வாரணாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாரணாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 செப்டம்பர், 2021

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை

காளையார்கோயில்

அருள்மிகு காளீசுவரர் திருவருளால் 

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை


காசிக்குச் செல்வோர் காளையார்கோயில் சென்று அருள்மிகு காளீசுவரரை வணங்கிவிட்டுக் காசிக்குச் செல்லுதல் சிறப்புடையது.  இதைப் பற்றி இந்தக் கதை கூறுகிறது. 

காளையார்கோயில் தேவராதப் படலம் (30) 
சுந்தரமூர்த்தி காளீசரைக் கண்டு வணங்கி பாடிப் பரவியதைத் தொடர்ந்து, காளீசரால் ‘தேவராதன்‘ என்பவன் பெற்ற நன்மையை எனக்குத் தெரிந்தவரை சொல்லுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

திருவாடானைக்கு வடகிழக்கில், திருப்புனவாயில் அருகில் ‘இந்திரபுரம்‘ என்று ஓர் ஊர் உள்ளது.  அந்நகரில் ஒழுக்க சீலனும், மறையில் வல்லோனும், சோமயாகம் செய்தவனுமாகிய ‘தேவராதன்‘ என்ற மறையவன் வசித்து வந்தான்.  அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவனாகிய வினதனுக்கு உபநயனம் செய்வித்து, நூல்கள் பல கற்பித்து வளர்த்தான்.  பின் தேவராதன், கங்கைக்குச் சென்று நீராட வேண்டும் என்ற விருப்பம் கொண்டான்.  மூத்தமகனைக் காளீசர் உறையும் காளிபுரத்திலுள்ள மாமன் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்து, இளைய மகனோடும் மனைவியோடும் வாரணாசிக்குச் சென்றான்.

தேவராதன் சென்றவுடன், இந்திரபுரத்திலுள்ள அவனுடைய பொருள்களை எல்லாம் அங்குள்ள சிலர் அபகரித்துக் கொண்டனர். ‘காந்தன்‘ என்ற பெயருடைய மாமன் இல்லத்திலே வளர்ந்து வந்த வினதனுக்குத் திருமண வயது வந்தது.  மாமனும் வினதனுக்குத் திருமணம் செய்ய எண்ணி அதற்கு வேண்டிய பொருளுக்காக மருமகனை அழைத்துக் கொண்டு, இந்திரபுரம் சென்றனன்.  அவ்வூரில் உள்ளவர்களிடம் வாரணாசிக்குச் சென்ற தேவராதன் இன்னும் வரவில்லை, அதனால் தேவராதன் மகனுக்குத் திருமணம் முடிக்க எண்ணி, அதற்கு வேண்டிய பொருளுக்காக இங்கு வந்துள்ளேன்.  தேவராதனுடைய நிலத்தை அனுபவிப்பவர்கள் அதற்குரிய ஊதியத்தைத் தாருங்கள் எனக் கேட்டான்.  இந்திரபுரத்தில் உள்ளோர் அனைவரும் தேவராதன் சென்றபின், அவன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணத்திற்காக நிலத்தை விற்றுக் கொடுத்து விட்டோம். “ஒன்றும் மீதமில்லை“ என்றனர்.  மாமனையும் மருமகனையும் ஊரை விட்டே துரத்தவும் செய்தனர்.  மாமனும் உள்ளம் வருந்தி இவ்வூரில் நன்னெறி இல்லையோ, கேட்க நாட்டார் இல்லையோ, மன்னர் தாம் இல்லையோ என்று புலம்பிய வண்ணம் மருமகனோடு காளிபுரம் வந்து சேர்ந்தார்.

சிறிது காலத்தில் மாமனும் இறந்து போனான்.  ஆதரவற்று வருந்திய வினதன் பிரம்மச்சரிய விரதத்தில் தவறாதவனாகி இல்லம் தோறும் பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து வந்தான்.  காளீசரே தஞ்சம் என வணங்கி நின்றான்.  அவன் நிலைகண்ட காளீசரும், உமையவளோடும் இளையகுமரனோடும், ‘வினதனின் தந்தை தாய் இளையசகோதரன்‘ போலக் காசியிலிருந்து கங்கை நீரைக் காவடிபோலக் கட்டிக் கொண்டு வருபவர்போல வந்தார்.  மகன் வினதனைக் கண்டு தழுவி மகிழ்ந்து சில நாட்கள் காளிபுரத்தில் இருந்தார். பிறகு வினதனை அழைத்துக் கொண்டு தேவராதன் வடிவில் வந்த காளீசர் இந்திரபுரத்திற்குச் சென்றார். 

இந்திரபுரத்தில் உள்ளவர்கள் தேவராதனைக் கண்டு கலங்கினர், ஆனாலும் உவகை கொண்டவர்கள் போல உபசரித்தனர்.  தேவராதனும் ஊரிலுள்ளோரை நோக்கி “நான் காசி சென்று பலநாட்கள் ஆகி விட்டன. இதுவரை எனது பங்கிலுள்ள ஊதியத்தை வரிச்செலவு போகக் கணக்குப் பார்த்துத் தாருங்கள்“ என் மூத்த மைந்தனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றான்.

ஊராரோ, நீ காசிக்குச் செல்லும் போது உன்னுடைய நிலத்தை யெல்லாம் பிறரிடம் விற்று விட்டாயே, இப்போது வந்து ஊதியம் கேட்டால் யார் கொடுப்பார்?  “பித்தனோ நீவிர்“ என்றனர்.  அதற்கு தேவராதனாகிய காளீசர், “நான் பித்தன்தான், அது இருக்கட்டும், நான் ஊராருக்கு நிலங்களை விற்றதற்கான ஆவணத்தில் என் கையொப்பத்தைக் காட்டுங்கள்“ என்றார்.

ஊரார், பொய்யான ஆவணங்களை எல்லாம் காட்ட, உண்மையறிய அரசனிடம் செல்வோம், என்று கூறித் தேவிகோட்டையில் சிறந்து வாழும், செங்கோலனாகிய பாண்டியகுல மன்னனான ‘பூடணன் ‘ என்ற பெயருடைய மன்னனைச் சார்ந்தார். அரசனும் இரு பக்கத்தார் வாதங்களையும் கேட்டு உண்மையை ஆராய்ந்து, இந்திரபுரத்து ஊரார் காட்டிய சான்றும் ஆவணமும் பொய் என்று உணர்ந்து, இந்திரபுரத்திலுள்ள தேவராதன் நிலங்களை முன்போல் அவனுக்கு உரிமையாக்கினான்.  தேவராதனும் சில நாட்களில் தங்கள் குலத்திற்கு ஏற்ற பெண்ணை வினதனுக்கு மணஞ் செய்வித்தான்.  அப்போது காசிக்குச் சென்ற தேவராதனும் அவன் மனைவியும் இளையமகனும் வந்து சேர்ந்தனர்.  இதைக் கண்டு அங்குள்ளோர் அதிசயித்தார்.  காளீசரும் சொர்ணவல்லி அம்மையும் இளையமகனும் மறைந்தனர். தேவராதன் மகன் வினதனுக்கு ஆதரவாகக் காளீசரே உமையோடும் இளைய மகனோடும் வந்ததை அறிந்த தேவராதன், காளீசன் தாளைப் புகழ்ந்து பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான்.

காளீசரும் சொர்ணவல்லித் தாயாரும் வீற்றிருக்கும் காளீபுரத்திற்கு அன்றுமுதல் அழகிய மங்களம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுபம் 
மங்களம்.


சனி, 7 ஆகஸ்ட், 2021

காசியில் சாட்சி கணபதி

சாட்சி கணபதி



Elangovan Ks  அவர்களின் முகநூல் பதிவு இது. 7 ஆகஸ்ட், 2020  · 

காசியில் பிரதானமாக  56 விநாயகர் கோயில் உள்ளது. காசிக்கு செல்பவர்கள் இந்த விநாயகரை அவசியம் தரிசிப்பார்கள். ஏனெனில் இந்த சாக்ஷி கணபதி கோயில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. நாளை சித்ரகுப்தன்   புண்ணிய கணக்கு போடுகையில்  நம்மை ஆம் இவர் சுவாமியை தரிசனம் செய்ய காசிக்கு வந்தார் என்று சாக்ஷி சொல்வாரம் ஆதலால் இவருக்கு சாக்ஷி கணபதி  என்று சொல் வழக்கு... நன்றி சந்திரசேகர் ஸ்வாமி,காசி ...

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

காசியில் அவசியம் வழிபட வேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?

குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .

யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.

இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .

அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.

1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11  நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .

மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

சனி, 29 செப்டம்பர், 2018

காசி சோழிமாதா வழிபாடு

காசி சோழிமாதா வழிபாடு




காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது இராமேசுவரம் - காசி 110 நாட்கள் பாதயாத்திரையின் நிறைவாகக் காசிமாநகர் வந்து சேர்ந்தோம்.  காசியில் 10 நாட்கள் தங்கியிருந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டோம்.
20.09.2014 அன்று சோழிமாதா கோயிலுக்கு வந்து வழிபட்டோம். “சோழிபலன் உனக்கு, காசிபலன் எனக்கு” என்று கூறி சோழிகளைப் போட்டு வழிபடச் சொல்கின்றனர்.   இந்த மாதாவை வழிபட்டு எங்களது காசிமாநகரில் உள்ள தெய்வங்களின் வழிபாட்டை நிறைவு செய்து கொண்டோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 12 செப்டம்பர், 2018

காசியில் வழிபடவேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?
குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .
யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.
இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .
அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.
1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11 நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .
மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 12 ஏப்ரல், 2018

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில்


காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில் ஆண்டாண்டு காலமாக நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பெற்று குடமுழுக்கு நடத்தப்பெற்று வருகிறது.

நகரத்தார்கள் திருப்பணி நடைபெறாத ஆலயமே இல்லை யென்று கூறும் அளவிற்கு அனேக ஆலயங்களைச் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் சில.