காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 02.09.2014 அம்தாரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று வெற்றி நடைபோடும் 101 ஆம் நாள் - 03.09.2014 ஆவணி 18
யாத்திரிகர் அனைவரும் இரவு 1.00 மணிக்கு முன்பே எழுந்து 2.00 மணிக்கு தினவழிபாட்டிற்கு கூடி விட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. குருஜி அவர்கள் 3.00 மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று கூறி ஓய்வு எடுத்தார். சரியாக 2.50 க்கு மழை நின்று விட்டது. தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.15 க்கு அம்தாரா என்ற ஊரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.
சாலை வளைவு நெளிவு இன்றி மைகார் வரை நேர் கோட்டில் இருந்தது.
இருமருங்கிலும்
நீண்ட நெடிய மலைத்தொடர் தொடர்ந்து தெரிந்தன.
சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் வந்தால் ஓரமாக ஒதுங்கிச் செல்வது சிரமமாக இருந்தது. மழைநீரால் சாலையின் ஓரங்களில் களிமண் வழுக்கியது.
காலை 10.00 மணிக்கு மைஹார் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். மைஹார் என்ற பெயர் மைகார் (மை+கார்) என்றால் “கருமையான மழைமேகம்” என்று பொருளாகுமா?
ஊர் எல்லையில் உள்ள "பஞ்சாபி தாபா" முதலாளி யாத்திரிகர்களை வரவேற்று அவரது தாபாவில் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.
காலையில் வந்து நம்முடன் சாப்பிட்டுச் சென்ற தம்பதியர் யார்?
அவர்களது பெயர் என்ன? ஊர் எது? எங்கே செல்கின்றனர்? ஏன் வந்தார்கள்? அவர்கள் சாப்பிட்டுவிட்டு என்ன சொல்லிச் சென்றார்கள்? என்ற விசாரணையில் சமையல்உதவியாளருடன் யாத்திரிகர்கள் ஈடுபட்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
இரவு உணவு.
ஓய்வு.
இரவு மணி 9.40 அளவில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அரசியல்வாதி ஒருவர் வாகனத்தில் வந்து இறங்கிக் குருசாமி அவர்களைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டார். அவருடன் வந்திருந்தோரின் பேச்சுச் சத்தம் கேட்டுக் குருசாமி அவர்கள் எழுந்து விட்டார். வந்திருந்தவரை வரவேற்று விபூதி பிரசாதம் கொடுத்தார். பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் எனக் குருசாமி அவரை ஆசீர்வதித்தார்.
இங்கிருந்து
காசி 300 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக