காசி யாத்திரை ( 29.05.2014 - 4ஆம் நாள்)
வைகாசி 15 (29.05.2014) வியாழக்கிழமை.
தேவிபட்டிணத்தில் அதிகாலை 3மணிக்கெல்லாம் பலரும் எழுந்து பயணத்திற்குத் தயாரானார்கள். சிலர் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்தார்கள். வழக்கமான நித்திய வழிபாடு முடிந்தவுடன், ஹார்லிக்ஸ் பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு யாத்திரிகர்கள் நடக்கத் தொடக்கினோம். மழை வரலாம் என்று கருதி அனைவரும் கையில் குடை எடுத்துக் கொண்டனர். வழியில் மங்கலம் அருகே காலை நேரத் தேனீர் அருந்தினோம். சனவேலி அருகே காலை உணவு உண்டோம். சனவேலியைக் கடந்து, சாலையோரம் உள்ள ஐயப்பன் கோயிலில் தங்கினோம். ( கோயில் இருப்பிடம் = MVQC+42 Sanaveli, Tamil Nadu) . கோயிலில் மின்சார மோட்டார் போட்டுவிட்டார்கள். சில யாத்திரிகர்கள் குளித்தோம். ஆனால் உப்புத் தண்ணியாக இருந்தது.
காலை மணி 10.30 அளவில் கோட்டக்கரை ஆற்றைக் கடந்து நடந்து வந்து கொண்டிருந்தோம். நல்ல வெயில்.
மதியம் சாப்பாடு.
மதியம் சாப்பாட்டிற்குப் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாடானை கைகாட்டியை நோக்கி நடக்கத் தொடக்கத் தொடங்கினோம். மாலைநேரத்தில் அருமையாகக் காற்று வீசியது. நானும் சிவாப்பாவும் கடைசியாக நடந்து வந்துகொண்டிருந்தோம். எங்களுக்கும் பின்னால் குருசாமி அவர்களும் திரு. அங்கமுத்து சாமியும் நடந்து வந்து கொண்டிருந்தனர். எங்களுக்கு முன்னால் நடந்து சென்ற அனைவரும் கைகாட்டியில் உள்ள ஒரு கடைக்கு அருகே எங்களுக்காக் காத்திருந்தனர். நாங்கள் கைகாட்டிக்கு வரும்போது மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கைகாட்டியில் உள்ள மருந்துக்கடையில் சில யாத்திரிகர்கள் மாத்திரைகள் வாங்கிக் கொண்டனர்.
கைகாட்டியைக் கடந்து சாலையின் கிழக்குப் பகுதியில் ஊரணி (ஊரணி இருப்பிடம் = https://goo.gl/maps/dbzX2UkU3wbsubXbA) அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. அதன் எதிரே உள்ள வீட்டில் தங்கினோம். சில யாத்திரிகர்கள் ஊரணியில் குளித்துவிட்டு வந்தனர். வீட்டில் இருந்தவர்கள் குருசாமியைக் கும்பிட்டு விபூதி வாங்கிக் கொண்டார்கள்.
இரவு உணவு. குருசாமி அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களையும் அழைத்து இரவு உணவில் கலந்து கொள்ளச் செய்தார்.
கடந்த ஆண்டு குருசாமி இங்கு வந்து தங்கியபோது, குருசாமி அவர்களுக்கு அருளிச் செய்தவாறு எதிர்பாராத வகையில் விசேஷம் நடைபெற்றது என்று குருசாமியிடம் கூறிக் கொண்டிருந்தனர்.
கடந்த ஆண்டு குருசாமி இங்கு வந்து தங்கியபோது, குருசாமி அவர்களுக்கு அருளிச் செய்தவாறு எதிர்பாராத வகையில் விசேஷம் நடைபெற்றது என்று குருசாமியிடம் கூறிக் கொண்டிருந்தனர்.
எனக்கு மிகவும் அசதியாக இருந்த காரணத்தினால் வீட்டின் மொட்டை மாடிக்குத் தூக்கச் சென்று விட்டேன். நாங்கள் தங்கியிருந்த வீடு சிறியது. அதன் மொட்டை மாடியில் சிலரும், கீழே சிலரும் தங்கினோம். கடுமையான வெயில் காரணமாக மொட்டைமாடி அதிகச் சுடாக இருந்தது. வெகுநேரம் ஆன பின்பே எனக்குத் தூக்கம் வந்தது.
https://goo.gl/maps/hvdgNhV8E1xQn728A
இன்றைய பயணம் தேவிபட்டிணத்திலிருந்து புறப்பட்டு சனவேலி வழியாகத் திருவாடானை கைகாட்டி அருகே உள்ள சின்னக்கீரமங்கலம் வந்து தங்குதல். சுமார் 36 கி.மீ.
4ஆம் நாள் - எனது அனுபவம் - யாத்திரை புறப்பட்ட முதல்நாள் நல்ல வெயில், எனது உடலில் இருந்த தெம்பு தீர்ந்து போனது. இரண்டாம் நாள் நல்லமழை, எனது உடலில் இருந்த தினாவெட்டு தீர்ந்து போனது.
மூன்றாம் நாள் நல்லவெயிலில் சுமார் 33 கி.மீ. நடைப் பயணம், மிகவும் சோர்ந்து தொத்தமாடு மாதிரி நடந்து வந்தேன். சிவாப்பாவுக்குச் செருப்புக்கடியால் நடக்கமுடியாமல் சிரமம், அதனால் மெதுவாக என்னுடன் நடந்து வந்தார். இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிக் கொண்டே நடந்து வந்தோம். எங்களுக்குப் பின்னால் குருசாமி நடந்து வந்து கொண்டிருந்தார். குருசாமி எங்களுக்குப் பின்னால் நடந்து வருவது மட்டுமே எங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. நான்காம் நாளான இன்றும் 36கி.மீ. பயணம். எனது உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து விட்டன. மொட்டைமாடியில் அசந்து படுத்தாலும் கடுமையான வெக்கை. தூக்கம் முழுமையாக இல்லாமல் போனது. உடலும் உள்ளமும் சோர்வடைந்த நிலையில், காசிக்கு நடக்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே எனது நடைப்பணயத்திற்குத் துணையாய் இருந்தது. அப்படியே தூங்கிப் போனேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக