வெள்ளி, 20 செப்டம்பர், 2019

புனித பாத யாத்திரை நிறைவு

புனித பாத யாத்திரை நிறைவு 



குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம் .
12.09.2014 அன்று அதிகாலை காசி மாநகர் வந்து சேர்ந்தோம் .
இன்று 20.09.2014 சனிக்கிழமை
யாத்திரிகர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .
மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக
2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபட்டு வந்தோம் .
இத்துடன் பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது .
நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு .

இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .

அருள்மிகு திருப்பூவணம்காசிநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து ,
குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி , அன்னபூரணி , காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் சித்திப்பதாக ...

அன்பன்
காசிஶ்ரீ கி.காளைராசன் .
20 செப்டம்பர், 2014 ·


வெள்ளி, 13 செப்டம்பர், 2019

காசியில் அவசியம் வழிபட வேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?

குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .

யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.

இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .

அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.

1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11  நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .

மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

புதன், 11 செப்டம்பர், 2019

கால்வலி, மூட்டுவலி நிவாரணி

புளியும் வேம்பும் ....
எதற்குப் பயன்படும் ?

இவற்றின் இலைகளை ஆய்ந்து சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சூடாக இருக்கும் போது துண்டை நனைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். கால் மூட்டு வலிக்குச் சிறந்த வைத்தியம்.

வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்துக் குளிப்பது போன்று, மாதம் ஒருமுறையாவது புளியஇலையையும் வேப்பயிலையையும் போட்டு வேகவைத்து இளஞ்சூட்டில் குளிக்கலாம். உடல் அசதி ஓடிப்போய் விடும்.
காசிஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் 2013ஆம் ஆண்டு இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செய்தார். இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வரும்போது கால்கள் இரண்டும் வீக்கம் ஆகிவிட்டன. திருச்சியோடு பாதயாத்திரையை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் யாத்திரைக்கு வந்திருந்த சமையல்காரர் வேப்பயிலை புளியயிலையை வேக வைத்து ஒத்தடம் கொடுத்துள்ளனர். இப்படி ஒத்தடம் கொடுத்துக் கொண்டே தினமும் நடந்து சென்றார். இராமேசுவரம் காசி பாதயாத்திரையை நிறைவு செய்தும் விட்டார்.

வேப்பயிலையும் புளியயிலையும் இருக்கும் போது மூட்டுவலி கால்வீக்கம் உடல்அசதி என்றால் கவலைப்படவே வேண்டாம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்