முகநூல் நண்பர் Jagan Nath அவர்களின் பதிவு இது (27.03.2021)
Chandrapraba Ramakrishnan எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
ஏனுகுல வீராசாமி ஆளுமை
காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர்.
1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். இந்தப் பயண நூலின் ஆங்கிலப் பிரதி தற்போது கிடைக்கிறது. ஆனால் தமிழ் பிரதியைக் கண்டறியமுடியவில்லை. ஒருவேளை பழைய நூலகம் எதிலாவது இருக்ககூடும்
ஏனுகுல வீராசாமியின் தந்தை கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தவர். வீராசாமியின் ஒன்பது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தாய் தான் அவரை வளர்த்து படிக்க வைத்தார். பனிரெண்டு வயது வரை படித்த வீராசாமி சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது பன்மொழிப்புலமையால் துபாஷி வேலை கிடைத்தது. திருநெல்வேலி கலெக்டரிடன் துபாஷியாகச் சில காலம் வேலை செய்திருக்கிறார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்து அதில் பணியாற்றி வந்தார்.
இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி ஆங்கில அதிகாரி ஒருவர் வீராசாமிக்குத் தங்கத்தில் பொடி டப்பா செய்து பரிசளித்திருக்கிறார். குண்டூர் பஞ்சம் வந்தபோது இவர் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்து உதவியிருக்கிறார். மதராஸில் வசித்த இவர் கல்விப்பணியினை முன்னெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வந்தரான இவர் தண்டையார்பேட்டையில் வசித்திருக்கிறார்
தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் பயணநூல் தமிழில் தான் முதலில் வெளியாகியிருக்கிறது. பின்பு மராத்தியில் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகே இந்த நூல் தெலுங்கில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அவரே சில அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் அதை முடிக்க முடியவில்லை. தற்போது சீதாபதி மற்றும் புருஷோத்தம் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
இவரது காசி யாத்திரை நூலின் வழியே 1830 காலகட்டத்தில் வாழ்க்கை முறையினைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பயண வழிகளில் உள்ள இடர்கள், பயண ஏற்பாடுகள். ஆலயங்களின் சிறப்பு. உணவு வகைகள். கலைகள். மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள், சந்தை மற்றும் சுங்கச்சாவடிகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
இவருடன் பயணத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். இரண்டு பல்லக்கில் அவர்கள் செல்ல பின்னால் நான்கு மாட்டுவண்டிகளில் சுமைகள் ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. பயணத்தில் தனது பாதுகாப்பிற்காகப் பத்துபேரை வேலைக்கு வைத்திருக்கிறார் வீராசாமி. அவர்களுக்கு மாதம் ஏழு ரூபாய் சம்பளம். இவர்களுடன் கூடாரம் அமைக்க நாலு தனி ஆட்கள். சுமைகளை ஏற்றிச் செல்ல ஆறு மாடுகள். அதைப் பராமரிக்க இரண்டு ஆட்கள். காட்டுவழியில் பயணம் செய்யும் போது வழிகாட்டுவதற்காகப் போஸ்டல் ரன்னர் ஒருவர், வழிப்பறிக் கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களையும் தனி ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார். இப்படி ஒரு பட்டாளமே ஒன்று சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள்.
வழியில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொள்ளத் தேவையான பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சுகமாகப் படுத்து உறங்க மடக்கு கட்டிலையும் கூட மாட்டு வண்டியில் கொண்டு போயிருக்கிறார் வீராச்சாமி.
பல்லக்கிலும் மாட்டுவண்டியிலும் சில இடங்களில் குதிரை வண்டியிலும் பயணம் செய்த வீராசாமி மதராஸிலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, கடப்பா அகோபிலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர், பிரயாக், காசி, பாட்னா, கயா ராஜ்மகால், கிருஷ்ணாநகர், கல்கத்தா, கோபால்பூர், கட்டக். பூரி, சில்கா ஏரி கஞ்சம், பெர்காம்பூர், ஸ்ரீகாகுளம் ,நெல்லூர், சூளுர்பேட்டை, பொன்னேரி வழியாக மதராஸ் திரும்பி வந்திருக்கிறார்.
இந்தப் பயணத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் இதில் இடம்பெறவில்லை. ஆனால் போகிற இடமெல்லாம் காசை தண்ணீராகச் செலவு செய்திருக்கிறார். கோவில்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார். நகைகள். பட்டு உடைகள் வாங்கித் தானம் அளித்திருக்கிறார். கோவிலில் முன்னுரிமை பெறுவதற்காகப் பூசாரிகளுக்குக் கைநிறைய பணம் கொடுத்திருக்கிறார். போகும் இடத்திற்கு முன்பே ஆட்களை அனுப்பித் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வைத்திருக்கிறார். சிலரை இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டும் பணி அமர்த்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால் பல இடங்களில் நீதிபதிகள் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஜமீன்தார்களின் மாளிகைகளில் தங்கியிருக்கிறார். பயண வழியில் சிலருக்கு உடல் நலம் சீர்கெட்டிருக்கிறது. பல்லக்குத் தூக்கிகள் சிலருக்குக் குளிரால் காய்ச்சல் கண்டிருக்கிறது. அவர்களுககு நாட்டுமருந்து கொடுத்து அவரே குணமாக்கியிருக்கிறார்
மாட்டுவண்டிக்காரன் ஒருவனுக்கு மேகநோய் வந்திருக்கிறது. அவனை மட்டும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. வழியிலே அவனை நிறுத்தி ஊர் திரும்ப வைத்திருக்கிறார்கள்.
வழியில் மலேரியா தாக்கி பலரும் நோயுற்றார்கள். இருவர் இறந்து போனார்கள். தனது பயணத்தின் போது கிடைத்த அனுபவத்தைக் கடிதங்களாக நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதங்களைத் தொகுத்தே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள்
தனது பயண அனுபவத்தில் திருடன் கூடப் பண்புள்ளவனாக நடந்து கொண்டிருக்கிறான். பெரிய மனுசன் போன்ற தோற்றம் கொண்டவன் தான் நிறைய இடங்களில் சூது செய்து ஏமாற்றியிருக்கிறான் என்கிறார் வீராசாமி.
பாட்னாவில் காகங்களுக்குப் பயந்து ஆட்கள் சுற்றிலும் காவலுக்கு நில்லாமல் மக்கள் பொதுஇடத்தில் சாப்பிட முடியாது. வானில் நூற்றுக்கணக்கான காகங்கள் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். ஏமாந்த நேரம் உணவைக் கவ்விக் கொண்டுபோய்விடும். ஆகவே சாப்பிடுகிறவர் இலையை ஒட்டி ஒரு ஆள் கையில் கோலோடு நின்று கொண்டிருப்பார். அவரது வேலை காக்கா விரட்டுவது என்று ஒரு இடத்தில் வீராசாமி குறிப்பிடுகிறார்.
பயண வழியில் இவரது பல்லக்குத் தூக்குகளுக்கு மோசமான தண்ணீரைக் குடித்துச் சளி இருமல் வந்திருக்கிறது. அவர்களுக்கு வைத்தியம் செய்து நலமாகும் வரை ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்.
அந்த நாட்களில் திருப்பதி எப்படி இருந்தது என்பதை வாசிக்க வியப்பாக இருக்கிறது. 1830களில் இருநூறு ரூபாய் கொடுத்துச் சிறப்புப் பூஜை செய்திருக்கிறார் வீராசாமி.
அன்றைய ஹைதராபாத் நிஜாமில் வேறு பணம் புழக்கத்திலிருந்தது. மதராஸின் ஒரு ரூபாய் அங்கே ஐம்பது பைசா மட்டுமே. பணம் கொடுத்துச் சில்லறை வாங்கினால் ரூபாய்க்கு பத்து காசு கமிஷனாக எடுத்துக் கொள்ளும் பழக்கமிருந்தது. ஹைதராபாத்தில் வெள்ளைக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் சாலையிருந்தது. அதில் இந்தியர்கள் செல்ல அனுமதி கிடையாது.
காய்கறிகள் பழங்கள் யாவும் ஹைதராபாத்தில் விலை மிக அதிகம். மாட்டுவண்டிகளில் விறகு ஏற்றிக் கொண்டு போனால் கூட அதற்குச் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்கிறார் வீராசாமி.
வீராசாமியின் விவரிப்பில் வழியெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலையின் பிம்பமே மனதில் ஆழமாகப் பதிகிறது. அது போலவே சிறிய கிராமங்களின் எளிய வீடுகள். ஏழைகளின் நிலை, அடர்ந்த காடுகள். மழையில் பெருகிய வெள்ளம் வடியும் வரை ஆற்றைக் கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை. கரடுமுரடான பாதையில் செல்லும் பயணம். இதமான மாலை நேரக்காற்று. குடிநீருக்கான போராட்டம் இவை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. பயண வழியில் நல்ல வெற்றிலை கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கிறார் வீராசாமி
மதராஸ் ராணுவம் நாக்பூருக்கு வரும் வரை அங்கிருந்தவர்களுக்குப் புளியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. புளிப்புக்கு தயிரை தான் சேர்த்துக் கொள்வார்கள். மதராஸ் ராணுவத்தினருக்காகவே புளியை உணவில் சேர்த்துச் செய்யும் பழக்கம் உருவானது. இதுபோலவே இரவில் மோர் குடிக்கப் பயப்படுவார்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பதே காரணம். தனது பல்லக்கு வழியில் உடைந்து போனதால் புதிய பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார் வீராசாமி. அதன் விலை நூறு ரூபாய்.
அன்றைக்குச் சென்னையிலிருந்த வீடுகளிலே மிகப்பெரியது அய்யாபிள்ளையின் வீடு. இது போலவே ஆங்கிலேயர்களின் குடியிருப்பில் மிகப்பெரியது ஜே.மூரத்தின் மாளிகை என்கிறார் வீராசாமி. இருவருமே இன்று நினைவிலிருந்து மறைந்து போய்விட்டார்கள். மதராஸ் சின்னஞ்சிறிய கிராமங்களை உள்ளடக்கியதாக வெளிப்படும் சித்தரிப்பு அழகாக உள்ளது..
வீராசாமியின் பயணத்தின் வழியே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. போகிற இடத்தில் எல்லாம் அவருக்கு வெள்ளை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள். துணையாட்களை அனுப்பி வைக்கிறார்கள். அவரும் கம்பெனி அதிகாரிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். ராணுவ அதிகாரிகளுக்குப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்.
அன்று நிலவிய சாதியக் கட்டுப்பாடுகள். ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்தப் பயணத்தின் ஊடாக நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.
இன்றிருப்பது போலப் பயணவழியில் தங்குமிடங்களோ, உணவகங்களோ வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் இப்படி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பது புதிய அனுபவத்தையே நமக்கு அறிமுகம் செய்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்திருக்கிறது என்பதற்கு அவர்களின் சுங்கசாவடிகள். ராணுவ தலையீடுகள். ஆட்சி முறை பற்றிய தகவல்களே சாட்சி. ஏனுகுல வீராசாமி சித்தரிக்கும் பயண வழிகள். இடங்கள் யாவும் காலத்தில் மறைந்தும் மாறியும் விட்டன. 190 ஆண்டுகளுக்கு முன்னுள்ள இந்திய வாழ்க்கையின் எளிமை மட்டுமில்லை அதன் அறியாமைகளும் சேர்ந்தே இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது