராகக் குருசாமி அவர்களுக்குப் பாதபூஜை செய்து வழிபட்டு வரவேற்றனர்.  


குருசாமி அந்தத் தம்பதியரையும் அவரது குடும்பத்தினரையும் ஆசிர்வதித்தார்.     




2.11 am

மதிய உணவு சிறப்பாக சுவையாக இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் உணவு பரிமாறினர்.

அலகாபாத்தில் திரு.சி. ஐயப்பன் அவர்களது இல்லத்தில் இருந்து மாலை 3.20 க்கு புறப்பட்டோம். 

5.19 am

5.20 am

வழியில் மாலை 5.20க்கு தேநீர் சாப்பிட்டோம்.  அந்த தேநீர்க் கடையருகே சாலையோரம் மரத்தடியில் பிள்ளையாரையும் சாலக்கிராமக் கற்களைப் போன்ற சில கற்களையும் வைத்து வழிபாடு செய்திருந்தனர்.

இரவு 8.00 மணிக்கு காசி மாநகர் வந்து சேர்ந்தோம்.
காசியில் நல்ல மழை பெய்து தெருவில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது.

சத்திரத்தில் இரவு உணவு.

இரவு 10.40 மணிக்கு அருள்மிகு விசுவேசுவர் அர்த்தசாம வழிபாடு நிவேத்திய பிரசாதம் கொண்டு வந்து குருசாமி அவர்களிடம் வழங்கினார்கள்.  குருசாமி அவர்களும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்று அந்தப் பிரசாதத்தை யாத்திரிகர்களுக்கும் பகிர்ந்து அளித்தார்.  எல்லாம் அருள்மிகு காசி விசுவேசுவர் திருவருள் மேன்மை.

மெய்யப்பர் அனைவருக்கும் அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்