பத்ரியில் (Pandri Shivgarh) சாலைவழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வேகமாக நடப்போர் எல்லாம் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர். ஓரிருவர் எனக்கும் பின்னே வந்து கொண்டிருந்தனர். நான் நடந்து செல்வதைச் சாலையோரம் உள்ள கடையில் உட்கார்ந்தபடி ஒரு மீசைக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார். என்னை அவரிடம் வருமாறு சைகை காட்டிக் கூப்பிட்டார். நான் அவரைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தேன். உடனே அவர் எழுந்து வந்து என்னிடம் ஏதேதோ கேட்டார், ஏதேதோ சொன்னார்.
“இராமேசுவரம் - காசி பாதயாத்திரை. 109ஆவது நாள் பயணம்” என்பதை மட்டும் இந்தியில் சொன்னேன். அதைக் கேட்ட அவர் தனது மீசையை முறுக்கிக் காட்டி ஏதேதோ சொன்னார். என்னிடம் ஏதேதோ கேட்டார். “உடல் பலமும், மனவளமும் மனிதனுக்குத்தேவை, ஆன்மிகம் வழிபாடு தேவையற்றது” என்று சொல்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
மீசைக்கு மீசைதான் சரியாகும் என்று என் மனதில் பட்டது. அதனால், எங்களுடன் பாதயாத்திரை வந்து கொண்டிருந்த காசிஸ்ரீ ‘தொப்பை’ என்ற களியபெருமாள் அவர்கள் வரும்வரை, அங்கேயே நின்று அமைதியாக அவரது இந்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் மீசையை மட்டும் முறுக்கி கொண்டே ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நண்பர் காசிஸ்ரீ தொப்பைசாமி அவர்கள் எனது அருகில் வந்தும், அவரை அழைத்து உங்களது மீசையை முறுக்கிக் காட்டுங்கள் எனச் சொன்னேன். தொப்பைசாமி அவரது மீசையை முறுக்கிக் காட்டியதுதான் தாமதம், அந்த மீசைக்காரர் எங்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரிதும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனார். ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அன்பும் மனிதமும் எங்களைச் சகோதரர்களாக மாற்றிவிட்டன.
எங்களைக் காசிக்கு அழைத்துச் சென்ற எங்களது குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அருகே வந்துவிட்ட காரணத்தைக் கூறி அந்தப் பத்ரி மீசைக்காரரிடம் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
முறுக்கு மீசைக்கு இவ்வளவு மதிப்பா? காவிக்கு இல்லாத மதிப்பு மரியாதை முறுக்கிய மீசைக்கு இருப்பதைக் கண்டு வியந்து போனோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக