அன்புள்ள நகரத்தார் பெருமக்களுக்கு *ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகம் 2019-2023* நிர்வாக குழுவின் சார்பாக பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
*இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம்* என்ற வாசகத்தோடு பொறுப்பேற்று பல இடங்களை மீட்டுத் தந்திருக்கிறோம்.18 மாத கொரோனா காலத்திலும் அஞ்சாமல் பணி செய்து இருக்கிறோம்.
வருமானங்கள் இல்லாமல் காசி சத்திரத்தை சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளோம். எங்களுக்குள், கருத்து *வேற்றுமை* இருந்தாலும் நமது நகரத்தாரின் இலக்கான சொத்துக்களை மீட்பதில் *ஒற்றுமையாக ஒற்றை கருத்தில் நின்றோம்*
*தலைவர் பழ ராமசாமி* அவர்கள் இழந்த சொத்துக்களை மீட்டுத் தருவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தார். அதன்படி துணைத் தலைவர்கள் *திரு நாகப்பன், திரு ராமநாதன், பொருளாளர் ஆடிட்டர் சுப்ரமணியன்,உதவிச் செயலாளர்கள் திரு முத்துக்குமார், திரு சொக்கலிங்கம், செயலாளர் லெட்சுமணன்* ஆகிய அனைவரும் தலைவரோடு ஒன்றிணைந்து இந்த சொத்து மீட்புக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம்.
ஒரு கை தட்டினால் ஓசை வராது என்று கருதி சிக்ராவை மீட்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பலமுறை கூட்டங்கள் நடத்தியும் காசியில் உள்ள சிக்ராவுக்கே, தங்கள் சொந்தச் செலவில், நேரே சென்று ஆக்கிரமிப்பாளர் முன்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.ஆனால் முன்னா எப்பொழுதும் போல இன்று போய் நாளை வா நாம் முடித்துக் கொள்வோம் என்று சொல்லி காலம் தாழ்த்தினார்.இது கதைக்கு ஆகாது என்று எண்ணி வேறு வழி இருக்கிறதா என்று யோசித்தோம். அப்பொழுதுதான் *திரு vnct வள்ளியப்பன்* அவர்கள் மூலமாக காரைக்குடி *கொரட்டியார் வீட்டு நாராயணன்* அவர்களை சந்தித்து அஞ்சா நெஞ்சன் *கோட்டையூர் மு.சொ. அழகப்பன்* அவர்களை சந்தித்தோம்.
முதலில் இதை ஒப்புக்கொள்ள மறுத்த திரு *மு.சொ.அழகப்பன்* அவர்கள் உங்கள் பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றி என்னை சிக்கிரா மீட்பு குழுவுக்கு தலைவராக நியமிப்பதாக கடிதம் கொடுத்தால் நான் வருகிறேன் என்று சொன்னார்.நாங்களும் சம்மதித்து,இவரோடு பயணிக்க, நல்ல அனுபவம் வாய்ந்த இன்னும் நால்வரை நியமிக்கலாம் என்று யோசித்தோம்.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் நமது கோட்டையூர் *மு.சொ.அழகப்பன்* அவர்களையும்,அதன்படி மேதகு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு காவல் அதிகாரியாக பணியாற்றிய நல்ல அனுபவம் வாய்ந்த அரிமளம் *திரு DSP முத்துக்குமார்* அவர்களை சென்று அவர்களிடம் ஒப்புதல் பெற்றோம்.
பள்ளத்தூரை சார்ந்த மூத்த உறுப்பினர் *திரு தேனப்பன்* அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று,காசி சத்திரத்தின் செயற்குழு உறுப்பினராக அனுபவம் வாய்ந்த இவரையும்,ஆத்தங்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்த icici வங்கியில் chief manager ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற காசி சத்திரத்தின் செயற்குழு உறுப்பினர் *திரு நாச்சியப்பன்* அவர்களையும், தேவகோட்டையை சார்ந்த ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தற்போதைய செயலாளர் *திரு கதிரேசன்* அவர்களையும் கொண்ட ஒரு குழு, பொதுக்குழுவால் சிக்ரா மீட்பு குழுவினராக நியமிக்கப்பட்டது.
முதலில் நகரத்தார்கள் நகரத்தாரர்களின் பண்பான, மென்மையான, வகையில் நேர்மையான வகையில் முன்னா அவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது பயன் அளிக்கவில்லை. *முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்* என்பது போல நாமும் முன்னா பாணியிலேயே பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்தோம். முன்னா அவர்கள் *அகிலேஷ் யாதவ் கட்சி* யின் ஒரு முக்கிய பிரமுகர். நம்மை நம் இடத்துக்குள் செல்வதற்கு அவர் அனுமதிக்காமல் தடுத்தார். துப்பாக்கி வைத்து மிரட்டுவார். நாய்களை வைத்து கடிக்க விடுவார், அடியாட்களை வைத்திருப்பார், மிளகாய் தூளை வைத்திருப்பார் என்று எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி உயர்திரு *பிச்சை குருக்கள்* ஐயாவை வைத்து ஒரு கணபதி ஹோமம் செய்தோம். கணபதி ஹோமம் செய்தவுடன் எங்கள் அனைவரையும் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு முன்னா அவர்கள் சிக்ரா நந்தவனத்தின் கதவை மூடிவிட்டார்.
அப்பொழுது *மு.சொ.அழகப்பன்* அவர்கள் உன்னை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் காலி செய்வோம் என்று சூளுரைத்து வந்தார்.
பிறகு டெல்லி சென்று மேதகுபாரத பிரதமர் மோடி அவர்களின் PA அவர்களை சந்தித்து சூழ்நிலையை எடுத்துரைத்தார்கள். அவர்கள் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.டெல்லியில் இருந்து நேராக Lucknow சென்று மாண்புமிகு யோகி ஆத்தியநாத் அவர்களை சந்தித்து,நமது முழு வரலாற்றையும் எடுத்துச் சொன்னோம்.அவர்கள் நிச்சயமாக நான் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்கள்.இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்காகவே ஃபுல் டோவ்சர் ஸ்கீம் ஒன்றை ஆதித்தியநாத் அவர்கள் வைத்திருந்தார்கள்.அதன்படி 2022 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி முன்னா அவர்கள் மீது முதன்முதலாக புகார் ஒன்றை சிக்ரா போலீஸ் ஸ்டேஷனில் நமது காசி சத்திரத்தின் சார்பாக செயலாளர் *காரைக்குடி ராம. லெட்சுமணன்* கொடுத்தார்.
திருவண்ணாமலையில் இருந்து நமக்கு ஆதரவாக முசொ அண்ணன் அவர்கள் ஒரு பத்து பதினைந்து நண்பர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் முன்னாவின் செயல்பாட்டிற்கு பதில் அடி கொடுத்தார்கள்.
காவல் நிலையத்தில் முன்னாவுக்கும் நமக்கும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது இந்த இடம் என்னுடையது அல்ல ஆனால் காசி சத்திரத்துக்கு சொந்தமானதும் அல்ல என்று முன்னா கூறினார்.
போலீஸ் ஏ டி எஸ் பி அவர்கள் உங்கள் சொத்து என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்கள். நாம் வைத்திருந்த ஆதாரங்களை கொடுத்தோம்.ஆனால் அதில் நமது பெயர் தெளிவாக இல்லை.அதனால் வேறு ஆதாரம் என்னவென்று கேட்ட போது சிக்ராவிற்கு வெளியே இரண்டு யானைகள் உடன் லெட்சுமி கஜலட்சுமி அங்கே பொறிக்கப்பட்டிருந்தது. இதுதான் எங்கள் ஆதாரம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்கள் அப்பொழுது நம் ஊரில் உள்ள வீடுகளில் இருந்து அந்த கஜலட்சுமி சிலைகள் வாட்ஸ் அப் மூலமாக நாம் போலீசுக்கு எடுத்துக்காட்டினோம். அதன் பின் போலீஸ் ஒப்புக்கொண்டு முன்னாவிடம் உங்கள் இடம் இல்லை நீங்கள் காலி செய்யுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று 2022 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி சரியாக ன3 மணி அளவில் நமது *42 ஆண்டு கனவான சிக்ரா நம் வசம் வந்தது* என்பது நம் அனைவருக்கும் பெருமை.
நாம் சொத்தை மீட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கையில், முன்னா அவர்கள் நம்மை இன்னும் பல வகையில் தொந்தரவு செய்து கேசை FIR - ஐ வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினார். அப்பொழுது அவர் நம்மை பல இடங்களில் தேடினார். இந்த குழு பல இடங்களில் பல லாட்ஜ்களில் மாறி மாறி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பல இன்னல்களையும் நாங்கள் அனுபவித்தோம். முசொ.அழகப்பன் அண்ணன் இருந்த அந்த அறை உள்ள ஏசி தீப்பிடித்து எறிந்தது. மேலும் முசொ அவர்கள் சென்ற காரில் வேறு இடத்துக்கு செல்லும்போது அந்த காரினுடைய ஓட்டுனர் முன்னா உடைய பரிந்துரையின்படி காரை திசைமாற்றி சென்றார். கார் பஞ்சர் ஆகி நின்று வேற விட்டது. அப்பொழுது நாம் சுதாரித்துக் கொண்டு அந்த சூழ்நிலையும் மீண்டு வந்தோம்.
நாம் சிக்ரா நந்தவனத்தை மீட்டபோது சத்தம் இல்லாமல் செயல்பட்டு நம்மோடு இருந்தவர்கள். ராங்கியம் *அரு சிவா* அவர்களும், வேகு பட்டி *சேகர்* அவர்கள் மற்றும் பக்கபலமாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கும் நன்றி. 1980 இல் இருந்து 2002 ஆம் ஆண்டு வரை வீரப்ப முதலியார் உடைய ஆக்கிரமிப்பிலும் 2002 முதல் 2022 வரை முன்னா அவர்களிடமும் சிக்ரா இருந்திருக்கிறது.
முன்னா அவர்கள் நமது இடத்தை பெரிய பெரிய VIP களுக்கு வாடகைக்கு விடுவார். அப்படி ஒரு ஆண்டுக்கு 60 கல்யாணத்திற்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார்.அப்படி 60 கல்யாணத்திற்கு அவருக்கு ஒரு கல்யாணத்திற்கு கிடைத்த லாபம் சுமார் 3 லட்ச ரூபாய். அப்படியானால் வருடத்திற்கு ஒரு கோடியே 80 லட்சம் *20 ஆண்டுகளுக்கு, எத்தனை கோடி* என்பதை நகரத்தார் பெருமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கொரோனா காலத்தில் உலகமே தடுமாறியது. எப்படி இந்தியா மட்டும் தடுமாறாமல் இருந்ததோ, அதுபோல பழ. ராமசாமி அவர்கள் தலைமையிலான இந்த நிர்வாகம் ஒரு பொழுதும் தடுமாறாமல் காசி சத்திரத் சொத்துக்களை மீட்டு ,அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதை எண்ணிப் பார்க்காமல், சில பேர் இந்த நிர்வாகத்தின் மீது அதிகமான செலவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மதுரையில் நமது சொத்தை மீட்ட போது *லேனா காசிநாதன்* அவர்களுடைய காலத்தில் கீழமாரட் வீதியில் உள்ள அந்த சிறிய இடத்தை காலி செய்வதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.தமிழ்நாட்டிலே இப்படி என்றால், வடநாட்டில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சிக்ரா நந்தவனம் அன்றைய தினத்தில், அரசாங்க மதிப்பு ரூபாய் 240 கோடி.மார்க்கெட் மதிப்பு சுமார் 400 கோடி இதற்கு ஒரு சதவீதம் என்று வைத்தால் எத்தனை கோடி வரும் என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
இன்றைய லேனா நாராயணன் அவர்களின் தலைமையிலான குழு பத்து மாடி கட்டிடத்தை கட்டி உள்ளார்கள்.அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் நாங்கள் பெற்ற துன்பங்களை எண்ணி இந்த கட்டி இருக்கும் கட்டிடத்தை *நகரத்தாரே, நிர்வாகம் செய்வது* என்பது எங்கள் நிர்வாகத்தின் கருத்தாக நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்றைய காலகட்டத்தில் ரங்கோனில் வாழ்ந்த நகரத்தார்கள் மகமையால் சேர்த்த ரூபாய் 5500 க்கு வாங்கப்பட்ட இந்த இடம் இன்று பல கோடிப் பெறும். அப்படி மகமை கட்டி வாங்கிய பணத்தால் நம் நகரத்தார் அனைவரும் மகமை கட்டி அதில் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்த சொத்து மீட்பில் உறுதுணையாக இருந்த *உத்திர பிரேதச முதல் அமைச்சர் மேதகு யோகி ஆதித்யநாத் அவர்கள், கமிஷனர் சதீஷ் கணேஷ் அவர்கள், சுதந்திர தேவ் சிங் அவர்கள், அமைச்சர் ரவீந்திர ஜெய் ஸ்வால் அவர்கள் அமைச்சர் நில்க்கண் திவாரி அவர்கள் சிக்ரா சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ வட்சா அவர்கள் வாரணாசியில் உள்ள முக்கியமான பிரபலங்கள் நகரத்தார் பெருமக்கள் தன்னார்வலர்கள், ஏற்கனவே இந்த சிக்ரா மீட்பு குழுவில் உள்ள நமது உறுப்பினர்கள், காசி சத்திர பணியாளர்கள், வழக்கறிஞர் திரிபுராதி சங்கர் அவர்கள் ,நம்முடன் இருந்த நேர்மையான அதிகாரி விபி சிங் அவர்கள், வாரணாசி காவல்துறையினர், ஆர் எஸ் எஸ், விஸ்வ இந்து பரிசத் ,யாதவ் சமுதாயத்தினர்*
மற்றும்
சிக்ரா நந்தவனத்தை மீட்கின்ற நேரத்தில் வாரணாசியில் 48 டிகிரி வெயில் அந்த வெயிலையும் பொருட்படுத்தாது தங்கள் வயதையும் பொருட்படுத்தாது சிக்ராவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த *துணைத் தலைவர் நாகப்பன்* அவர்களுக்கும், அந்த நேரத்தில் பணப்பறிமாற்றம் மிகவும் கடினமாக இருந்த போதும் அதையும் மிகச் சிறப்பாக கையாண்ட எங்களுடைய பொருளாளர் *ஆடிட்டர் சுப்பிரமணியன்* அவர்களுக்கும்,எந்த நேரத்திலும் ஒரு குழந்தை போல வந்திருந்து எங்களுக்கு உதவி செய்த உதவி செயலாளர் *சொக்கலிங்கம்* அவர்களுக்கும், சென்ற பருவத்தின் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டு சிக்ரா மீட்புக்கு உறுதுணையாக இருந்த துணைத்தலைவர் *ராமநாதன்* அவர்களுக்கும், அயோத்தியில் சாந்தி அம்மாவை காலி செய்ய பெரும்பங்கு ஆற்றிய எங்களது அன்பு சகோதரர் உதவிச் செயலாளர் *முத்துக்குமார்* அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
*திரு பழ ராமசாமி அவர்களின் கனவான சிக்ரா நந்தவனத்தை மீட்டு வில்வம், பூக்கள் மற்றும் பால் காசி விஸ்வநாதருக்கு கொண்டு செல்ல வேண்டும் மேலும் சிக்ரா நந்தவனம் நகரத்தார் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதையும் நாம் நிறைவேற்றுவோம்*
*இப்படிக்கு தெய்வத்திரு பழ. ராமசாமி அவர்களுக்காக 2019-2023 நிர்வாகக்குழு*