சனி, 25 செப்டம்பர், 2021

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை

காளையார்கோயில்

அருள்மிகு காளீசுவரர் திருவருளால் 

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை


காசிக்குச் செல்வோர் காளையார்கோயில் சென்று அருள்மிகு காளீசுவரரை வணங்கிவிட்டுக் காசிக்குச் செல்லுதல் சிறப்புடையது.  இதைப் பற்றி இந்தக் கதை கூறுகிறது. 

காளையார்கோயில் தேவராதப் படலம் (30) 
சுந்தரமூர்த்தி காளீசரைக் கண்டு வணங்கி பாடிப் பரவியதைத் தொடர்ந்து, காளீசரால் ‘தேவராதன்‘ என்பவன் பெற்ற நன்மையை எனக்குத் தெரிந்தவரை சொல்லுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

திருவாடானைக்கு வடகிழக்கில், திருப்புனவாயில் அருகில் ‘இந்திரபுரம்‘ என்று ஓர் ஊர் உள்ளது.  அந்நகரில் ஒழுக்க சீலனும், மறையில் வல்லோனும், சோமயாகம் செய்தவனுமாகிய ‘தேவராதன்‘ என்ற மறையவன் வசித்து வந்தான்.  அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவனாகிய வினதனுக்கு உபநயனம் செய்வித்து, நூல்கள் பல கற்பித்து வளர்த்தான்.  பின் தேவராதன், கங்கைக்குச் சென்று நீராட வேண்டும் என்ற விருப்பம் கொண்டான்.  மூத்தமகனைக் காளீசர் உறையும் காளிபுரத்திலுள்ள மாமன் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்து, இளைய மகனோடும் மனைவியோடும் வாரணாசிக்குச் சென்றான்.

தேவராதன் சென்றவுடன், இந்திரபுரத்திலுள்ள அவனுடைய பொருள்களை எல்லாம் அங்குள்ள சிலர் அபகரித்துக் கொண்டனர். ‘காந்தன்‘ என்ற பெயருடைய மாமன் இல்லத்திலே வளர்ந்து வந்த வினதனுக்குத் திருமண வயது வந்தது.  மாமனும் வினதனுக்குத் திருமணம் செய்ய எண்ணி அதற்கு வேண்டிய பொருளுக்காக மருமகனை அழைத்துக் கொண்டு, இந்திரபுரம் சென்றனன்.  அவ்வூரில் உள்ளவர்களிடம் வாரணாசிக்குச் சென்ற தேவராதன் இன்னும் வரவில்லை, அதனால் தேவராதன் மகனுக்குத் திருமணம் முடிக்க எண்ணி, அதற்கு வேண்டிய பொருளுக்காக இங்கு வந்துள்ளேன்.  தேவராதனுடைய நிலத்தை அனுபவிப்பவர்கள் அதற்குரிய ஊதியத்தைத் தாருங்கள் எனக் கேட்டான்.  இந்திரபுரத்தில் உள்ளோர் அனைவரும் தேவராதன் சென்றபின், அவன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணத்திற்காக நிலத்தை விற்றுக் கொடுத்து விட்டோம். “ஒன்றும் மீதமில்லை“ என்றனர்.  மாமனையும் மருமகனையும் ஊரை விட்டே துரத்தவும் செய்தனர்.  மாமனும் உள்ளம் வருந்தி இவ்வூரில் நன்னெறி இல்லையோ, கேட்க நாட்டார் இல்லையோ, மன்னர் தாம் இல்லையோ என்று புலம்பிய வண்ணம் மருமகனோடு காளிபுரம் வந்து சேர்ந்தார்.

சிறிது காலத்தில் மாமனும் இறந்து போனான்.  ஆதரவற்று வருந்திய வினதன் பிரம்மச்சரிய விரதத்தில் தவறாதவனாகி இல்லம் தோறும் பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து வந்தான்.  காளீசரே தஞ்சம் என வணங்கி நின்றான்.  அவன் நிலைகண்ட காளீசரும், உமையவளோடும் இளையகுமரனோடும், ‘வினதனின் தந்தை தாய் இளையசகோதரன்‘ போலக் காசியிலிருந்து கங்கை நீரைக் காவடிபோலக் கட்டிக் கொண்டு வருபவர்போல வந்தார்.  மகன் வினதனைக் கண்டு தழுவி மகிழ்ந்து சில நாட்கள் காளிபுரத்தில் இருந்தார். பிறகு வினதனை அழைத்துக் கொண்டு தேவராதன் வடிவில் வந்த காளீசர் இந்திரபுரத்திற்குச் சென்றார். 

இந்திரபுரத்தில் உள்ளவர்கள் தேவராதனைக் கண்டு கலங்கினர், ஆனாலும் உவகை கொண்டவர்கள் போல உபசரித்தனர்.  தேவராதனும் ஊரிலுள்ளோரை நோக்கி “நான் காசி சென்று பலநாட்கள் ஆகி விட்டன. இதுவரை எனது பங்கிலுள்ள ஊதியத்தை வரிச்செலவு போகக் கணக்குப் பார்த்துத் தாருங்கள்“ என் மூத்த மைந்தனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றான்.

ஊராரோ, நீ காசிக்குச் செல்லும் போது உன்னுடைய நிலத்தை யெல்லாம் பிறரிடம் விற்று விட்டாயே, இப்போது வந்து ஊதியம் கேட்டால் யார் கொடுப்பார்?  “பித்தனோ நீவிர்“ என்றனர்.  அதற்கு தேவராதனாகிய காளீசர், “நான் பித்தன்தான், அது இருக்கட்டும், நான் ஊராருக்கு நிலங்களை விற்றதற்கான ஆவணத்தில் என் கையொப்பத்தைக் காட்டுங்கள்“ என்றார்.

ஊரார், பொய்யான ஆவணங்களை எல்லாம் காட்ட, உண்மையறிய அரசனிடம் செல்வோம், என்று கூறித் தேவிகோட்டையில் சிறந்து வாழும், செங்கோலனாகிய பாண்டியகுல மன்னனான ‘பூடணன் ‘ என்ற பெயருடைய மன்னனைச் சார்ந்தார். அரசனும் இரு பக்கத்தார் வாதங்களையும் கேட்டு உண்மையை ஆராய்ந்து, இந்திரபுரத்து ஊரார் காட்டிய சான்றும் ஆவணமும் பொய் என்று உணர்ந்து, இந்திரபுரத்திலுள்ள தேவராதன் நிலங்களை முன்போல் அவனுக்கு உரிமையாக்கினான்.  தேவராதனும் சில நாட்களில் தங்கள் குலத்திற்கு ஏற்ற பெண்ணை வினதனுக்கு மணஞ் செய்வித்தான்.  அப்போது காசிக்குச் சென்ற தேவராதனும் அவன் மனைவியும் இளையமகனும் வந்து சேர்ந்தனர்.  இதைக் கண்டு அங்குள்ளோர் அதிசயித்தார்.  காளீசரும் சொர்ணவல்லி அம்மையும் இளையமகனும் மறைந்தனர். தேவராதன் மகன் வினதனுக்கு ஆதரவாகக் காளீசரே உமையோடும் இளைய மகனோடும் வந்ததை அறிந்த தேவராதன், காளீசன் தாளைப் புகழ்ந்து பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான்.

காளீசரும் சொர்ணவல்லித் தாயாரும் வீற்றிருக்கும் காளீபுரத்திற்கு அன்றுமுதல் அழகிய மங்களம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுபம் 
மங்களம்.


1 கருத்து: