வியாழன், 17 செப்டம்பர், 2020

18.09.2014 காசி யாத்திரை - 116 ஆம் நாள், புரட்டாசி 2

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 116 ஆம் நாள் - புரட்டாசி 2 (18.09.2014) வியாழக் கிழமை.

பல்குனி ஆற்றின் கரையில் உள்ள புனித விஷ்ணு கயாவில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும் என  அதிகாலையில் எழுந்து யாத்திரிகர் பலரும்  இன்று கயாவிற்குப் பயணம் ஆனோம். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் மற்றும் சில யாத்திரிகர்களும் காசியிலேயே தங்கியிருந்தனர்.

காலை 7.31 
வண்டியில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டே பயணம் செய்தோம்.  காசி முதல் கயா வரையில் சுமார் 250 கி.மீ. தொலைவிற்கும் சிமிண்டில் நான்குவழிச் சாலை அருமையாகப் போட்டுள்ளனர்.  அலுப்பில்லாத பயணம்.  தீடிரென வண்டியின் வேகம் வெகுவாகக் குறைந்தது.  கண் விழித்துப் பார்த்தால் 7.30 (ஏழரை) மணி. ஏழரைபோல் லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.   நல்லவேளை ஓட்டுநர் திறமையால் தப்பித்தோம்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு, சற்று நன்கு முழித்துப் பார்த்தால், எங்களது வண்டியின் ஓட்டுநர் வண்டியை வலதுபக்க (ஒருவழி)ச் சாலையில் ஓட்டி வருகிறார் என்பது புரிந்தது.  ஒருவாராக அவருக்குப் புரியும்படிப் பேசி, வண்டியை இடபுறம் உள்ள சாலையில் செலுத்தச் செய்து பயணத்தைத் தொடர்ந்தோம்.


258 km
https://goo.gl/maps/CP3CPehKM8uvqMWW8


பகல் 10.01 
காலை 10.00 மணிக்கு கயாவில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம்.  

பகல் 10.02

சத்திர நிர்வாகி எங்களை வரவேற்றார்.  எங்களுக்கான காலை உணவை எடுத்து வைத்திருந்தினர்.  சிலர் தர்பணம் கொடுத்தபின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் காலை உணவு சாப்பிட வில்லை.

பகல் 10.09
சத்திரத்தில் தங்குவதற்கும் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் வசதிகள் இருந்தன.

பகல் 10.37 

10.30 மணிக்கு பல்குனி ஆற்றிற்குத் தர்பணம் கொடுப்பதற்காகச் சென்றோம்.   சத்திரத்தில் இருந்து பாண்டாக்களுக்கு அலைபேசியில் பேசித் தகவல் சொல்லிவிடுகின்றனர்.  எனவே தர்பணம் கொடுப்பதற்குப் பாண்டாக்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

மணி 11.41 

தர்பண காரியங்கள் செய்வதற்காக தென்னிந்தியருக்கு தனியாக இடவசதி உள்ளது. உடிப்பி பட்கள் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியருக்கு ஏற்பாடு செய்யும் பண்டாக்கள் அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள்.   

தர்பணம் செய்யும் இடத்தில் தமிழர் கூட்டம் அதிகம் இருந்தது.

கயாவில் தர்ப்பணம் செய்யும்போது அம்மாவுக்காகத் தனியாக 12 பிண்டங்கள் வைக்கின்றனர்.  அப்பொழுது தாயானவள் அவளது குழந்தைகளுக்காக என்னென்ன வேதனைகளை அனுவித்திருப்பாள் என்று விவரித்து,  தனக்காகப் பட்ட ஒவ்வொரு வேதனைக்கும் ஒவ்வொரு பிண்டம் வைக்கும்போதும் நம் விழிகளில் தானாகவே நீர் பெருக்கெடுக்கும்.  

கயாவிலும் பத்ரியிலும் ஸ்ராத்தம் செய்தபோதும்,  வருடாவருடம் செய்யும்  “வர்ஷச்ராத்தம்” விடுபடக்கூடாதென்றும், அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் பாண்டா விளக்கம் கூறினார்.

மணி 12.36 
பல்குனி ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் (உத்தரவாகிணியாகப்) பாய்ந்து செல்கிறது.  ஏராளமானோர் அவரவர் முன்னோர் பொருட்டுத் தர்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.   தர்பணம் கொடுத்தபின்னர் இங்குள்ள விஷ்ணு கோயிலில் அட்சயவடத்தில் வழிபாடு செய்துகொண்டோம்.

இங்கிருந்து புறப்பட்டு ஹரித்வார் வழியாக பத்ரி சென்று, அங்கும் அலக்னந்தா கரையில் ஸ்ராத்தம் செய்கின்றனர். பிரம்ம கபாலத்தில் பிண்டம் கொடுக்கலாம் என்றனர்.   ஆனால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளுடன் வரவில்லை.  இன்றே காசிக்குத் திரும்பிச் செல்ல வேண்டி இருந்த காரணத்தினால் நாங்க்ள் அலக்னந்தா செல்லவில்லை.

நகரத்தார் சத்திரத்தில் மதிய உணவு.  
அதன்பின்னர் புத்தகயா சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
அங்கிருந்து பயணமாகி காசிக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக