வெள்ளி, 8 ஜூன், 2018

ஹேவிளம்பி 2017 வருடம், ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை

முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.

ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 
அறுபடைவீடு பாதயாத்திரை
ஹேவிளம்பி 2017 வருடம்


இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க, பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீட்டிற்கான இரண்டாம் ஆண்டு ஆன்மிகப் பாதயாத்திரை.
பாதயாத்திரை துவக்க நாளான இன்று வைகாசி 25 (08.06.2017) வியாழன் காலை  வைரவன்பட்டியில் வழிபாடு.

வழிபாடு முடிந்து, காலை மணி 8:10க்கு பிள்ளையார்பட்டி சேதுஅம்பலம் வீட்டில் வரவேற்பு, பாதபூசை, காலை உணவு.


மாலை பிள்ளையார்பட்டியில் வழிபாடு.  பாதயாத்திரை துவங்கியது.  வழியில் ஐயா பிச்சக்குருக்கள் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஓய்வு, இரவு தங்கல்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 7 ஜூன், 2018

காசி பாதயாத்திரை, புதுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம்.

இராமேசுவரம் காசி பாதயாத்திரை

அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத
ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம்
புதுக்கோட்டை


















புதுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம். ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் இராமேச்சுரம் - காசி (110 நாட்கள்) பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.
பாதயாத்திரையின் போது, 07 சூன் 2014 அன்று இந்தக் கோயிலுக்கு யாத்திரிகர்களுடன் வந்து வழிபாடு செய்து கொண்டார். ராசகோபுரம் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அருகில் உள்ள தெப்பக்குளத்தைத் தூர் எடுத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்தத் தேப்பத்தில் இரண்டு அடி உயரத்திற்கும் மேலாகக் களிமண் தேங்கி இருந்த காரணத்தினால், இதில் குளிக்கும் பலரும் மூழ்கி இறந்தனர். இதில் இறங்கும் ஆடுமாடுகளும் மூழ்கி இறந்துள்ளன. எனவே இந்தத் தெப்பக்குளத்தின் களிமண்ணை முற்றிலுமாக அள்ளி எடுக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

https://goo.gl/maps/vkjpmLwSroM2


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 6 ஜூன், 2018

திருத்தணிகையில் மொட்டை போட்டுக் கொள்ள வேண்டுமா? கூடாதா? (என்னிடம் கேட்டால் ?)

திருத்தணிகையில் 
மொட்டை போட்டுக் கொள்ள 
வேண்டுமா? கூடாதா? 

(என்னிடம் கேட்டால் ?)



பழனியில் மொட்டை போட்டுக்கொண்டேன். 
ஆனால்,திருத்தணிகையில் மொட்டை போட்டுக் கொள்ளவில்லை!
இதற்கு என்ன காரணம்? என்று என்னிடம் கேட்டனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை. இருபது அடியார்களை அழைத்துக் கொண்டு பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் பங்குனி 25ஆம் நாள் (07.04.2016) வியாழக்கிழமை அன்று பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் வழிபாடுகளை முடித்துக் கொண்டு சித்திரை 19ஆம் நாள் (02.04.2016) திங்கள் கிழமையன்று பழநி சென்று சேர்ந்தோம். அடியார் அனைவரும் பழனி பாலதண்டாயுதபாணியை நினைந்து மொட்டைபோட்டுக் கொண்டோம். பின்னர் பழனியிலிருந்து புறப்பட்டு சுவாமிமலை வழிபாட்டை முடித்துக் கொண்டு வைதீசுவரன்கோயில், சிதம்பரம், புதுச்சேரி, திண்டிவனம், காஞ்சிபுரம் வழியாக வைகாசி 16ஆம் நாள் (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருத்தணிகை சென்று சேர்ந்தோம். அடியார் பலரும் முருகனை நினைந்து வேண்டி மொட்டை போட்டுக் கொண்டனர்.

ஆனால் நான் மொட்டை போட்டுக் கொள்ளலாம், முகச்சவரம் மட்டும் செய்துகொண்டேன். யாத்திரையில் என்னுடன் வந்த அத்தனை அடியாரும் இதற்கான காரணத்தைக் கேட்டு என்னைத் துளைத்து எடுத்து விட்டனர். எம்பெருமான் முருகப் பெருமான் ஆறுபடைவீடுகளில் இருந்து அருளினாலும், ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு சிறப்பான காரணத்திற்காக எழுந்தருளியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் தேவசேனையைத் திருமணம் செய்து கொள்கிறார். திருச்செந்தூரில் வீரவேல் ஏந்தி அசுரனை வதம் செய்கிறார், பழனியில் தாய்தந்தையருடன் கோபம்கொண்டு முற்றும் துறந்து ஆண்டியாய் நின்கிறார். சுவாமிமலையில் தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்கிறார், திருத்தணிகையில் வள்ளியை மணம் புரிகிறார், வள்ளி தேவசேனை உடனாகப் பழமுதிர்சோலையில் வீற்றிருந்து அருளுகிறார்.
இதில் பழனியில் முருகப்பெருமான் முற்றும் துறந்து ஆண்டிக் கோலத்தில் இருப்பதால், அடியாரும் அவர்போன்று தலைமுடியையை மழித்து உத்திராட்சம் தரித்து ஓராடையுடன் சென்று அவரை வழிபடுவதே சிறப்புடையது. அதேபோன்று, திருத்தணிகையில் வள்ளியை மணம் புரிந்து கொண்டிருப்பதால், நாமும் ஒரு திருமணத்திற்குச் செல்வது போன்ற உடையலங்காரத்துடன் சென்று வழிபடுவதே சாலச் சிறந்தது. எனவேதான் நான் மொட்டைபோட்டுக் கொள்ளவில்லை என்று கூறினேன்.

ஊர் உலகத்தில் எத்தனையோ கோடனுகோடி அடியார்கள் முருகனுக்கு உள்ளனர். அவர்களில் முக்காலமும் அறிந்து உணர்ந்த ஞானிகளும் உள்ளனர். அவர்கள் எல்லாம் சொல்லாத விளக்கத்தை, நாட்டில் யாருமே கடைப்பிக்காத காரியத்தைத் தாங்கள் புதிதாகக் கூறுகின்றீர்களே என்று கேட்டனர்.

முருகனின் மெய்யடியார்கள் எல்லாம் திருத்தணிகையை எவ்வாறு உணர்ந்து கொண்டனர் என்பது பற்றி நான் ஏதும் அறியேன்.
ஆனால் நான் அறிந்து உணர்ந்து கொண்ட வகையில், முருகன் வள்ளியை மணம்புரிந்த இடம் என்பதால், திருமணத்திற்கு எப்படி மொட்டையடித்துக் கொண்டு செல்வதைத் தவிர்க்கிறோமோ, அதேபோன்று திருத்தணியில் எம்பெருமான் முருகனை, சண்முகனை வணங்கச் செல்லும் போது மொட்டைபோட்டுக் கொள்ளாமல் நல்ல அலங்காரத்துடன் செல்லவேண்டும்
என்றேன்.
அடியார்கள் யாரும் இந்த விளக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டதாகக் கூறவும் இல்லை.
இது குறித்து உங்களது கருத்து என்ன? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்