அறுபடைவீடு யாத்திரை
பயணக் கட்டுரை - நிறைவுப் பகுதி
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
துன்முகி வைகாசி – 15 (28.05.2016) சனிக் கிழமை
இன்று காலை 02.30 மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 13 கி.மீ. நடந்து காலை 07.00 மணிக்கு அரக்கோணம் சோதிநகரில் இருக்கும் குமாரராசா திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம். இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் திரு. பத்மநாபன் அவர்கள், அவருடைய நண்பர் அரக்கோணம் திரு.சோமசுந்தரம் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். ஆந்திராவிலிருந்து காசிஸ்ரீ சிவாப்பா அவர்களும் அவரது நண்பரும் அதிகாலையிலேயே திருத்தணிக்கு வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றனர். இன்று இரவு தினமணி பத்திரிக்கையின் நிருபர் வந்திருந்து பச்சைக்காவடி அவர்களைப் பேட்டி எடுத்துச் சென்றார்.
துன்முகி வைகாசி – 16 (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை
காலை மணி 05.40க்கு திருத்தணிகை சென்றடைந்தோம். திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார். திருத்தணிகை பரம்பரை குருக்கள் அவர்கள் நகரவிடுதிக்கு வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார்.
துன்முகி வைகாசி – 17 (30.05.2016) திங்கள் கிழமை
இன்று காலை 06.15 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்டு மலைக்கோயிலுக்குச் சென்றோம். காலை 8.00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்கு பெற்று சுவாமி தரிசனம் செய்தோம். அபிடேகத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்த மண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம். சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.
இந்த ஏற்பாடுகளை எல்லாம் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மேலும் பஞ்சாமிர்த அபிடேக காணிக்கையையும் அவர்களே செலுத்தினார்கள். காலை 09.30 மணிக்கு விடுதிக்குத் திரும்பி வைந்து காலை உணவு சாப்பிட்டோம். பிறகு குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரும் ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
மதியம் 12.30 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி, காசிஸ்ரீ தியாகராசன், ஓட்டுனர் ஆறுமுகம் மூவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு 01.00 மணிக்கு அன்னதான வண்டியில் திருத்தணியிலிருந்து திரும்பிப் புறப்பட்டனர். இரவு 11.00 மணிக்கு வலையபட்டியை அடைந்து வண்டியில் இருந்த சமான்களை எல்லாம் இறக்கி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர்.
திருத்தணியில் விடுதியில் இருந்த யாத்திரிகர்களும் சமையல்காரர்களும் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி தொடரி நிலையம் வந்து அங்கிருந்து 04.55 மணிக்கு புறப்பட்ட மின்வண்டியில் பயணித்து இரவு 07.30 மணிக்கு சென்னை மத்திய தொடரி நிலையத்தை அடைந்தோம். பின் அங்கிருந்து வண்டி மாறி சென்னை எழும்பூர் நிலையத்தை இரவு 08.00 மணிக்கு அடைந்தோம்.
எழும்பூர் நிலையத்தில் காசிஸ்ரீ தனசேகரன் அவர்களது மனைவி திருமதி.குமாரி அவர்கள் சாமிகளுக்கு வடை போண்டா குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்கள். இரவு பலகாரத்தை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் மருமகள் திருமதி.சாந்தி அவர்கள் கொடுத்து உபசரித்தார்கள்.
அனைவரும் சென்னை இராமேச்சுரம் விரைவு வண்டியில் காரைக்குடிக்குப் பயணித்தோம்.
துன்முகி வைகாசி – 18 (31.05.2016) செவ்வாய்க் கிழமை
காலை 05.00 மணிக்கு குருசாமி பச்சைக்க்காவடி அவர்கள் வலையபட்டியில் இருந்து அன்னதானவண்டியில் புறப்பட்டு காரைக்குடி தொடரி நிலையத்திற்கு வந்து காத்திருந்து விரைவு வண்டியில் வந்த யாத்திரிகர்களை வரவேற்று ஆசிர்வதித்தார். காரைக்குடி தொடரி நிலையத்திலிருந்து ஒரு சிற்றுந்து மூலம் யாத்திரிகர்கள் அனைவரும் புறப்பட்டு காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது இல்லத்தை அடைந்தோம். அங்கே அனைவரும் குளித்து காலைஉணவு சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு ஆலத்துப்பட்டிக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
பின்னர் வயிரவன்பட்டி வந்து வழிபாடு செய்து கொண்டு, நகரவிடுதிக்கு வந்து மதியஉணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தோம். மாலை 04.15 மணிக்கு வயிரவன்பட்டியில் இருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி வந்து அங்கு காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் வீட்டில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டோம். பிறகு பிள்ளையார்பட்டி சென்று அருள்மிகு கற்பகவிநாயகருக்கு நடந்த மாலைநேர அபிடேகத்தைப் பார்த்து சுவாமி தரிசனம் செய்து கொண்டோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம்.
“வாழ்கமன்னவன்செங்கோன்மழைமுகில்
வாழ்கநான்மறைவாணவர்கணானிலம்
வாழ்கவைதிகசைவமலர்த்திரு
வாழ்கவஞ்செழுத்துண்மைநன்மந்திரம்“
அறுபடைவீடு பாதயாத்திரை இறையருளால் இனிதே முற்றிற்று.
ஓம் சரவணபவ.
சுபம்
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
ஆறுபடைவீடு முருகனின் திருவருள் இந்தப் பயணக்கட்டுரையைப் படித்தோருக்கும் ஆகுக.
இவண்,
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக