ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

21.09.2014 காசி பாதயாத்திரை - 119 ஆம் நாள், புரட்டாசி 5

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 110 நாட்கள் பயணம் செய்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து கொண்டிருந்தோம். நேற்று அருள்மிகு காலபைரவர் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று  வழிபாடு செய்து எங்களது பாதயாத்திரையை நிறைவு செய்தோம்.

இராமேசுவரம் திருப்புதல் -
இன்று  119 ஆம் நாள் - புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக் கிழமை.  

குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதானவண்டியில் திரும்பி வருவதாகவும், மற்றபிற யாத்திரிகர் அனைவரும் காசி-இராமேசுவரம் தொடரியில் பயணம் செய்வதாகவும் குருசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி மற்றபிற யாத்திரிகர் அனைவரும் மாலை 7.00 மணிக்குக் காசியில் இருந்து இராமேசுவரத்திற்குப் பயணம்.  நேற்று மாலை நேரத்தில் காலபைரவரைக் கும்பிட்டுவிட்ட காரணத்தினால் இனிமேல் அருள்மிகு காசி விசுவநாதர் உட்பட, காசியில் உள்ள பிற கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் எனக் குருசாமி அவர்கள் அறிவுரை வழங்கினார். 

காசியில் உள்ள கடைகளுக்குச் சென்று அவரவருக்கு வேண்டிய திண்பண்டங்களையும் மற்றபிற பொருட்களையும் வாங்கி மூடையாகக் கட்டி வைத்துப் பயணத்திற்கு அனைவரும் ஆயத்தமானார்கள்.   தொடரியில் படுக்கைக்குக் கீழே வைப்பது போன்று மிகவும் குறைவான உயரத்தில் மூடையாகக் கட்டி வைத்தனர்.

கீழே கடைகள்,  மாடியில் ஸ்ரீ பிரகஸ்பதி கோயிலும் இருந்தது.  கோயில் இடத்தில் கடையா? கடையின் மாடியில் கோயிலா? என்ற சிந்தனைகளுடன் கடைவீதியில் காசிஅல்வா, தேன்நெல்லி, காசி லட்டு, காசி மிட்டாய், அப்பளம் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்தோம்.

ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திரத்தில் பயணத்தின்போது சாப்பிடுவதற்குத் தேவையான உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்.  பயணத்தின்போது இந்த உணவுப் பொட்டலங்கள் பசியைப் போக்கின.

மாலை 6.00 மணிக்குச் சுபஹோரை நேரத்தில் யாத்திரிகர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து காசி தொடரி சந்திப்பு நிலையத்தை அடைந்தோம்.   சரியான நேரத்தில் வண்டி புறப்பட்டது.  எல்லோரும் அவரவர் உறவினர்களுக்குத் தொலைபேசி வாயிலாக அவரவர் வருகையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.  “காசிஸ்ரீ” என்ற பட்டத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக