தரமான சாலைகளும், தவறான சாவுகளும்
முன்பெல்லாம் ஒருவழிச்சாலையே
ஒழுங்காக இருக்காது.
இப்பொதெல்லாம்
நான்குவழிச் சாலை. ரூ.50, 100 என்று ஆங்காங்கே வரிகட்டினாலும் (Tollgate) சீராகப் பயணிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாகக் கனரக வாகனங்கள் முன்பெல்லாம் காசுமீரத்திலிருந்து 3220 கி.மீ. தூரம் பயணித்துக்
கன்னியாகுமரி வரவேண்டும் என்றால் குறைந்தது 10 நாட்கள் ஆகும். ஆனால் இப்போதெல்லாம் குறைந்தது 3 நாட்களில் வந்து சேர்ந்து
விடலாம். கனரகவாகத்தை விரைவாக ஓட்டிச் செல்வது எளிமையாகி விட்டது. நான்குவழிச் சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் பொருள்போக்குவரத்து அதிகமாக நடைபெறுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. வண்டிகள் சீரான வேகத்தில் சமமான பாதையில் இயக்கப்படுவதால் வண்டித்தேய்மானம் மிகவும் குறைந்து விடுகிறது. குறைந்த எரிபொருளில் அதிகத் தொலைவு செல்ல முடிகிறது. இதனாலும் பொருள் இழப்பு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு வணிகம் பெருகவதாலும், பொருள் இழப்புகள்
தவிர்க்கப்படுவதாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு நாடு வளர்ச்சியடைந்து
வருகிறது.
வாகனங்கள்
விரைவாகச் செல்ல ஏதுவாக, நான்குவழிச்சாலைகளில்
அதிக இடையூறுகள் ஏற்பாடாமல் நடுவில் தடுப்பு அரண் அமைத்து விடுகின்றனர். இதனால் வாகனங்கள் எதிரெதிரே
வருவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. சாலையில் வாகனங்கள் ஒன்றை யொன்று எதிர்த்து மோதிக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பெரும் விபத்துக்களும், அதனால் உண்டாகும் உயிர்
இழப்புகளும் பொருள் இழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன.
கனரக
வாகன ஓட்டுநர்கள் எல்லாம் நான்குவழிச்சாலைகளினால் நன்மை அடைய, இருசக்கர வாகன ஓட்டுநர்களோ
உயிரைப் பணையம் வைத்துப் பயணிக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. இருவழிச்சாலைகளின் நடுவே உள்ள தடுப்பு அரணைத்
தாண்டிச் செல்ல முடியாமல் இருசக்கவாகனங்கும், மூன்று சக்கர வாகனங்களும்
அருகில் உள்ள இடத்திற்கு அதிகதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
அதிலும்
குறிப்பாக அருகருகே உள்ள கிராமத்தினர் அடுத்துள்ள ஊருக்குச் செல்வதென்றால்
நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. அல்லது ஒருவழிப்பாதையில் எதிரே சாலைவிதிகளை
மீறித் தவறாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக
1) பணபட்டி கிராமத்திலுக்கும்
ஒருவர் 1 கி.மீ.
தூரத்தில் உள்ள பூசாரிபட்டிக்குச் செல்ல வேண்டும் என்றால், சுமார் 15 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாகப்
பயணம் செய்ய வேண்டும். இதேபோல் பூசாரிப்பட்டியில்
இருப்பவருக்கும் இதே நிலைதான்.
2) இதேபோல் இரண்டு ஊர்களும்
சாலையின் ஒரே பக்கம் அமைந்தாலும், அந்த ஊருக்குச் செல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் திரும்பி வரவேண்டும் என்றால் 1 கி.மீ.க்குப் பதிலாகச் சுமார் 15 கி.மீ. தூரம் பயணித்தே
ஆகவேண்டும்.
இதுபோன்ற
இடங்களில் உள்ளவர்கள் தேவையில்லாமல் அதிகதூரம் பயணம் செய்வதைத் தவிர்த்து, ஒருவழிப்பாதையில் உயிரைப்
பணையம் வைத்து ஒருவழிச் சலையில் எதிரே பயணிக்கின்றனர். ஆபத்து நிறைந்த பயணம் என்பது அவர்களுக்கு நன்கு தெரிகிறது. ஆனால் வேறு வழியில்லாமல் இந்த ஆ(வி)பத்து நிறைந்த பயணத்தை
நித்தமும் மேற்கொள்கின்றனர். எவ்வளவுதான் கவனமாக ஓட்டினாலும் அதிகாலை, சாயங்காலம், இரவு நேரங்களில் விபத்துகள்
நடைபெற அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.
நகரங்களுக்கு
அருகில் இணைப்புச்சாலைகள் (service road) உள்ளன. ஆனால் மற்ற எல்லா இடங்களிலும், நான்குவழிச்சாலை அருகில் உள்ள
அனைவருக்கும் இதேநிலை தான். கிராம மக்கள்
அருகில் இருக்கும் தங்களது விவசாய வேலைகளுக்காகவும், அருகில் உள்ள தங்களது
கிராமங்களுக்குச் செல்வதற்காகவும் அதிகமான தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கக் கிராம மக்கள் அன்றாடம் இதுபோன்று சாலைவிதிகளை மீறித் தங்கள் உயிரைப் பணையம் வைத்துச் சாலையைக் கடக்கின்றனர்.
அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பின்பற்றி, நான்குவழிச் சாலைகள் அமைத்துள்ள
அரசு, கிராம மக்களின் தேவைக்காக நான்குவழிச்சாலை ஓரம் உள்ள எல்லாக்
கிராமங்களுக்கும் மேம்பாலம் அல்லது கீழ்ப்பாலம் அவசியம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
நான்குவழிச்சாலைகளால் கனரக
வாகனங்களுக்கும் கார்களில் செல்வோருக்கும் நகரவாசிகளுக்கும் கனிசமான நன்மை. ஆனால் சாலையோரம் நடந்து
செல்வோருக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் கிராமத்தினருக்கும் பெருந் தீமை.
அன்பன்
காசிஸ்ரீ
முனைவர் நா.ரா.கி. காளைராசன்
ஏற்கனவே உள்ள சாலைகளை மாற்றாது புதிய நெடுஞ்சாலைகளை அமைத்திருக்கின்றனர். ஆனால் அருகில் உள்ள கிராமத்தினர் சாலைகளைக் கடக்க முடியாமல் தடுப்பு ஏற்படுத்தித் தடுத்துள்ளனர். இதனால் கிராமத்தினர் சாலையின் மறுபுரம் அருகில் உள்ள வயலுக்கோ மற்றொரு கிராமத்திற்கோ செல்லச் சுமார் 15 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெடுந்தொலைவுப் பயணத்தைத் தவிர்த்து சாலையைக் கடந்து செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். கால்நடைகள் மிகுதியும் அடிபடுகின்றன :(
ஒவ்வொரு கிராமத்திலும் சாலையின் மறு பகுதிக்குச் செல்லும் வகையில் வசதிகள் செய்யப்படாமல் சாலைகளை அமைத்துள்ளனர்.