காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.
இன்று 115 ஆம் நாள் - புரட்டாசி 1 (17.09.2014) புதன் கிழமை.
காலையில் அருள்மிகு காசிவிசுவநாதர் வழிபாடு. கூட்டம் கூடுதலாக இருந்தது. யாத்திரிகர்கள் கூடுதலாகச் சிறிது நேரம் சந்நிதியில் நின்று வழிபாடு செய்ய அனுமதித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர்களும் அருள்மிகு காசிவிசுநாருக்கு அவரவர் கைகளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டனர்.
மதிய உணவிற்குப் பின்னர் பலரும் காசியில் பொருட்கள் வாங்குவதற்குச் சென்றனர். தீர்த்தம் உத்திராட்சம் சிறியவிக்கிரகங்கள் மற்றும் பல வழிபாட்டுப் பொருட்களும், காசியில் செய்யப்படும் தோசைக்கல் முதலான பொருட்களும் நகரத்தார் சத்திரத்திரத்திலும் தரமாகவும் விலைகுறைவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
யாத்திரிகர்களும் யாத்திரிகர்களின் உறவினர்களும் நகரத்தார் சத்திரத்திற்கும், கடைவீதிக்கும் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டனர்.
காசியில் துணிமணிகள் விலை மலிவு. நுணுக்கமாக விலை விசாரித்து வாங்கினால் மிகவும் இலாபம். காசியிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரத்தில் ஒருவர் வேகவேகமாக வந்து இரண்டு 5அடி உயர சூட்கேஸ்களை ஏற்றினார். நல்லவேளை வண்டி நகரும்போதே அவரும் ஏறிவிட்டார். அவருக்கு உதவி செய்த காரணத்தினால் என்னுடன் நட்புடன் பேசினார். அவர் கும்பகோணம் என்றும் காசிக்கு வந்து சேலைகள் வாங்கிச் செல்வதாவும் கூறினார். ஏ.சி. வண்டியில் பயணம் செய்து இவற்றை வாங்கிச் செல்கின்றீர்களே? உங்களுக்கு இலாபம் கிடைக்குமா? என்று கேட்டேன். காசியில் சேலைகள் மிகவும் விலை மலிவு, இந்த இரண்டு சூட்கேஸ்களில் உள்ள சேலைகளை விற்றால் போதும், ஒரு வருட வியாபரத்திற்குச் சமம் என்றார். கடைகள் தெரிந்து, துணிகளின் தரம் தெரிந்து, அவற்றின் விலை தெரிந்து வாங்கினால், காசியில் சேலைகள் மிகமிக விலை மலிவு. ஏ.சி.யில் பயணம் செய்தால் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
மெய்யன்பர் அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக