காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம். காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம். புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் இராமேசுவரத்திற்குத் திரும்பினோம்.
குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர். வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார். அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.
இன்று 122 ஆம் நாள் - புரட்டாசி8 (24.09.2014) புதன் கிழமை
23.09.2014 நள்ளிரவு 12.00 மணிகடந்து 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.
24.09.2014 மணி 00.30 ஆகும் போது இராமேசுவரம் வந்து சேர்ந்தோம்.
திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் சார்பாகத் திரு முத்துப்பாண்டி அவர்களும், திரு முத்துக்குமாரசாமி அவர்களும், திரு ஞானபண்டிதன் அவர்களும் மற்றும் பலரும் இராமேசுவரம் வந்திருந்து யாத்திரிகர்கள் ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பரமக்குடியிலிருந்து சில அன்பர்கள் சிலர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றனர்.
அதிகாலையில் இராமேசுவரத்தில் தீர்த்தமாடி, அருள்மிகு இராமநாதசாமியையும், அருள்மிகு மலைவளர்காதலி (பர்வத வர்த்தினி) அன்னையையும் வணங்கிக் கொண்டோம். யாத்திரிகர்கள் திருவேணி சங்கமத்தில் இருந்துகொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் காலைநேர அபிஷேகம் செய்தனர். யாத்திரிகர் அனைவரும் வழிபாடு செய்து உய்வடைந்தோம்.
காலை 8.18 மணிக்குக் காலைஉணவு. மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் காலையுணவு வழங்கினார்.
காலை உணவு முடிந்த பின்னர் யாத்திரிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் ஊர்களுக்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள். மதுரை காசிஸ்ரீ கந்தாமி அவர்களை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். பரமக்குடி காசிஸ்ரீ பஞ்சவர்ணம், காசிஸ்ரீ கந்தசாமி மற்றும் இராமநாதபுரம் காசிஸ்ரீ தாமோதரன் இவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். திருச்சிராப்பள்ளி காசிஸ்ரீ அங்கமுத்து, காசிஸ்ரீ கலியபெருமாள், இவர்கள் திருச்சி செல்லும் பயணிகள் வண்டியில் மதியம் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தனர். பாண்டிச்சேரி தொப்பை என்ற கலியபெருமாள், மற்றும் சென்னை காசிஸ்ரீ தனசேகரன் இருவரும் மாலைநேரத்தில் புறப்படும் சென்னை விரைவு வண்டியில் புறப்படத் தயாராக இருந்தனர்.
திருவெறும்பூர் காசிஸ்ரீ சண்முகவேலு அவர்கள் இரவு நேரத்தில் புறப்படும் சென்னை விரைவு வண்டியில் திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்தார்.
காரைக்குடி அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும், நானும் காரைக்குடிக்குப் புறப்படத் தயார் ஆனோம். எனது அண்ணனும் தம்பியும் தம்பிமகனும் இராமேசுவரம் வந்திருந்து எங்கள் இருவரையும் காரைக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.
எங்களுடன் நின்று கொண்டிருந்த, எனது மைத்துனர் திருப்பூவணம் திரு முத்துப்பாண்டி அவர்களிடமும், சென்னை காசிஸ்ரீ தனசேகரன் அவர்களிடமும், திருப்பூவணம் திரு முத்துக்குமாரசாமி மற்றும் திருப்பூவணம் ஞானபண்டிதன் இவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு, மகிழுந்தில் காரைக்குடிக்குப் பயணம் ஆனோம்.
மதியம் 1.00 மணிக்குக் காரைக்குடி வந்து சேர்ந்தோம்.
24.05.2014 அன்று காலை வழிபாடு செய்து கொண்டு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து யாத்திரைக்காகக் புறப்பட்டு, இறையருளால் பாதயாத்திரையை நிறைவு செய்து இராமேசுவரத்தில் மீண்டும் வழிபாடு செய்து, நான்கு மாதங்கள் கழித்து, இன்று 24.09.2014 அன்று மதியம் வீட்டிற்கு வந்து சேர்ந்து வழிபாடு செய்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டோம்.
இறையருளால் இராமேசுவரம்-காசி பாதயாத்திரையும், காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் பயணமும் இனிதே நிறைவுற்றன.
அன்னதான வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மெய்யன்பர் அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக