திருவாலங்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாலங்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மே, 2020

15.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை திருவாலங்காடு

15.05.2016 
அறுபடைவீடு பாதயாத்திரை  
திருவாலங்காடு

 

Kalairajan Krishnan
5 மே, 2017, பிற்பகல் 3:05 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை
ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
பாண்டிச்சேரி சிதம்பரம் வழியாக திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி வைகாசி – 2 (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை




இன்று காலை 02.45 மணிக்கு சுவாமிமலை விடுதியில் இருந்து புறப்பட்டு 28 கி.மீ. நடந்து திருவாலங்காட்டில் இருக்கும் கணேஷ் திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

காலை 6.50 மணி அளவில், வழியில் சாலையோரம் ஸ்ரீ சீத்தாராமர் கோயில் இருந்ததைக் கண்டு நின்றோம். கோயில் வாயிலில் யாத்திரிகர்கள் நிற்பதைக் கண்ட அந்த வீட்டினர் யாத்திரிகர்களைப் பெரிதும் வரவேற்று, கோயிற்கதவைத் திறந்து அங்கே தங்கச் சொல்லித் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். ஸ்ரீ சீத்தாராமரை வணங்கிக் கொண்டோம். கோயிலில் தங்கியிருந்தபோது அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

வழியில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானம் கோயிலைக் கண்டு வணக்கிச் சென்றோம். அதற்கடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி 59ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் அதிட்டானம் இருந்தது. குருமகா சந்நிதானத்தை நினைந்து வணங்கிக் கொண்டோம். அடுத்து திருவாவடுதுறை ஆதீனம் இருந்தது. குருமகா சந்நிதானம் அவர்களை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

திருவாலங்காட்டில் கணேஷ் திருமண மண்டபத்தை குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.


யாத்திரிகர்களில் சிலர் திருவாலங்காட்டில் அருள்மிகு வண்டார்குழலி உடனாய வடவாராண்யேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வ்ணங்கி வந்தனர். மிகவும் பழைமையான கோயில். திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக கருதப்படுகிறது.


திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்திருந்தன.
இன்று மதியம் 02.45 மணிக்கு திருவாலங்காட்டில் இருந்து புறப்பட்டு 5 கி.மீ. நடந்து குத்தாலத்தில் பெரியகோயில் அருகே இருக்கும் லலிதா கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் அருள்மிகு அரும்பன்னவனமுலை அம்மை (அமிர்த முகிழாம்பிகை, ஸ்ரீ பரிமளசுகந்த நாயகி) உடனாய ஸ்ரீ உக்தவேதீஸ்வர சுவாமி (சொன்னவாறு அறிவார்) கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அவரது நண்பர் திரு. திருநாவுக்கரவு மைத்துனர் திரு. கரிகாலன் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  குத்தாலம் திருமதி கமலா அவர்கள் யாத்திரிகர்களுக்கு இரவு உணவு அளித்து உபசரித்தார்கள்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

15.05.2016 திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

திருவாலங்காட்டில் 
மூன்றாம் குலோத்துங்கன்


Kalairajan Krishnan
5 மே, 2017, முற்பகல் 10:53 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

திருவாலங்காட்டில் மூன்றாம் குலேத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)
கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும். இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும். இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது. ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும்.

திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான். எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான். மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னது சிலையும் நமக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்களின் பெருமை சாதாரண ஒன்றா? பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராச்சோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கண் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதை காணும் போது....

“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“

என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்கலால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்கு கொணர்கின்றன.
(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன். அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்