காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம்
ஆனால் உண்மை
அனைத்தும் ஆனைமுகத்தான் அருள்
காசி புனித பாதயாத்திரையில் ஓர் அற்புத நிகழ்ச்சி -
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, ஆடி 27 (12.08.2014) செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் கண்கட்டி (kankati) என்ற ஊரில் உள்ள (https://goo.gl/maps/YHvDWMNx9fMYHg4D7) ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு சுமார் 25 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு புட்டிபூரி (Butibori) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். https://goo.gl/maps/78SuewjLEePP2NLU6
அந்த ஊரில் உள்ள மருத்துவர் ஒருவரின் மகனும் அவரது நண்பர்களும் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர். அந்த மருத்துவருக்குச் சொந்தமான நீண்ட பெரிய அடுக்குமாடி வணிக வளாகம் சாலையோரம் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் தங்கினோம். கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மதிய உணவிற்குத் தேவையான காய்கறிகள், சமையல் எண்ணைய், குடிதண்ணீர் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர். குறிப்பாக மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்களுக்கு வெற்றிலையும் பாக்கும் தேடிப்பிடித்து வாங்கி வந்து கொடுத்தனர்.
மாலைநேரத்தில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான அந்த மருத்துவரும் அவரது நண்பர்கள் சிலரும் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர். நீண்ட நேரம் குருசாமி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த மருத்துவர் மிகப் பெருஞ் செலவில் இந்த வணிக வளாகத்தைக் கட்டியுள்ளார். முக்கால்வாசி வேலைகள் முடிவடைந்தநிலையில், உள்ளூர் அரசியல் வாதியிடமிருந்து மிரட்டல், அந்த இடத்தை தொழிற்சாலை வளாகமாக மாற்றித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனால் இந்தக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். மருத்துவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வாய்தா எல்லாம் வாங்கி முடித்தபின்னர், வழக்கறிஞர் இதை சட்டப்படி மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். தீர்ப்பும் அப்படியே வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அங்கும் அரசுக்குச் சதாகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இனி எந்தவொரு நாளிலாவது அரசு தரப்பில் ஆட்கள் வந்து கட்டிடங்களை இடித்துத் தள்ளுவார்கள் என்ற நிலை. அந்நாளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்றுள்ளார்.
இந்த ஊரில் சாலையோரம் உள்ள இந்தக் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்துள்ளது. இங்கே சென்று யாத்திரிகர்களுடன் தங்கியுள்ளார். யாத்திரிகர்கள் வந்து கட்டிடத்தில் தங்கியுள்ள செய்தியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வழியாகச் சொல்லி அனுப்பி யுள்ளார். செய்தி அறிந்த அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான மருத்துவர், நேரில் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அப்போது, இந்தக் கட்டிடம் பெரும் பொருட் செலவில் கடன்வாங்கிக் கட்டப்பெற்றுள்ளதையும், நீதிமன்றங்களில் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த நாளிலும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படலாம் என்ற தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
அது கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள், இங்கே எங்களைத் தங்கும்படிச் செய்தவர் பிள்ளையார் ஆவார். பிள்ளையார் எங்களை இங்கே தங்கச் சொல்லித்தான் நாங்கள் இங்கே தங்குகிறோம். நீங்களும் முழு நம்பிகையுடன் 108 நாட்கள் பிள்ளையாரைத் தினமும் வழிபாடு செய்து வாருங்கள். இந்தக் கட்டிடம் உங்கள் கையை விட்டுப் போகாது என்று கூறி ஆசீர்வதித்துள்ளார்.
நீதிமன்றங்கள் எல்லாம் கைவிரித்துவிட்ட இந்த இக்கட்டான நிலையில், எல்லாமும் முடிந்துவிட்டது என்ற நிலையில், இனிமேல் கட்டிடத்தை இடிப்பதுதான் பாக்கி என்ற நிலையில், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறிய இந்தச் சொற்கள் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளன.
அரும்பாடு பட்டுக் கட்டிய கட்டிடம் இடிபடக்கூடாது, என் உழைப்பில் கட்டிய அந்தக் கட்டிடம் என்றும் என்னிடமே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்த மருத்துவர் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வந்துள்ளார்.
கட்டிடத்தை இன்று இடிப்பார்கள், நாளை இடிப்பார்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றுள்ளன. அரசியலில் திடீர் மாற்றமாக அந்த ஊரில் இருந்த மற்றொருவர் பதவியேற்க, அவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் தொழில்வளாகம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கொண்டுபோய் அரசிடம் கொடுத்துள்ளார். அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் கூறிய இடத்தில் தொழில்வளாகம் ஆரம்பிக் அரசு உத்தரவு வழங்கிவிட்டது.
அரசின் இந்தப் புதிய ஆணையால், மருத்துவரின் இந்தக் கட்டிடம் இடிபடாமல் தப்பித்துவிட்டது. எல்லாமும் முடிந்துவிட்டன என்றிருந்த நிலையில் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வழிகாட்டுதலின்படித் தினமும் பிள்ளையாரை வழிபட்டதன் பலனாகத் தங்களது சொத்து மீண்டும் தங்களுக்கே வந்துவிட்டது என்று அந்த மருத்துவர் அகம் மகிழ்ந்து கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னாளில் அந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் ஆனைமுகத்தானுக்கும் குருசாமிக்கும் அடியார் ஆகிவிட்டோம் என்றும் கூறி மகிழ்ந்தார்.
எல்லாம் ஆனைமுகத்தான் திருவருள். அனுதினமும் ஆனைமுகத்தானை வணங்குதல் செய்வோம்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு ஆனைமுகத்தான் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக