அறுபடைவீடு பாதயாத்திரை 22/05/2016 தைலாபுரம்
12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை. சுவாமிமலையில் வழிபாடு முடித்து திருத்தணிகை செல்லும் வழியில் 22.05.2016 காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் வந்து சேர்ந்தோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம். பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
வைகாசி 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடந்த பயணக் குறிப்புகள் -
துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை
இன்று காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.
வழியில் பஞ்சவடி கோயில் எதிரே தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும், திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
மாலை 04.00 மணிக்கு யாத்திரிகர்கள் சிலர் புறப்பட்டுச் சென்ற தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து திரும்பினர்.
இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன். கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி. கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக