ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கீரனூர் சிவன்கோயில்

கீரனூர் சிவன்கோயில்



சாமியின் பெயர் - உத்தமநாதர்
அம்மன் – பிரகதம்பாள்.
நந்தி மிகவும் பழமையானதாக அழகான தோற்றத்துடன் காணப்படுகிறது.
“கீரனூர் 11ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றுள்ளது என்றும்.  கீரனூருக்கு உத்தமநாதபுரம் என்றும் சுகபுரி என்றும் பெயர்கள்  உண்டு என்றும், சுகர் என்ற முனிவர் தவம் செய்த்தாகவும் வேட்டைக்கு வந்த ஓர் அரசனது அம்பு ஒன்று இவர் மீது பட்டு இவர் தவம் கலைந்த்தாகவும் அதற்கு பிராயசித்தமாக ஒரு கோயில் கட்டும்படி அவர் ஏவி கோயில் கட்டப்பட்டதாகவும் புராண வரலாறு“ என்று கோயிலில் எழுதி வைத்துள்ளனர்.
கல்வெட்டுகளில் உத்தநாதபுரம் என்று கண்டிருக்கிறது.  கோயில் உள்பிரகாரதம் மற்றும் வெளிப்பிரகாரம்  எங்கும் கல்வெட்டுகள் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன.



மிகவும் பழமையான ராசகோபுரம்.
“கீரனூர் 11ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றுள்ளது என்றும்.  கீரனூருக்கு உத்தமநாதபுரம் என்றும் சுகபுரி என்றும் பெயர்கள்  உண்டு என்றும், சுகர் என்ற முனிவர் தவம் செய்த்தாகவும் வேட்டைக்கு வந்த ஓர் அரசனது அம்பு ஒன்று இவர் மீது பட்டு இவர் தவம் கலைந்த்தாகவும் அதற்கு பிராயசித்தமாக ஒரு கோயில் கட்டும்படி அவர் ஏவி கோயில் கட்டப்பட்டதாகவும் புராண வரலாறு“ என்று கோயிலில் எழுதி வைத்துள்ளனர்.

கல்வெட்டுகள்
கீரனூர் கல்வெட்டு 1 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 2 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 3 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 4 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 5 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 6 (உள்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு 7 (உள்பிரகாரம்)


கீரனூர் கல்வெட்டு 8 (உள்பிரகாரம்)

கல்வெட்டுப்பாடம்

  1. ஸ்ரீமண் சோளர்வீமன் சோழற்யாண்
  2. அக்கலதேவ சோழமகாராசாவும் நாட்(டாரும்)
  3. ஏவிளம்பி வரு தை மாதம் .... கீரனூர் உள்ள
  4. ..... இசை(ந்)த ஊரவரும் உப்பலி குடி ஊராயினார்
  5. ந்த ஊரவரும் மேலை புதுவயல் கீழை புதுவயல்
  6. .... பள்ளத்தூ(ர்) மதியத்தூ(ர்) விருதூர் யாகு(வ)
  7. ச்சி ஊர்க்கு இசைன்த ஊரவரும்
  8. அக்கால சோழ மா
  9. த்தலைவரும் நகராற்றுமலை
  10. சில்மருதூ(ர்) பெருநசை ஊர்
  11. யாகுடி ஊரவரும் உடையவர் உத்தமசோழரீசு
  12. ரமுடைய தம்பிரானாக்கு அய்யன் (வ)சவாசய்
  13. யன் தன்மம் ஆக யிரஞ் குடி தேவமண்
  14. டலம் ஆக திருவிளம் பற்றுகையில் அந்த
  15. நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக வி
  16. ட்டபடியிதுக்கு அகுதம் சொல்லி யாதாம்
  17. ஒருவன் தேவமண்டலம் அகக்காரியம் என
  18. (என்று) ஆவது ... ஊ குடுற்ற தேவண்டா
  19. னால் யிரசதெண்டமதுற்று யிருபற்று
  20. நலு பொன்னும் குடுற்று அவன் அவன் மண்
  21. று மனை கணியாஷியும் தேவமண்டல அக
  22. க்கடவோம் ஆகவும் யிதுக்கு யிராண்(டு) நினை
  23. ற்றவன் கெங்கைரையில் கரா பசுவை கொண்
  24. றப் (பறதெவோச) கடவன் அகவும் யிதுக்கு யிண்
  25. டு நினைற்றவன்
 விளக்கங்கள்:
 ·         கல்வெட்டின் காலம் நாயக்கர் காலம் எனக் கருதத்தக்கவகையில் சில அகச்சான்றுகள் கல்வெட்டுப்பாடத்தில் கானப்படுகின்றன.  ஒன்று கல்வெட்டு தொடங்கும்போது ஸ்ரீமன் என்று தொடங்குகிறது. (கல்வெட்டில் மிகுதியாகப் பிழைகள் உள்ளன; அவற்றில் “ஸ்ரீமன் என்பது “ஸ்ரீமண்” என எழுதப்பட்டுள்ளது.) ஸ்ரீமன்” ன்னும் தொடக்கம் நாயக்கர் காலக்கல்வெட்டுகளில் மிகுதியும் காணப்படுகிறது. இரண்டாவது,  அக்கல தேவ மகாராசா”  என்னும் பெயர். நாயக்கர் ஆட்சிக்காலங்களில், நாயக்கர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நிருவாகம் செய்துகொண்டிருந்தவர்கள் மண்டலத்தலைவர் ஆவர். அவர்கள் மகாமண்டலேசுவரர், மகாராசா என்ற பெயர்களைக்கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, (கொங்கு மண்டலத்தில்) கோவைப்பகுதியில், வாலையதேவ மகாராசா என்ற நாயக்கர் பிரதிநிதியான மண்டலதலைவர் பெயர் குடிமங்கலக் கல்வெட்டில் வருகிறது. அதுபோல், புதுக்கோட்டைப்பகுதியில் ஒரு அக்கல/அக்கால தேவமகாராசா இருந்திருக்கலாம். புதுக்கோட்டைப்பகுதியில் வேறு ஊர்களின் கல்வெட்டுகளில் இப்பெயர் வரக்கூடும்.
·         கல்வெட்டில் ஏவிளம்பி என்னும் ஆண்டு குறிப்பிடப்பெறுகிறது. மேற்சொன்ன நாயக்கர் காலத்தை ஒட்டி இந்த ஏவிளம்பி வருடத்தை கி.பி. 1537-38 –ஆம் ஆண்டுடன் இணைக்கலாம். கி.பி. 1597-98 ஆம் ஆண்டுக்கும் ஏவிளம்பி வருடம் பொருந்தும்.
·         கீரனூரில் உள்ள உத்தமசோழரீசுவரர் கோயிலுக்கு ஒர் ஊர் கொடையாகச் சேர்க்கப்படுகிறது. முதலாம் இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழன் (கி.பி. 970-985) பெயரால் அமைந்த கோயில். கொடையாகச் சேர்க்கப்பட்ட ஊரின் பெயர் தெளிவாக இல்லை. “யிரஞ் குடி’ (இரஞ்சிக்குடி?) என்னும் பெயர் கல்வெட்டில் உள்ளது. கோயிலைச் சேர்ந்த ஊர்கள் தேவமண்டலங்கள் என அழைக்கப்பெற்றன. எனவே தேவமண்டலமாக மேற்படி ஊர் திருவுளம் பற்றப்படுகிறது. கொடையாளி அய்யன் வசவாசய்யன் எனக்குறிக்கப்படுகிறார். (பெயர், விசுவாசய்யன் என்பதாகவும் இருக்கலாம்)
·         கீரனூர்ப்பகுதியின் நாட்டாரும், அப்பகுதியில் இருந்த ஊர்களின் தலைவர்களும் (ஊரவர்) கூடி ஒப்புதலளித்து (கல்வெட்டில், “இசைந்து” என்று வரும் தொடர் ஒப்புதலைக்குறிக்கும்.) கொடை தீர்மானிக்கப்படுகிறது. வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி என வருகிரது. இதில், “நின்றை’ என்பது “நின்றிறை”  என்னும் கல்வெட்டுச் சொல்லாக இருக்கக்கூடும்.
·         வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி  என்றொரு தொடர் அமைகிறது. இது, தேவமண்டலமாக விட்ட ஊரானது, நின்றையத்தில் விடப்பட்டது என்னும் பொருளைத் தருகிறது. முன்பே கூறியதுபோல், கல்வெட்டில் மிகுதியும் பிழைகள் காணப்படுகின்றன. ற்ற” , “ற்று”  என்னும் எழுத்துச் சேர்க்கை கல்வெட்டில் “த்த”,  “த்து” ,  “க்கு”  என்னும் சேர்க்கைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரி 15 :  நின்றயத்திலே -> நின்றையற்றிலே
         வரி 18 :  குடுத்த -> குடுற்ற
   வரி 19 :  யிரசதெண்டமதுற்று -> யிரசதெண்டமதுக்கு
  யிரசதெண்டமதுக்கு -> யிரச தெண்டம் + அதுக்கு= யிராச தெண்டம்   
  அதுக்கு.
  வரி : 19-20  யிருபற்று நலு -> யிருபத்து நலு = யிருபத்து நாலு
   இப்பிழைகளை நீக்கிப்படிக்கையில், நின்றையத்திலே, குடுத்த,  
        யிருபத்து நாலு, யிராச தெண்டம் அதுக்கு ஆகிய சரியான பொருள்
        தருகின்ற சொற்கள் கிடைக்கின்றன. மேலும், “இ” என்னும் எழுத்தில்
        தொடங்கும் சொற்கள் “யி என்னும் எழுத்தில் தொடங்குவதையும்
        காணலாம். எனவே, இராச தெண்டம், இருபத்துநாலு ஆகியன
        சரியானவை என்பது பெறப்படுகிறது. “நின்றை” என்பதும், “நின்றிறை
        என்பதன் பிழையான வடிவம் எனக் கருதவேண்டியுள்ளது. காரணம்,
        கல்வெட்டு அகராதிப்படி, “நின்றிறை”  என்பது “மாறாத வரி
        யைக்குறிக்கும் சொல்லாகும்.
இவை அனைத்தையும் ஒன்றுகூட்டிப்பொருள் கொள்ளும்போது,    தேவமண்டலமாகச் சேர்க்கப்பட்ட ஊர், மாறாத வரி வருவாயைக்கொண்டதாக அமைக்கப்பட்டது எனவும், இந்த தன்மத்துக்கு அகுதம் (தீமை) சொன்னவர்கள் இராசதெண்டம் (அரசக்குற்றம்) செய்தவராகக் கருதப்படுவார்கள் எனவும், அவ் இராசதெண்டத்துக்கு இருபத்துநாலு பொன் அபராதம் விதிப்பதோடு, அவர்களுடைய மன்று, மனை, காணியாட்சி நிலம் ஆகியன பறிக்கப்பட்டுத் தேவமண்டலமாக இணைக்கப்படும் எனவும் விளக்கம் அமைகிறது. ( காணியாட்சி என்பது கணியாஷி எனப் பிழையாக எழுத்தப்பட்டுள்ளதை நோக்குக.)
 இந்த தன்மத்துக்கு “இரண்டு நினத்தவன்”  (கல்வெட்டில் யிராண்டு
நினைற்றவன்) கங்கைக்கரையில் காராம்பசுவைகொன்ற பாவத்தை
அடைவான் எனக்கல்வெட்டு முடிகிறது.
இரண்டு நினைத்தவன் = தீங்கு செய்ய நினைத்தவன். 
மேல் உள்ள கல்வெட்டை வாசித்து அளித்தவர்ன திரு. துரை சுந்தரம் அவர்கள், 
நன்றி - மின்தமிழ் https://groups.google.com/d/msg/minTamil/NYLOsdlJs3A/MssQndODDQAJ

கீரனூர் கல்வெட்டு (வெளிப்பிரகாரம்)

கீரனூர் கல்வெட்டு (வெளிப்பிரகாரம்)
கல்வெட்டுகளில் உத்தநாதபுரம் என்று கண்டிருக்கிறது.  கோயில் உள்பிரகாரதம் மற்றும் வெளிப்பிரகாரம்  எங்கும் கல்வெட்டுகள் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன.

எத்தனையோ முறை திருச்சிராப்பள்ளி சென்று வந்துள்ளேன்.  அத்தனை முறையும் கீரனூர் வழியாகத்தான் பேருந்து செல்லும். சாலையின் நடுவே இருக்கும் காந்திசிலையைப் பார்த்து வணங்கிக் கொள்வேன்.  நானறிந்தவகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பேருந்துநிலையம், மருத்துவமனை, பாடசாலைகள், அரசு அலுவலகங்கள், மற்றும் அனைத்துப் பொது இடங்களும் கோயில் இடங்களிலேயே அமைந்திருக்கின்றன.

பொன்னமராவதி வலையபட்டி குருசாமி காசிஸ்ரீ. பச்சைக்காவடி அவர்கள் அவரது 11ஆவது வருட பாதயாத்திரையைக் கடந்த 2014ஆம் ஆண்டு இராமேச்சுரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டார்.  அந்தப் பாதயாத்திரையில் என்னையும் ஒரு யாத்திரிகனாகச் சேர்த்துக் கொண்டார்.  காசிக்கான எங்களது பாதயாத்திரையானது கீரனூர் வழியாகவே சென்றது.  அப்போது கீரனூர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எங்களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான நேரம் கிடைக்கவில்லை.  அடுத்த ஆண்டு 9 மே 2015 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களது 12ஆவது வருட இராமேச்சுரம் காசி யாத்திரையும்  கீரனூர் வழியாகவே சென்றது.  யாத்திரிகர்களைப் பார்த்து வருவதற்காக,  நான் காரைக்குடியிலிருந்து பேருந்து மூலமாகக் கீரனூர் சென்றேன்.  கீரனூருக்குச் சற்று முன்னதாகவே யாத்திரிகர் நடந்துவருவதைக் கண்டு, அந்த இடத்திலேயே பேருந்திலிருந்து இறங்கி யாத்திரிகர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் நடந்தே கீரனூர் சென்றேன்.

இந்த 2015ஆம் ஆண்டு இறைவனது திருவருளால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கீரனூர் கோயிலுக்குச் சென்றார்கள்.  குருசாமி பச்சைக்காவடியுடனும் மற்றைய யாத்திரிகர்களுடனும் கீரனூர் கோயிலுக்குச் சென்று வழிபடும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றேன்.






குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசிகள் பெறவேண்டிக் கோயில் வளாகத்தில் ஏராள பக்தர்கள் காத்திருந்தனர்.  அவர்களை யெல்லாம் குருசாமி அவர்கள் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.




திருச்சி திருஎறும்பியூர் காசிஸ்ரீ அங்கமுத்து சாமிகள் நந்தியின் அருகே நிற்கிறார்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்





புதன், 25 ஏப்ரல், 2018

அறுபடைவீடு பாதயாத்திரை, திருவேடகம், துன்முகி சித்திரை- 14 (27.04.2016) புதன் கிழமை

ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 
அறுபடைவீடு பாதயாத்திரை (முதலாம் ஆண்டு)




முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.
இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க,
நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க,
பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற
வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின்
அறுபடைவீட்டிற்கான ஆன்மிகப் பாதயாத்திரை.

குருசாமி பச்சைக் காவடி அவர்களும், அவருடைய அடியார்கள் நாங்கள் இருபது பேரும், சமையல்காரர் மூவரும், அன்னதான ஊர்த்தி ஓட்டுநர் ஒருவரும் என நாங்கள் மொத்தம் 25 நபர்கள்.
அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை பயணத்தின் மொத்த தூரம் 1141 கி.மீ. மொத்தம் 50 நாட்கள் பயணம் எனக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி யாத்திரை 07.04.2016 அன்று காலை பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு அழகர்கோயில், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு பழனி சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி சித்திரை- 14 (27.04.2016) புதன் கிழமை

இன்று அதிகாலை 02.30 மணிக்குக் கூத்தியார்குண்டு ஊரில் இருந்து புறப்பட்டு கொடிமங்கலம் வழியாகத் திருவேடகம் (23 கி.மீ.) காலை 07.45 மணிக்கு வந்து அடைந்தோம். சொக்கலிங்கம் சுவாமிகள் மடத்தில் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்துத் தங்க வைத்தனர். வைகை ஆற்றின் தென்கரையில் காலை 07.00 மணி அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.




சொக்கலிங்கம் சுவாமிகள் மடம் தென்னந்தோப்புகளுக்கு இடையே இருந்த காரணத்தினால் இன்று அதிகமான வெயிலை உணர முடியவில்லை.
இந்த இடத்தை தேவகோட்டை உயர்திரு. இராம. பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த மடத்தின் உரிமையாளர் தேவகோட்டை உயர்திரு. A. மாணிக்கம் செட்டியார் அவர்கள் வந்திருந்து யாத்திரிகர் அனைவருக்கும் பழங்கள் கொடுத்து உபசரித்தார்.




திருவேடகம் உயர்திரு. பாலு அவர்கள் மதியவிருந்து அளித்து உபசரித்தார். திருவேடகம் உயர்திரு. பாண்டி அவர்கள் யாத்திரிகர்களுக்கு இரவு உணவு வழங்கி உபசரித்தார்.

திருவேடகம் வரும் வழியில் அதிகாலையில் திருஞானசம்பந்தர் வழிபாடு செய்த அருள்மிகு ஸ்ரீ உமாமகேசுவரி உடனாய ஸ்ரீ மணிகண்டேசுவரர் கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம். அதனை அடுத்துக் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருள்மிகு எல்லம்மன் திருக்கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம்.



கொடிமங்கலத்தைக் கடந்து வரும் போது நீண்டு நேராக உள்ள நாகமலையை நன்றாகக் காணமுடிந்தது.



பிரளயகாலத்தில் கடல் கரையைக் கடந்து (சுனாமி) மதுரையை அழித்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இவ்வாறு மதுரையைச் சுனாமி அழித்த காலத்தில் கடலால் அடித்துவரப்பட்ட மண்ணானது ஆப்புடையார் (திருவாப்புடையார்) சுயம்புலிங்கத்தில் தடுக்கப்பெற்று, மதுரைக்கு மேற்கே ஒரு நீண்டதொரு மலைத்தொடரை உருவாக்கியுள்ளது என்பது என் கருத்து. நாகமலை என்று பெயர் கொண்ட இந்த நீண்ட மண்மலையானது, “மதுரைக்கு வந்த சுனாமி“ என்ற எனது கட்டுரைக்குப் பொருள் சேர்க்கும் வகையில் எனக்குத் தோன்றியது.

சோழவந்தான் அருகே நாகதீர்த்தம் உள்ளது. மாவலிங்கமர அடியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீசுவரர் கோயில், குருவித்துறையில் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோயில் உள்ளன.



யாத்திரிகர் அனைவரும் வைகை ஆற்றைக் கடந்து சோழவந்தான் செல்லும் போது சூரியன் நன்றாக ஒளிவிடத் துவங்கியிருந்த்து. அனைவரும் ஞாயிறு வழிபாடு செய்துகொண்டு வைகை ஆற்றைக் கடந்தோம்.



“ஏடகநாதர்“ மிகவும் பழைமையான சுயம்பு லிங்கம். திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏடுகள் ஆற்று வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கரையேறிய இடத்தில் இருந்த காரணத்தினால் “ஏடகநாதர்“ என்ற காரணப்பெயர் உண்டானது. இதனால் ஊருக்குத் திருஏடகம் (திருவேடகம்) என்ற காரணப் பெயர் உண்டானது.
திருஞானசம்பந்தர் காலத்தில் கட்டப்பெற்ற கோயில் என்பதால் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. சுயம்புலிங்கங்கள் பூமிக்குள் ஊடுறுவி இருக்கும். இவற்றை எளிதில் பெயர்த்து எடுக்க முடியாது. இருப்பினும் ஏடகநாதரை மிகவும் சிரமப்பட்டுப் பெயர்த்து எடுத்துப் புதிதாக உயர்த்திக் கட்டப்பெற்ற கோயிற் கருவறையில் நிறுவி குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
தேவகோட்டை நகரத்தார்கள் இக்கோயிலைப் புதிதாகக் கட்டிக் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். கோயில் திருப்பணியுடன், கோயில் அருகே வேதபாடசாலையும் அமைத்துள்ளனர்.



யாத்திரிகர் அனைவரும் இன்று மாலை அருள்மிகு ஏடகநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தோம். தேவகோட்டை உயர்திரு. இராம. பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் யாத்திரிகர் அனைவரையும் அழைத்துச் சென்று வழிபாடு செய்து வைத்தார். கோயில் திருப்பணிகளை விளக்கிக் கூறினார்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

புதன், 18 ஏப்ரல், 2018

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்


விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் அவர்களால் பாடப்பட்டது.  விநாயகப் பெருமான் தோற்றம் 
யோகாசன மூச்சுப் பயிற்சி 
முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

குருசாமி, ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள், வலையபட்டி, பொன்னமராவதி


விநாயகர் அகவல் (பாடல்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை
யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

-------------------------------------------
பச்சைக்காவடி அவர்களது தலைமையிலான இராமேச்சுரம்-காசி பாதயாத்திரை நாட்களிலும், அறுபடைவீடு பாதயாத்திரை நாட்களிலும் அதிகாலை எழுந்ததும் மேற்கண்ட விநாயகர் அகவல் பாடலைப் பாடிய பின்னரே பாதயாத்திரை துவங்கும்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் முதலில் பாடத் துவங்க யாத்திரிகர் அனைவரும் தொடர்ந்து பாடிடுவோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 12 ஏப்ரல், 2018

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில்


காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில் ஆண்டாண்டு காலமாக நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பெற்று குடமுழுக்கு நடத்தப்பெற்று வருகிறது.

நகரத்தார்கள் திருப்பணி நடைபெறாத ஆலயமே இல்லை யென்று கூறும் அளவிற்கு அனேக ஆலயங்களைச் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் சில.