வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சிறுநீரகக் கல்

17 ஆண்டுகளுக்கு முன் நல்லிரவில் ஆளரவம் கேட்டு எழுந்து சென்று பார்த்தேன். 65  வயது மதிக்கத் தக்கவர். அருகில் இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடிவந்திருப்பதாகக் கூறினார். பல்வேறு பேச்சுகளுக்கு இடையே அருகில் இருந்த கண்ணுப்பீளைச் செடியைக் காட்டி, இதனால்தான் உயிர் பிழைத்தேன் என்றார்.
விளக்கமாகச் சொல்லும்படி கேட்டேன்.
சிறுநீரகத்தில் கல் உண்டாகி மரண வேதனை அளிக்கத் துவங்கியது. மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்தே ஆக  வேண்டும் என்றார். பணவசதி போதவில்லை.  நானாகக் கடையில் வங்கிச் சாப்பிட்ட மருந்துகளும்  பயனளிக்கவில்லை. நண்பர் கூறிய அறிவுரைப்படி சோதிடரிடம் சென்று கேட்டேன். குலதெய்வ வழிபாடு நின்று விட்டது, அதைச் செய்தால் எல்லாம் சரியாகும் என்றார். 'அறுவைச் சிகிச்சைக்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும்' என்ன தொடர்பு என்று கேட்டேன்.  உன்னுடைய சாதகம் சொல்வதைத்தான் சொல்கிறேன், உன் குலதெய்வ வழிபாடு தான் உன்னைக் காக்கும் என்றார்.
வேறு வழியின்றி திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை சென்றேன். மலை அடிவாரத்திலேயே வலி அதிகமாகி விட்டது. மரணத்தின் விளிம்பில் நிற்பதை உணர்ந்தேன்.  மயக்கம் வர குலதெய்வத்தை நினைத்துக் கொண்டே பாதையில் உட்கார்ந்தேன். ஒரு பாட்டி வந்து குடிக்கவும் முகம் கழுவவும்  தண்ணீர் கொடுத்தார், என்னை விசாரித்தார்.  சிறிது அயர்ச்சி நீங்கியவுடன் எனது கதையைக் கூறினேன்.  மூன்று நாள் தங்க முடியுமா?  என்றார்.
முடியும் என்றேன். உடனடியாக அருகே இருந்த  கண்ணுப்பீளை செடியைப் பிடுங்கிக் கசாயம் வைத்துக் கொடுத்தார். சுடுகஞ்சியும் பருப்புத் துவையலும் சாப்பாடு.
சுண்ணாம்புத் தண்ணீர் போன்று சிறுநீர் கழிந்தது. மூன்றே நாட்களில் முற்றிலும் குணமடைந்து குல தெய்வ வழிபாடு முடித்து புதிய பிறவி எடுத்தவன் போன்று வீடு திரும்பினேன் என்றார்.
பொங்கல் பானையில் கட்டவும் கூரையில் சொருகவும் நாம் பயன்படுத்தும்  கண்ணுப்பீளைக்கு இவ்வளவு பெரிய மருத்துவ குணமா! என்று வியந்து போனேன்.
இப்போது, காசியாத்திரை மேற்கொண்டு என்னுடன் வரும் சோதிடர் மற்றும் மருத்துவர் 'சேவைகுருசாமி' அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.
அவரும் இந்த மருந்தை உறுதி செய்தார். தனக்கும் இது போல் நடந்து பிழைத்ததாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக