செவ்வாய், 22 செப்டம்பர், 2020

23.09.2014 காசி பாதயாத்திரை - 121 ஆம் நாள், புரட்டாசி 7

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து, காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

இன்று  121 ஆம் நாள் - புரட்டாசி7 (23.09.2014) செவ்வாய்க் கிழமை 

இராமேசுவரம் திருப்புதல் -  நேற்றும் இன்றும், காசி-இராமேசுவரம் தொர்வண்டியல்  இராமேசுவரத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் காசியில் இருந்து புறப்பட்டு அன்னதான வண்டியில் சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்தனர். குருசாமி அவர்கள் அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.


காலை 6.46 மணிக்குத் தொடர்வண்டி  ஆந்திரா மாநிலம் நெல்லூர் வந்து சேர்ந்தது.   காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் அடுத்து கூடூர் சந்திப்பு (GUDUR JN) வந்ததும் இறக்கிக் கொள்வதாகவும்,  அங்கிருந்து பேருந்தில் அவரது ஊருக்குச் செல்வதாகவும் கூறினார்.  அவர் எங்களுடன் இராமேசவரம் வருவதற்கு விரும்பம் தான், ஆனால் இராமேசுவரத்தில் இருந்து மீண்டும் அவரது ஊருக்குத் திரும்புவதற்குத் தோதான பேருந்து வசதியோ, தொடர்வண்டி வசதியோ இல்லாத காரணத்தினாலும்,  அவருக்குச் சரியாகத் தமிழ் பேச வராத காரணத்தினாலும் அவர் கூடூரில் இறங்கிக் கொள்வதாகக் கூறினார். பின்னர் ஒருநாள் அவர் தனது நண்பருடன் சேர்ந்து இராமேசுவரம் வந்து வழிபாடு செய்து கொண்டு திரும்பிக் கொள்வதாகவும் கூறினார். 

காலை 8.16 மணிக்குத் தொடர்வண்டி கூடூர் வந்து சேர்ந்தது.
 

காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று,  கூடூர்  சந்திப்பில் இறங்கிக் கொண்டார்.  யாத்திரிகர் அனைவரும் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம்.

காசிஸ்ரீ மாதவன் அவர்கள்  யாத்திரிகர் அனைவருக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.   காசிஸ்ரீ தனசேகரன் அவர்களின் துணைவியார் திருமதி தனசேகரன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் குளிர்பானங்களும் வழங்கினார்கள்.

மாலை 6.00 மணிக்குத் தொடர்வண்டி திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தது.  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர்கள் பழங்களும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்தனர். 

இரவு 8.30 மணிக்குக் காரைக்குடியில் காசிஸ்ரீ காளைராசன் அவர்களது சம்பந்தி திரு. பழனியப்பன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் இரவு உணவும் தண்ணீரும் பழங்களும் வழங்கினார். 

நள்ளிரவுக்கு மேல் இராமேசுவரமும் சென்று சேர்வோம்.  நாளை புதன்கிழமை காலையில் இராமேசுவரத்தில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக