காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 10.09.2014 சமோகரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 109 ஆம் நாள் - 11.09.2014 ஆவணி 26 வியாழக் கிழமை.
விடியும்போது காசி சென்று சேர்ந்துவிடுவோம் என்ற நினைப்பில் காசியை நோக்கிக் கால்களும் நடக்க ஆரம்பித்தன....
கடந்த 108 நாட்களாக, இதுநாள் வரையும் யாத்திரிகர்களை முன் அனுப்பி வைத்துவிட்டு எல்லோருக்கும் கடைசியாகக் குருசாமி அவர்கள் நடந்து வருவார். இன்று இந்த நடைமுறைக்கு மாறாக குருசாமி அவர்கள் வேகமாக எல்லோருக்கும் முன்னே நடந்து சென்றார். இதனால் யாத்திரிகர்களும் "நான் முந்தி நீ முந்தி" என்று அனைவரும் வேகமாக நடந்தனர்.
சாலையோரம் இருந்த பள்ளிக்கூட வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வு.
காலை 6.30 மணி ஆகியும் அன்னதான வண்டி வரவில்லை.
76 கி.மீ. பயணம் செய்து காசி சென்று சேர்ந்து விடவேண்டும் என்பதே இன்றைய பாதயாத்திரையின் இலக்கு. எனவே தேநீருக்காகக் காத்திருக்காமல் நடந்து செல்வோம், தேநீர் வரும்போது குடித்துக் கொள்வோம் எனக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறினார்கள். யாத்திரிகர்கள் புனித காசியை மனதில் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர். யாத்திரை தொடர்ந்தது.
துர்கையின் கோயில் ஒன்று இருந்து சிதிலமடைந்துள்ளது. தூணில் இருந்து ஒரேயொரு சிற்பத்தை மட்டும் எடுத்து வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
காசிஸ்ரீ மாதவன் அவர்கள் நடந்து செல்லும் பாதையில் பார்த்த ஊர்களின் பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு சிறு நாட்குறிப்பில் எழுதிக் கொண்டு வந்தார்.
காலை மணி 7.25,
23 கி.மீ. பயணம்.
அன்னதான வண்டி வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வந்த காரணத்தினால், சாலையோரம் இருந்த தேநீர் கடை அருகில் தங்கிச் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம்.
காலை 7.30 மணிக்கு, அன்னதான வண்டி வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.
மூன்று சமையல்காரர்களும், அன்னதான வண்டி ஓட்டுநரும்.
8.19 am
31 கி.மீ. பயணம் செய்தபின், காலை 9.10 மணிக்குச் சாலையோரம் அமர்ந்து காலை உணவு. சில நிமிட நேரங்கள் ஓய்வு. காலை 9.52 க்கு அங்கிருந்து புறப்பட்டோம்.
40 கி.மீ. பயணம், மதியம் 12.30 மணிக்கு சுனார் ( चुनार, Chunar ) என்ற ஊர் வந்து சேர்ந்தோம். சீனாக்களிமண் பொருட்கள் சுனாரில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
1.00 க்கு மதிய உணவு.
சிறிது நேரம் ஓய்வு.
யாத்திரிகர் அனைவரும் படுத்துத் தூங்கி விட்டனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஓய்வெடுக்க இடம் கிடைக்காமல் போனது.
மதியம் 2.15 க்கு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் மழை தூர ஆரம்பித்தது.
இதனால் யாத்திரிகர் வேகம் குறைந்தது.
46 கி. மீ. பயணம்.
மாலை 3.40 மணிக்கு ரொட்டியும் தேநீரும்.
சாலையானது சேறும் சகதியுமாக இருந்தது.
இதனால் யாத்திரிகர்களின் உடைகள் எல்லாம் சகதி படிந்தது.
வேகமாகச் சென்ற ஒரு லாரியின் டயர் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரைச் சிதறிச் சென்றது. இதனால் இரண்டு யாத்திரிகர் உடலிலும் சகதி படிந்தது.
58 கி. மீ. பயணம்,
மழை தூரிக்கொண்டே இருந்தது.
இங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஓய்வு.
விரைவாகச் செல்லும் யாத்திரிகர்கள் முன்கூட்டியே பள்ளிக்கூட வளாகத்திற்குச் சென்று தங்கியிருந்தனர்.
இருட்டி விட்டது.
நானும் இன்னும் சில யாத்திரிகர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கும் பின்னால் இன்னும் சில யாத்திரிகர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
மழை தூரிக்கொண்டே இருந்தது.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அடிக்கடி தொலைபேசியில் தொடர்கொண்டு எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று தகவல் கேட்டுக் கொண்டே இருந்தார்.
யாத்திரிகர்களில் மிகவும் மூத்தவர் மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்கள் மட்டும் மிகவும் காலதாமதமாக வந்து சேர்ந்தோர். உடல் சோர்வடைந்திருந்தார்.
8.00 மணிக்கு இரவு உணவு.
உணவிற்குப் பின் இரண்டு மணி நேரம் ஓய்வு.
இரவு 10.00 மணிக்கு வழிபாடு முடிந்தவுடன்,
அனைவரது மனதும் காசியைச் சென்று சேர்ந்து விட்டன,
விடியும்போது காசி சென்று சேர்ந்துவிடுவோம் என்ற நினைவுடன் காசியை நோக்கிக் கால்களும் நடக்க ஆரம்பித்தன....
யாத்திரை தொடர்ந்தது ....
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக