26.05.2014 காசி யாத்திரை
முதல்நாள் - என் அனுபவம் (நடையன்)
26.05.2014 அன்று காசிக்கான பாதயாத்திரையானது சுபஹோரை மாலை 3.00 மணிக்குத் தொடங்கியது. ஆனால் நான் தெற்குக் கோபுரத்திற்கும் மேற்குக் கோபுரத்திற்கும் அந்த வேகாத வெயிலில் நடந்ததையும் சேர்த்துக் கொண்டால், காசிக்கான எனது பாதயாத்திரை சுபஹோரை யான நன்பகல் 12.00 மணிக்கே தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும்.
வீடு உண்டு அலுவலகம் உண்டு என்றிருப்பேன். அலுவலுகத்தில் எனக்குக் குளிர்சாதனவசதி இருந்தது. எனவே வெயிலின் கொடூரம் என்றால் என்ன வென்றே தெரியாமலேயே இருந்தேன். இந்த யாத்திரையின் முதல்நாளே என்னை வெயில் வறுத்து எடுத்து விட்டது. யாத்திரையானது மதியம் 3மணிக்குத் துவங்கும்போது, மேற்கே சூரியன் சுட்டெரித்தது. அந்த வெயிலில்தான் தெற்குக் கோபுர வாயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கி இலட்சுமணதீர்த்தம் வந்து சேர்ந்தோம். இப்போது வெயிலின் கொடுமை குறைந்து விட்டது. அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
நடையன் -
இலட்சுமண தீர்த்தத்தில் இருந்து தங்கச்சிமடத்திற்குப் பயணமாகத் தயார் ஆனோம். அப்போது குருசாமி என்னை அழைத்துச் சாலையோரம் உடைந்து சிதறிக் கிடந்த பீர்பாட்டில்களின் கண்ணாடித் துண்களைக் காண்பித்தார். குருசாமி என்ன சொல்லவருகிறார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. புரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், நீங்கள் சொல்வதே சரி என்பதுபோன்று எனது தலையை ஆட்டிக் கொண்டு குருசாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
எனது கால்கள் நடந்து கொண்டிருந்தாலும், எனது மனம் குருசாமி அவர்கள் அன்று சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தது. வைகாசி 6 (20.05.2014) செவ்வாய்க் கிழமை யன்று, முதன்முதலாகக் குருசாமி அவர்களை நான் சந்தித்தபோது யாத்திரையில் நானும் கலந்து கொள்ள அனுமதி அளித்தார். அப்போது அவர் என்னிடம், யாத்திரையின் போது அவசியம் நடையன் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். எனக்குக் குருசாமி என்ன சொல்லுகிறார் என்று விளங்கவில்லை. நடையன் என்றால் என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், குருசாமி என்ன சொன்னாலும் சரியே என்ற எண்ணத்தில், சரி யென்று தலையாட்டி வைத்தேன்.
நடையன் என்றால் என்ன? என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், செருப்பு அல்லது காலணி என்று சொல்ல மாட்டார்கள், நடையன் என்று சொல்லுவார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அதாவது யாத்திரையின்போது அவசியம் செருப்புப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். புராணத்தில் பாதுகை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புனிதமான பாதயாத்திரையின் போது நடையன் ஏன் அவசியம் போட வேண்டும்? பண்டைய காலத்திலேயே பாதயாத்திரையின் போது, மரத்தினால் ஆன நடையனைப் பயன்படுத்தியுள்ளனர். நடையன் அணிந்துள்ளபடி சிற்பம் ஒன்று ஆவுடையார்கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது. காளையார்கோயிலுக்குச் சித்தமூர்த்தியாகச் சிவபெருமான் எழுந்தருளியபோது, சிவபெருமான் தந்தப்பாதுகை அணிந்து வந்ததாகக் காளையார்கோயில் புராணம் குறிப்பிடுகிறது.
விரதம் இருந்தும், வேண்டுதலுக்காவும் பழனி திருச்செந்தூர் திருத்தணி முதலான திருத்தலங்களுக்குப் பாதயாத்திரை செல்வோர் நடையன் அணிந்து கொள்வதில்லை. ஆனால் இந்தப் பாதயாத்திரை அனைத்தும் 10 அல்லது 20 நாட்களில் முடிந்து விடும். மேலும் இதுபோன்ற பாதயாத்திரை நாட்களில் அடியார்கள் கூட்டங்கூட்டமாகப் பெரும் எண்ணிக்கையில் நடந்து செல்வார்கள். எனவே சாலையோரம் எந்தவொரு கண்ணாடியோ முள்ளோ கிடக்காது. அப்படியே கிடந்தாலும் அவற்றை அடியார்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள். எனவே காலில் கண்ணாடியோ முள்ளோ குத்தும் என்பதற்கான வாய்ப்பே இல்லை.
ஆனால் இராமேசுவரம் காசி பாதயாத்திரைப் பயணத்தில், காசிக்குச் செல்லும் (NH 7) தேசிய நெடுஞ்சாலையில் காசிக்குப் பாதயாத்திரை செல்பவர்கள் மட்டுமே நடந்து செல்வார்கள். அருகில் இருக்கும் கிராமத்தினர்கூட மிதிவண்டியிலோ இருசக்கர வாகனத்திலோதான் செல்வார்கள். காசி பாதயாத்திரையின் போது நடையன் அவசியம் அணிந்து கொண்டு நடப்பதே தற்காப்பு ஆகும் என்று குருசாமி அவர்கள் கூறியுள்ளார் என்பதையும் அறிந்து கொண்டேன்.
தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களும், மற்றும் பிற வாகன ஓட்டுநர்களும் வண்டியில் இருந்தபடியே பீர் குடித்துவிட்டு, அந்தப் பாட்டில்களைச் சாலையோரும் தூக்கிப்போட்டு விடுகின்றனர். அது சாலையோரம் பரவிக் கிடக்கிறது. இராமேசுவரம் தொடங்கி, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய தென்மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் சாலையோரம் பீர்பாட்டில்கள் உடைந்து கிடப்பதை இந்தப் பாதயாத்திரையின் போது பார்த்தேன். மத்தியப்பிரதேசம் உத்திரப் பிரதேசம் ஆகியமாநிலங்களில் இவற்றைக் காண இயலவில்லை.(ஒருவேளை இந்த மாநிலங்களில் உள்ளவர்கள் பீர் பழக்கத்திற்கு அடிமையாகமல், பீடா பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பது காரணமாக இருக்கலாம்)
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் அவரவர் கால் அளவிற்கு ஏற்ப 5 ஜோடி நடையன்களை வாங்கி யாத்திரையின்போது இலவசமாகக் கொடுத்தார். கூடுதலான நடையன்களை இருப்பில் வைத்திருந்தார். தேவைப்பட்டால் அவற்றை எடுத்துக் கொடுப்பார். நடையன் தேய்ந்து போனாலோ, பிய்ந்து போனாலோ அவரவருக்கு வழங்கப்பட்ட புதிய நடையனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நடையன் மட்டுமல்ல, குடை, தொப்பி, தண்ணீர்ப்பாட்டில், பிரம்பு, டார்ச்லைட், போர்வை, ஜமுக்காளம், பற்பசை, பிரஸ், குளியல்சோப்பு, துணிதுவைக்கும் சோப்பு, தேங்காய் எண்ணை, கொசுவர்த்தி, கொசுவலை, கொடிக் கயிறு, சொக்காய்(சட்டை), வேட்டி, துண்டு என யாத்திரைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்குவார்.
காசி பாதயாத்திரைக்கு நடையன் மிகவும் முக்கியமானது, நடையன் இல்லாத நடைப்பயணம் ஆபத்தானது என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் நடையனால் ஒருவருக்குத் துன்பம் உண்டானது. அந்தக் கதையையும் சொல்கிறேன்……
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக