26.05.2014 காசி யாத்திரை முதல்நாள்
மூத்தவருடன் என் முதல் அனுபவம்
குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு 1ஆம் எண். யாத்திரிகர்களில் மிகவும் மூத்தவரான திரு. மதுரை திரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு 2ஆம் எண். இப்படியாக வயதுமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, மிகவும் இளையவரான ஆந்திரா திரு.சிவாப்பா அவர்களுக்கு 21 ஆம் எண். அடியேனுக்கு 18ஆம் எண். யாத்திரிகர் அனைவரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு 25.05.2014 அன்று இராமேசுவரம் சென்று சேர்ந்தோம். 26.05.2014 அன்று காலையில் இராமேசுவரத்தில் தீர்த்தமாடி முடித்து வழிபாடு செய்துவிட்டு மடத்தில் வந்து தங்கியிருந்தோம். என்னை வழியனுப்ப வந்திருந்த எனது உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த ஐயா கந்தசாமி அவர்கள் அவரது அலைபேசியைப் பிரித்துப் பிரித்து மாட்டிக் கொண்டிருந்தார். மிகவும் கவலையாகக் காணப்பட்டார். அவரது முக வாட்டத்தைக் கண்டு பொறுக்க மாட்டாமல், அவரருகில் சென்று என்னவென்று விசாரித்தேன். அவரது மகன் அவரைக் கூப்பிட்டுப் பேசினாராம். ஆனால் இவரால் அவரது மகனைத் திரும்பிக் கூப்பிட்டுப் பேச இயலவில்லையாம். மிகவும் வருத்தமாகக் கூறினார்.
அவரது அலைபேசியை வாங்கி என்ன என்று பார்த்தேன்.
அது மிகவும் பழையது. பிய்ந்து போன வெளியுறை. உடைந்து போன பின்பக்க மூடி. அதில் இருந்த ஒளித்திரை (display screen) வேலை செய்யவில்லை. அதை அவரிடம் சொன்னேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே. என் மகனுடன் எப்படிப் பேசுவது? என்று கேட்டார். உங்களது மகனின் எண்ணைச் சொல்லுங்கள், எனது அலைபேசியிலிருந்து அழைத்துப் பேசலாம் என்று சொன்னேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே. ஆனால் எனது மகனின் அழைபேசி எண் இந்த அலைபேசியில்தானே உள்ளது. அதைத்தானே பார்க்க முடியவில்லை என்று சொன்னார். யாத்திரை முழுதும் இதை வைத்துக் கொண்டு எப்படிச் சிரமப் படுவீர்கள்? மேற்குக் கோபுரம் அருகே செல்போன் கடை உள்ளது. அங்கே போய் இதைச் சரி செய்யலாம் என்றேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே, ஆனால் என் மகனுக்குத் தகவல் தெரிந்தால், இங்கே வந்து இதைச் சரிசெய்து கொடுத்துவிடுவான் என்றார். இன்னும் சிலமணி நேரத்தில் யாத்திரை ஆரம்பிக்கப் போகிறது. எனவே இங்குள்ள கடையிலேயே இதைச் சரிசெய்து கொண்டு யாத்திரைக்குத் தயாராக வேண்டியதுதான் என்றேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே, இந்த வேகாத வெயிலில் அந்தக் கடைக்கு நான் எப்படிச் செல்ல முடியும் என்று மிகவும் வருத்தமாகச் சொன்னார்.
ம்… சரி, உங்களது செல்போனைக் கொடுங்கள், நான் அந்தக் கடைக்கு எடுத்துச் சென்று சரிசெய்து கொண்டு வந்து கொடுக்கிறேன் என்றேன். என்னிடம் அவரது செல்போனைக் கொடுப்பதற்கு மிகவும் யோசித்தார். ஐயா, நல்லபடியாகச் சரிசெய்து கொண்டு வந்து கொடுக்கிறேன், வழியில் போன்பேச முடியாமல் சிரமப்படாதீர்கள் என்று பலமுறை சொல்லி, அவரைத் திருப்திப் படுத்தி, அவரது செல்போனை வாங்கிக் கொண்டு மேற்குக் கோபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
உச்சி வெயில், வெயில் என்றால் வெயில், அப்படியொரு வெயில். சும்மா வறுத்து எடுத்தது. செல்போன் கடைக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அந்தக் கடை பூட்டி யிருந்தது. அருகில் உள்ள கடைக்காரரிடம் விசாரித்தேன். இவ்வளவுநேரம் இருந்தார், இப்போதுதான் போயிவிட்டார். அவரது செல்போனில் கூப்பிடுங்கள் என்று சொல்லி, கடைக்காரரின் செல்போன் நம்பர் எழுதியிருந்த இடத்தைக் காண்பித்தார். அந்த எண்ணில் அவரை அழைத்தேன். சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார். காத்திருந்தேன், காத்திருந்தேன். சுமார் 25-30 நிமிடங்கள் ஆகிவிட்டது. வந்து சேர்ந்தார், கடையைத் திறந்தார். என்னிடமிருந்து அலைபேசியை வாங்கிப் பார்த்தார். டிஸ்பிலே புதிதாகத்தான் மாற்ற வேண்டும் என்றார். பரவாயில்லை மாற்றிக் கொடுங்கள் என்றேன். 5 நிமிடத்தில் சரி செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையைக் கொடுத்தேன். சாமி, நீங்கள் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டீர்கள். எனவே இந்த போனின் உறையையும் புதிதாக மாற்றித் தருகிறேன் என்று சொன்னார். அந்த செல்போனுக்குப் புதிய உறை மாற்றிக் கொடுத்தார். எனக்கோ காலதாமதம் ஆகிவிட்டதே என்ற கவலை. அந்த வேகாத வெயிலில் வேகவேகமாக வேர்க்க விறுவிறுக்க நடந்துவந்து விடுதியை அடைந்தேன்.
எல்லாரும் சாப்பிடுவதற்காகப் பந்தியில் உட்கார்ந்து இருந்தனர்.
குருசாமி அரோகரா சொல்லி முடித்தபின்னர்தான் அனைவரும் சாப்பிட வேண்டும். மிகவும் சரியாக, நொடிப்பொழுது நேரத்தில் எனக்கான இடத்தில் போய் அமர்ந்து விட்டேன். என்னப்பா இப்படியெல்லாம் தாமதப்படுத்துகிறாய் என்று குருசாமி கோபித்துக் கொண்டார். ஆனால் மறுநொடியில் அரோகரா சொல்ல ஆரம்பித்துவிட்டார். வழிபாடு முடிந்து மதிய உணவும் முடிந்தது. செல்போனைப் பெரியவரிடம் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தார், எவ்வளவு பணம் அப்பா, நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி அவரது பணப்பையை எடுத்தார். அதெல்லாம் பணம் வேண்டாம், உங்கள் கடைசித் தம்பி போல் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, செலவுத் தொகையை வாங்கிக் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். பலவாறு அன்பாக எடுத்துச் சொன்ன பிறகே அமைதியானர்.
அவர் அமைதியான மறு நொடியே ஆரம்பமானது அடுத்த பிரச்சினை. இந்த போனில் இருந்த உறை எங்கே? அதைக் கொடு என்று கேட்டார். அண்ணே, அந்த உறை மிகவும் பழைய உறை, கிழிந்து போய் இருந்தது, அதனால் அதையும் கடைக்காரர் மாற்றிக் கொடுத்துவிட்டார் என்றேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே, ஆனால் அந்தப் பழைய உறை எனக்கு வேண்டும் என்றார். அண்ணே, அது எதற்கு? அது அவசியம் வேண்டுமென்றால், மீண்டும் தெற்குவாசலில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டுமே என்றேன். ஆமாம் தம்பி, அந்தப் பழைய உறை எனக்கு அவசியம் வேண்டும், அதில் ஒரு முக்கியமான செல்போன் நம்பர் குறித்து வைத்துள்ளேன் என்றார்.
வேறு வழி, அந்தக் கொழுத்தும் வெயிலில் மீண்டும் தெற்குக்கோபுர வாசலில் இருந்து மேற்குக் கோபுர வாசலுக்கு நடந்து சென்று, கடையில் குப்பைக்கூடையில் கிடந்த அந்தப் பழைய கிழிந்து போன அந்தச் செல்போன் உறையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.
இதற்குள் யாத்திரிகள் அனைவரும் அன்னதான வண்டிக்கு முன் வரிசையாக நிற்க ஆரம்பித்து விட்டனர். நானும் கடைசி ஆளாகச் சென்று கடைசி வரிசையில் நின்று கொண்டேன். நல்லவேளை ஒருசில நிமிடங்கள் காலதாமதம் ஆகியிருந்தால் குருசாமி என்னைத் தேடியிருப்பார்.
திங்கள் கிழமை சுபஹோரை நேரமான மாலை மணி 3.00க்கு வழிபாடு ஆரம்பித்து குருசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் விபூதி கொடுத்தார். சுபவேளையில் காசிக்கான எங்களது பாதயாத்திரை இனிதே தொடங்கியது.
செல்போன் சரியான மகிழ்ச்சியில் அண்ணனும், அதைச் சரி செய்து கொடுத்த திருப்தியில் தம்பியும் யாத்திரையைத் தொடங்கினோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக