புதன், 25 ஏப்ரல், 2018

அறுபடைவீடு பாதயாத்திரை, திருவேடகம், துன்முகி சித்திரை- 14 (27.04.2016) புதன் கிழமை

ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 
அறுபடைவீடு பாதயாத்திரை (முதலாம் ஆண்டு)




முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.
இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க,
நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க,
பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற
வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின்
அறுபடைவீட்டிற்கான ஆன்மிகப் பாதயாத்திரை.

குருசாமி பச்சைக் காவடி அவர்களும், அவருடைய அடியார்கள் நாங்கள் இருபது பேரும், சமையல்காரர் மூவரும், அன்னதான ஊர்த்தி ஓட்டுநர் ஒருவரும் என நாங்கள் மொத்தம் 25 நபர்கள்.
அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை பயணத்தின் மொத்த தூரம் 1141 கி.மீ. மொத்தம் 50 நாட்கள் பயணம் எனக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி யாத்திரை 07.04.2016 அன்று காலை பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு அழகர்கோயில், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு பழனி சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி சித்திரை- 14 (27.04.2016) புதன் கிழமை

இன்று அதிகாலை 02.30 மணிக்குக் கூத்தியார்குண்டு ஊரில் இருந்து புறப்பட்டு கொடிமங்கலம் வழியாகத் திருவேடகம் (23 கி.மீ.) காலை 07.45 மணிக்கு வந்து அடைந்தோம். சொக்கலிங்கம் சுவாமிகள் மடத்தில் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்துத் தங்க வைத்தனர். வைகை ஆற்றின் தென்கரையில் காலை 07.00 மணி அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.




சொக்கலிங்கம் சுவாமிகள் மடம் தென்னந்தோப்புகளுக்கு இடையே இருந்த காரணத்தினால் இன்று அதிகமான வெயிலை உணர முடியவில்லை.
இந்த இடத்தை தேவகோட்டை உயர்திரு. இராம. பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த மடத்தின் உரிமையாளர் தேவகோட்டை உயர்திரு. A. மாணிக்கம் செட்டியார் அவர்கள் வந்திருந்து யாத்திரிகர் அனைவருக்கும் பழங்கள் கொடுத்து உபசரித்தார்.




திருவேடகம் உயர்திரு. பாலு அவர்கள் மதியவிருந்து அளித்து உபசரித்தார். திருவேடகம் உயர்திரு. பாண்டி அவர்கள் யாத்திரிகர்களுக்கு இரவு உணவு வழங்கி உபசரித்தார்.

திருவேடகம் வரும் வழியில் அதிகாலையில் திருஞானசம்பந்தர் வழிபாடு செய்த அருள்மிகு ஸ்ரீ உமாமகேசுவரி உடனாய ஸ்ரீ மணிகண்டேசுவரர் கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம். அதனை அடுத்துக் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருள்மிகு எல்லம்மன் திருக்கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம்.



கொடிமங்கலத்தைக் கடந்து வரும் போது நீண்டு நேராக உள்ள நாகமலையை நன்றாகக் காணமுடிந்தது.



பிரளயகாலத்தில் கடல் கரையைக் கடந்து (சுனாமி) மதுரையை அழித்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இவ்வாறு மதுரையைச் சுனாமி அழித்த காலத்தில் கடலால் அடித்துவரப்பட்ட மண்ணானது ஆப்புடையார் (திருவாப்புடையார்) சுயம்புலிங்கத்தில் தடுக்கப்பெற்று, மதுரைக்கு மேற்கே ஒரு நீண்டதொரு மலைத்தொடரை உருவாக்கியுள்ளது என்பது என் கருத்து. நாகமலை என்று பெயர் கொண்ட இந்த நீண்ட மண்மலையானது, “மதுரைக்கு வந்த சுனாமி“ என்ற எனது கட்டுரைக்குப் பொருள் சேர்க்கும் வகையில் எனக்குத் தோன்றியது.

சோழவந்தான் அருகே நாகதீர்த்தம் உள்ளது. மாவலிங்கமர அடியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீசுவரர் கோயில், குருவித்துறையில் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோயில் உள்ளன.



யாத்திரிகர் அனைவரும் வைகை ஆற்றைக் கடந்து சோழவந்தான் செல்லும் போது சூரியன் நன்றாக ஒளிவிடத் துவங்கியிருந்த்து. அனைவரும் ஞாயிறு வழிபாடு செய்துகொண்டு வைகை ஆற்றைக் கடந்தோம்.



“ஏடகநாதர்“ மிகவும் பழைமையான சுயம்பு லிங்கம். திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏடுகள் ஆற்று வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கரையேறிய இடத்தில் இருந்த காரணத்தினால் “ஏடகநாதர்“ என்ற காரணப்பெயர் உண்டானது. இதனால் ஊருக்குத் திருஏடகம் (திருவேடகம்) என்ற காரணப் பெயர் உண்டானது.
திருஞானசம்பந்தர் காலத்தில் கட்டப்பெற்ற கோயில் என்பதால் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. சுயம்புலிங்கங்கள் பூமிக்குள் ஊடுறுவி இருக்கும். இவற்றை எளிதில் பெயர்த்து எடுக்க முடியாது. இருப்பினும் ஏடகநாதரை மிகவும் சிரமப்பட்டுப் பெயர்த்து எடுத்துப் புதிதாக உயர்த்திக் கட்டப்பெற்ற கோயிற் கருவறையில் நிறுவி குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
தேவகோட்டை நகரத்தார்கள் இக்கோயிலைப் புதிதாகக் கட்டிக் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். கோயில் திருப்பணியுடன், கோயில் அருகே வேதபாடசாலையும் அமைத்துள்ளனர்.



யாத்திரிகர் அனைவரும் இன்று மாலை அருள்மிகு ஏடகநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தோம். தேவகோட்டை உயர்திரு. இராம. பழ. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் யாத்திரிகர் அனைவரையும் அழைத்துச் சென்று வழிபாடு செய்து வைத்தார். கோயில் திருப்பணிகளை விளக்கிக் கூறினார்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக