ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

நகரத்தார் மாண்பு, வட்டகை கூட்டம்,

நகரத்தார் மாண்பு, வட்டகை கூட்டம்

M.சூரக்குடி, காசிஸ்ரீ, கரு.சுப.சீ. மாதவன் செட்டியார் 

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் எல்லோருக்கும் பொதுவான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் 'வட்டகை கூட்டம்', அதாவது 64 ஊர் வட்டகை கூட்டம் கூட்டுவார்கள் . அப்படி கூட்டக் கூடிய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் . ஆனால் சமீபத்திய காலத்தில் அப்படி ஒரு கூட்டம் கூட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னாள் அப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மேற்படி கூட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோவிலூரில் நடைபெற்றதாகவும் அது சமயம் அனைத்து ஊர் நகரத்தார்களும் கூடியிருந்து கூட்டம் ஆரம்பிக்க இருந்த நேரம் "காக்கா வெள்ளையன் செட்டி" என்ற செட்டியார் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குதிரையில் வேகமாக வந்ததாகவும், குதிரை வேகமாக வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் நகரத்தார்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகாமையில் வந்து நிறுத்தியதில் குதிரை பிளறி நின்றதால் தூசி கிளம்பி அனைவர் மீதும் படிந்ததால் அனைவரும் கோபமாகி "வெள்ளையஞ் செட்டி நகரத்தார்களை மதிக்கவில்லை, மதிக்காமல் நடந்து கொண்டதால், அவர் நகரத்தார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அபராதம் கட்ட வேண்டும் " என்று ஒரு மனதாகத் தீர்மானம் போட்டார்களாம், ஆனால் அதற்கு வெள்ளையஞ் செட்டி ஒத்துக் கொள்ளாமல் வாதம் செய்தாராம். அவருக்கு ஆதரவாக சிலரும் வாதம் செய்தார்களாம். அப்போது நகரத்தார்கள், "ஒன்று மன்னிப்பு கேள் அல்லது அபராதம் செலுத்து. தவறினால் சாதி முறைப்படி தள்ளி வைப்போம்" என்று எச்சரித்தார்களாம். அதற்கும் ஒத்து வராததால் இறுதியில் காக்க வெள்ளையஞ் செட்டியையும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களையும் சேர்த்து சுமார் 22 புள்ளிகளை சாதி முறைப்படி தள்ளி வைப்பதாக அறிவித்து கூட்டம் முடிக்கப்பட்டதாக ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.
கோவிலூர் மடத்தில் உள்ள பழைய பதிவு ஏடுகளில் இதுபற்றிய விபரம் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

அன்று தள்ளி வைக்கப்பட்ட 22 புள்ளிகளும் நான்கு தலைமுறைகளுக்கு பிறகு இப்போது 2000 புள்ளிகளாக தேவகோட்டைக்கு பக்கத்தில் S. சொக்கநாதபுரம் குமாரவேலூர், சீனமங்களம், சண்முகநாதபட்டிணம், M.சூரக்குடி, ஏரியூர், O.புதூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் தங்களையும் "நகரத்தார்கள்தான் " என்று அறிவித்து தங்கள் திருமணங்களுக்கு நகர கோயில் மாலை சந்தனம் கிடைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக நகரத்தார்களிடம் கோரிக்கை வைத்து பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேவகோட்டையிலிருந்து வெளி வரும் மாத இதழ் "அப்பச்சி " என்ற பத்திரிகையில் மேற்படி இதழின் ஆசிரியர் அப்பச்சி சபாபதி அவர்கள் இதன் விபரங்களை மேற்படி பத்திரிகையில் விரிவாகவும் விபரமாகவும் எழுதி இருக்கிறார்கள். இதற்கு ஆதரவாக பல நகரத்தார்களிடம் இருந்து ஆதரவு கடிதம் எழுதி மேற்படி பத்திரிகையில் பதிவு செய்து வருகிறார்கள். நகரத்தார்களின் முக்கியமான பெரியவர்களை பலமுறை சந்தித்து முறையிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

நகரக் கோயில்கள் ஒன்பதற்கும் நேரில் சென்று விபரங்களைச் சொல்லி மாலை சந்தனம் கேட்டுள்ளார்கள். எல்லாக் கோயில்களிலுமே முதலில் மாத்தூர் கோயிலில் மாலை சந்தனம் பெறச் செய்யுங்கள், மற்ற கோயில்களிலும் பெறலாம் என்று சொல்லியுள்ளார்கள்.  அதன்படி சில மாதங்களுக்கு முன் மாத்தூர் கோயிலில் கூடிய கூட்டத்திற்கு தேவகோட்டை ஜமீன்தார் அவர்கள் மூலம் கோரிக்கை வைத்ததற்கு மாத்தூர் கோயில் பங்காளிகள் நாங்கள் தனித்து முடிவு எடுக்க முடியாது. எல்லோரையும் கலந்து பேசி கோவிலூர் சாமிகள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அதன்படி முடிவு செய்வோம் என்று சொல்லி உள்ளார்கள்.

காரைக்குடி பட்டுவேட்டி இராமநாதன் செட்டியார் அவர்கள், நகரத்தார்கள் வரலாற்றை ஆரம்பகாலம் முதல் தொடர்கட்டுரையாக அப்பச்சி இதழில் எழுதி வருகிறார்கள்.  அவர்கள் நகரத்தார்களின் வரலாற்று சம்பவங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.  இது சம்பந்தமாக வெளிநாடு களுக்கும் சென்று ஆதாரங்களைச் சேகரித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது .
தங்கள் முன்னர்கள் செய்த தவறுக்கு வருந்தி நகரத்தார்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவும் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.
நற்பண்புகளுக்கும் நல் நிருவாக பொறுப்புகளுக்கும் தானதருமங்களுக்கும் பெயரும் புகழும் பெற்ற சமூகமாக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் விளங்கி வருபவர்கள்.

அதற்கு எடுத்துக் காட்டாக இந்த விசயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
M.சூரக்குடி கரு.சுப.சீ. மாதவன் செட்டியார் ,
மெயின் ரோடு,
ஆலத்தூர் P.O.,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி 093630 73151
வலையபட்டி பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேஸ்வரம் காசி 11ஆவது பாதயாத்திரையில் உடன் பாதயாத்திரையாக 26.05.2014 புறப்பட்டு 12.09.2014 அன்று எல்லா சாமிகளும் நல் ஆரோக்கியத்துடன் காசி வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் கங்கையில் தீர்த்தமாடி காசி விசுவநாதரை தரிசித்த மகிழ்ச்சியுடனும் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த விஷயமாக தங்களுடன் கலந்து உரையாடல் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

---------------------------------------------

காப்பியக் கவிஞர் ஐயா மீனவன் அவர்களின் கருத்து -

காசிப் பாதயாத்திரையை வெற்றிகரமாக முடித்து வந்துள்ள காளை அவர்களே, 

உறுதிக் கோட்டை நகரத்தாரைச் சேர்த்துக் கொள்வது பற்றிய கருத்துரையைக் கண்டேன்.  வட்டகைக் கூட்டம் 96 ஊர்க் கூட்டம் என்று கூறுவர்.  96 ஊர் என்பது இன்று 74 ஊர்களாகச் சுருங்கி விட்டது.  இவற்றைப் பின்னர்த் தொடர்ந்து வருங்கால கட்டத்தில் எழுதுகின்றேன்.  அப்படிப்பட்ட ஊர்க் கூட்டம் சமீப காலத்தில் நடத்தப்படவில்லை என்று எழுதி உள்ளீர்கள். இதுவரை மூன்று கூட்டங்கள் நடந்துள்ளன.  அனைத்துக் கூட்டங்களும் கோயிலூரில்தான் நடந்தன.  முதற் கூட்டம் நட ந்த காலம், நான் பிறப்பதற்கு முன்.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்.அதில் எடுத்த முடிவுகள்  ஒரு சிறு கையேடாக வெளி வந்தது.   அது கோயிலூர் நூலாகத்தில் நான் கண்டு
படித்துள்ளேன்.   அதில் வெளிவந்த முடிவுகள் பல எனக்குத் தெரிந்த வரையில் பின்  பற்றப்படவில்லை.   இரண்டாவது கூட்டம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் அதாவது  கோயிலூர் மடத்தின் ஒன்பதாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் இராம நாத சுவாமிகள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.  அதுவும் 3 நாள்கள் நடைபெற்றது.  அதில் எடுத்த முடிவுகளும் நூலாக அச்சாகி வந்து மேற்படி மடாலயத்தில் உள்ளது.  நான் அதில் கலந்து கொண்டு கவிதை பாடியவன்.  அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில கூட்டம் முடிந்து ஒருவாரத்திலேயே மீறப்பட்டது.  அதற்காக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அதன்பின் 12 ஆம் ஆதீனகர்த்தராக 
விளங்கிய சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் காலத்தில் நடந்தது.  அதுவும் 3 நாள்கள் நடைபெற்றது. இதுபற்றி நகரத்தார்களின் கருத்துக்களை அறிய விரும்பிய சுவாமிகள் பல ஊர் நகரத்தார் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
உறுதிக்கோட்டை நகரத்தாரை இணைப்பது பற்றிய பேச்சு அப்பொழுதுதான் வந்தது.  சுவாமிகள் அதற்கு ஆதரவு உடையவர்களாய் இருப்பினும் நகரத்தார்களின் கருத்தை  அறியப் பல நகரத்தார் சங்கங்களிலும் பேசிக் கருத்தறிய முற்பட்டார்கள்.  சில இடங்களில்  பலத்த எதிர்ப்புகளும் கிளம்பின. சுவாமிகளின் நேர்முக உதவியாளராக நான் இருந்தமையால் உடன் சென்றேன். இவ்வாறு செய்யச் சுவாமிகளுக்கு என்ன உரிமை உள்ளது என்று
கூடச் சிலர் பேசினர்.  கூட்ட நிகழ்வில் இதை ஒரு பொருளாகக் கொண்டு வந்தால் கூட்டத்தை நடைபெற விட மாட்டோம் என்றும், சிலர் சேர்க்கா விட்டால் நடத்த விட மாட்டோம் என்றும், பல பேச்சுக்கள் எழுந்தமையால் பலருடைய ஏகோபித்த கருத்தின்படி அது நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாமலேயே போயிற்று.இன்றும் பட்டுவேட்டி இராமநாதன் செட்டியார், உறுதிக் கோட்டையார் வகையைச் சார்ந்த சீனமங்கலம் சோமசுந்தரம் செட்டியார் போன்றோர், இன்னும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.  அண்மையில் மாத்தூரில் நடந்த கூட்டத்திலும்  இருவகையான கருத்துக்களால் எண்ணம் ஈடேறவில்லை என்று சீனமங்கலம் சோமசுந்தரம் செட்டியார் கூறினார்.  அவர்களைச் சேர்க்கலாம் என்பது என்போன்றார் சிலருடைய
கருத்தாகும். பலர் இக்கருத்தை எதிர்க்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

    இனி அடுத்த கூட்டம் கோயிலூரில் கூட்டப்படுமானால் சேர்ப்பை எதிர்பார்க்கலாம்.

காப்பியக் கவிஞர்-நா.மீனவன்
16 Sep 2014, 17:11
-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக