காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.
காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள் வெறொரு பணி காரணமாகச் சென்றிருந்தார். குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் அவர் பணியில் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து வந்தனர். மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. யாத்திரிகர்கள் வந்து காத்திருப்பதைத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவித்தனர். அதற்கு அவர், யாத்திரிகர்களை மதியம் சாப்பிட்டுவிட்டு வருமாறும், அதற்குள் தானும் திரும்பி வந்து விடுவதாகவும் கூறினார். எனவே குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்ளை அழைத்துக் கொண்டு சத்திரத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் தேவஸ்தான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
‘காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள்’ மதிய உணவு நேரத்திற்குப் பின்னர் அலுவலத்திற்கு வந்திருந்தார். மதியம் 1.00 மணி முதல் 3.00 மணிவரை சுபஓரை நேரம் என்பதால், அந்த சுபஓரை நேரத்தில் குருசாமி பச்சைக்காவடி அவர்களை முதலாவதாக அழைத்துக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தொடர்ந்து யாத்திரிகர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கு உரிய “காசிஸ்ரீ” பட்டத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்த நிமிடத்தில் இருந்து யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு காசி விசுவநாதார், அருள்மிகு காசி விசாலாட்சி, அருள்மிகு காசி அன்னபூரணி மற்றும் காசியில் உறைந்துள்ள அனைத்துத் தெய்வங்களின் திருவருளால் “காசிஸ்ரீ” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் ஆனோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு இது 11ஆவது பாதயாத்திரை யாகும். எனவே அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப் பெற்றுள்ள 10 சான்றிதழ்களையும் சரிபார்த்து, அந்தப் பத்துச் சான்றிதழ்களையும் ஒன்றாக்கி, அத்துடன் இந்த 11ஆவது பாதயாத்திரையும் சேர்த்து மொத்தமாக ஒரே சான்றிதழாகக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார். இதனால் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு வழங்கிப்பெற்ற காசிஸ்ரீ சான்றிதழில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பெற்ற காசிஸ்ரீ பட்டங்கள் தொடர்பான வாசகம் இடம் பெற்றிருந்தது.
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர் அனைவரும் பெரிதும் மகிழ்ந்து, குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் முதன்மைச் செயல்அலுவலர் அவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
தினசரி இரவு வழிபாட்டை முடித்து, இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர், யாத்திரிகளும், சமையல் பணியாளர்களும், உறவினர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக