ஞாயிறு, 10 மே, 2020

22, 23, 24.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


22.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


Kalairajan Krishnan
10 மே, 2017, பிற்பகல் 8:53 · Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பழமுதிர்சோலை  திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

வைகாசி 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடந்த பயணக் குறிப்புகள் -
துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை









இன்று காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் பஞ்சவடி கோயில் எதிரே தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும், திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

மாலை 04.00 மணிக்கு யாத்திரிகர்கள் சிலர் புறப்பட்டுச் சென்ற தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து திரும்பினர்.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன். கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி. கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.

துன்முகி வைகாசி – 10 (23.05.2016) திங்கள் கிழமை
இன்று காலை 03.00 மணிக்கு தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு 20 கி.மீ. நடந்து திண்டிவனம் அரிகிருஷ்ணன் கல்யாண மண்டபத்தை காலை 07.45 மணிக்கு அடைந்து அங்கு தங்கினோம்.






வழியில் திண்டிவனம் எல்லையில் சிறிதுநேரம் தங்கி ரொட்டியும் தேநீரும சாப்பிட்டோம்.  இந்த மண்டபத்தை தேவகோட்டை உயர்திரு. இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்களின் பங்காளி திரு.என்.நடேசன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மண்டப வாடகையை அவரே கொடுத்துவிட்டார். மேலும் யாத்திரிகர்களுக்குத் தேவையான தண்ணீர் சமையல்வாயு காய்கறி முதலானவற்றையும் கொடுத்து உபசரித்தார்.

துன்முகி வைகாசி – 11 (24.05.2016) செவ்வாய்க் கிழமை

இன்று காலை 02.15 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு 29 கி.மீ. நடந்து அச்சிறுபாக்கம் ஆதிபராசக்தி பள்ளிக்கூடத்தைக் காலை 09.15 மணிக்கு அடைந்து தங்கினோம்.

வழியில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரபுரீசுவரர் திருக்கோயில் வாயிலில் சிறிது நேரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு தொழுபேடு என்ற இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.
தங்கும் இடத்தையும் காலை உணவையும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் தவத்திரு. சிவபெருமான் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
மிகக் கடுமையான வெயில். தங்கியிருந்த இடம் சற்று வசதிக் குறைவாக இருந்தது. எனவே மாலை 04.45 மணிக்குப் புறப்பட்டு 5 கி.மீ. நடந்து மேல்மருவத்தூர் வழியாக சோத்துப்பாக்கம் NVM திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.












இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அச்சிறுபாக்கம் சிவ.ராசேசுவரி அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 5 மே, 2020

05.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை வேடசந்தூர்

 05.05.2016  
அறுபடைவீடு பாதயாத்திரை 
வேடசந்தூர்



Kalairajan Krishnan
5 மே, 2016, பிற்பகல் 2:39 · Vedasandur, தமிழ்நாடு ·

12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடகவீடு பாதயாத்திரை. பழனியில் வழிபாடு முடித்து சுவாமிமலை செல்லும் வழியில் 05.05.2016 காலை மணி 8.30 க்கு வேடசந்தூர் ஐயனார் சந்நிதியில்.

15.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை திருவாலங்காடு

15.05.2016 
அறுபடைவீடு பாதயாத்திரை  
திருவாலங்காடு

 

Kalairajan Krishnan
5 மே, 2017, பிற்பகல் 3:05 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை
ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
பாண்டிச்சேரி சிதம்பரம் வழியாக திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி வைகாசி – 2 (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை




இன்று காலை 02.45 மணிக்கு சுவாமிமலை விடுதியில் இருந்து புறப்பட்டு 28 கி.மீ. நடந்து திருவாலங்காட்டில் இருக்கும் கணேஷ் திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

காலை 6.50 மணி அளவில், வழியில் சாலையோரம் ஸ்ரீ சீத்தாராமர் கோயில் இருந்ததைக் கண்டு நின்றோம். கோயில் வாயிலில் யாத்திரிகர்கள் நிற்பதைக் கண்ட அந்த வீட்டினர் யாத்திரிகர்களைப் பெரிதும் வரவேற்று, கோயிற்கதவைத் திறந்து அங்கே தங்கச் சொல்லித் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். ஸ்ரீ சீத்தாராமரை வணங்கிக் கொண்டோம். கோயிலில் தங்கியிருந்தபோது அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

வழியில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானம் கோயிலைக் கண்டு வணக்கிச் சென்றோம். அதற்கடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி 59ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் அதிட்டானம் இருந்தது. குருமகா சந்நிதானத்தை நினைந்து வணங்கிக் கொண்டோம். அடுத்து திருவாவடுதுறை ஆதீனம் இருந்தது. குருமகா சந்நிதானம் அவர்களை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

திருவாலங்காட்டில் கணேஷ் திருமண மண்டபத்தை குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.


யாத்திரிகர்களில் சிலர் திருவாலங்காட்டில் அருள்மிகு வண்டார்குழலி உடனாய வடவாராண்யேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வ்ணங்கி வந்தனர். மிகவும் பழைமையான கோயில். திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக கருதப்படுகிறது.


திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்திருந்தன.
இன்று மதியம் 02.45 மணிக்கு திருவாலங்காட்டில் இருந்து புறப்பட்டு 5 கி.மீ. நடந்து குத்தாலத்தில் பெரியகோயில் அருகே இருக்கும் லலிதா கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் அருள்மிகு அரும்பன்னவனமுலை அம்மை (அமிர்த முகிழாம்பிகை, ஸ்ரீ பரிமளசுகந்த நாயகி) உடனாய ஸ்ரீ உக்தவேதீஸ்வர சுவாமி (சொன்னவாறு அறிவார்) கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அவரது நண்பர் திரு. திருநாவுக்கரவு மைத்துனர் திரு. கரிகாலன் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  குத்தாலம் திருமதி கமலா அவர்கள் யாத்திரிகர்களுக்கு இரவு உணவு அளித்து உபசரித்தார்கள்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

15.05.2016 திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

திருவாலங்காட்டில் 
மூன்றாம் குலோத்துங்கன்


Kalairajan Krishnan
5 மே, 2017, முற்பகல் 10:53 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

திருவாலங்காட்டில் மூன்றாம் குலேத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)
கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும். இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும். இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது. ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும்.

திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான். எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான். மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னது சிலையும் நமக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்களின் பெருமை சாதாரண ஒன்றா? பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராச்சோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கண் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதை காணும் போது....

“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“

என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்கலால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்கு கொணர்கின்றன.
(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன். அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 15 மார்ச், 2020

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட செம்பினால் செய்யப்பட்ட இரு செப்புகள்

அருமை, அருமை. தொல் தமிழர் செம்பினால் குடுவைகள் செய்து பயன்படுத்தியுள்ளனர். இது குறித்துச் சங்கப்பாடல்களில் குறிப்பு ஏதேனும் உள்ளதா? எனத் தேடிக் கண்டறிய வேண்டும். தொல்லியலாளர்களுக்கு நல்வாழ்த்துகள். நல்லாசிரியர் மற்றும் சிவகளை தொல்லியல் ஆர்வலர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

என் மனதில் நிலைபெற்றுள்ள கண்ணதாசன் பாடல் (2)


என் மனதில் நிலைபெற்றுள்ள 
கண்ணதாசன் பாடல் (2)
ஆனால் இது கண்ணதாசன் பாடல் அல்ல.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

பட்டினத்தார் பாடல் ஒன்று
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே,
விழியம் பொழுகமெத்திய மாதரும் வீதிமட்டே,
விம்மி விம்மி இருகைத்தலை மேல்வைத் தழும் மைந்தரும் சுடு காடு மட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!”
இந்தப் பாடல் நன்கு படித்தவர்க்கே புரியும்.

ஆனால் இந்தப் பாடலை, படிக்காதவரும் எளிதில் புரிந்து ரசிக்கும்படியாக நம் கவியரசர் நமக்கு மிக எளிமையாகத் தருகிறார்.

மேலே சொன்ன பட்டினத்தார் பாடலை,
“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ” என்றும்,
பட்டினத்தார் சொன்னதை மேலும் வரிவரியாக அடுக்குவதைப் பார்ப்போம்.
“தொட்டிலுக்க அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி” என்பார்.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

சித்தர் பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் - காசி 123நாட்கள் புனித பாதயாத்திரையின் போது ஓ.சிறுவயல் (இருப்பு சிதம்பரம்) மெய்யப் செட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னது இது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

என் மனதில் நிலைபெற்றுள்ள கண்ணதாசன் பாடல்


என் மனதில் நிலைபெற்றுள்ள 
கண்ணதாசன் பாடல்

ஆனால் இது கண்ணதாசன் பாடல் அல்ல.
இது பட்டினத்தாராக மாறிய கண்ணதாசனின் பாடல்.

பட்டினத்தாரின் பாடல்.
“மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா”

இதையே நம் கவியரசர், சரசுவதிசபதம் திரைப்படப்பாடலில் மிக அழகாக எழுதியுள்ளார்.
“ பெற்றவள் உடல் சலித்தாள்
பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
பாவி இன்னுமொரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா”

சித்தர் பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் - காசி 123நாட்கள் புனித பாதயாத்திரையின் போது ஓ.சிறுவயல் (இருப்பு சிதம்பரம்) மெய்யப் செட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னது இது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

திங்கள், 20 ஜனவரி, 2020

தென்னமரக்குடி எண்ணை

தென்னமரக்குடி எண்ணை 


எனக்கு நான்கு வருடங்களாக இடதுகால் மூட்டில் வலி இருந்து வந்தது. அதை மூன்றே நாட்களில் குணமாக்கி விட்டார்.

2014ஆம் ஆண்டு எனது குருசாமியான வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் 20 அடியார்களை அழைத்துக் கொண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த 20 யாத்திரிகர்களுள் நானும் ஒருவன். அலுவலகத்தில் அமர்ந்தே வேலைசெய்து பழக்கப்பட்ட எனக்கு இந்த 123நாட்கள் பாதயாத்திரை மிகுந்த உடல்வலியைக் கொடுத்தது. பாதயாத்திரையின் இடையே, எனது இடதுகால் வலியெடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் தொடார்ந்து நடந்து எனது பாதயாத்திரையை நிறைவு செய்தேன். 2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து குருசாமி பச்சைகக்காவடி அவர்கள் 2015ஆம் ஆண்டு நடத்திய இராமேசுவரம் காசி பாதயாத்திரையில் கலந்து கொண்டு நாக்பூரிலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செய்தேன். அடுத்தடுத்த வருடங்களில், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பிள்ளையார்பட்டியிலிருந்து தொடங்கி பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணிகை என அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்களில் 1157 கி.மீ. பாதயாத்திரை மேற்கொண்டார்கள். அப்போது குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் நானும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டேன். எனது இடதுகால் முட்டியில் வலி இருந்தபோதும், காலை நேராக நீட்ட முடியாதபோதும் 2014, 2015, 2016, 2017 ஆண்டுகளில் பாதயாத்திரை செய்து, இறையருளாளும் குருவருளாளும் பாதயாத்திரைகளை நல்லபடியாக நிறைவு செய்து வழிபாடு செய்து வந்தேன்.


எனது இடதுகாலை நேராக நீட்டமுடியாமல் சிரமப்படுகிறேன் என்பதை அறிந்த குருசாமி பச்சைக்காவடி அவர்கள் என்னை திருவாரூர் சென்று கோயில்அருகே வடக்குவடம்போகி தெருவில் உள்ள AKR தென்னமரக்குடி வைத்தியரைப் பார்க்குமாறு அறிவுறுத்தினார். நானும் வைத்தியர் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் மருத்துவமனையில் இருக்கும் விபரம் அறிந்துகொண்டு நேரில் சென்றேன். எனது கால்களைப் பரிசோதித்த பின்னர், எனது இடதுகால் மூட்டில் வலி இருந்த இடத்தில் ஒருரூபாய் நாணயங்கள் சிலவற்றை வைத்துக் கட்டிவிட்டார். மூன்றாவது நாள் கட்டைப் பிரித்த பின்னர் தென்னமரக்குடி எண்ணையைப் பயன்படுத்துமாறு கூறினார்.



மூன்றாவது நாள் கட்டைப் பிரிக்கும் போது, என்னால் எனது இடதுகாலை நன்றாக நேராக நீட்ட முடிந்தது. வலியில்லை. இதுநாள் வரை இந்தவலி மீண்டும் வரவேயில்லை. மருத்துவருக்கு எனது நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 6 (201.01.2020) செவ்வாய்க்கிழமை

தென்னமரக்குடி என்பது வைத்தியரின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தின் பெயர். இவரது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வருகின்றனர். நான் வைத்தியம் பார்த்துக் கட்டுப் போட்டுக் கொண்டு வெளியே வரும்போது மருத்துமனையில் நான்கைந்துபேர் வைத்தியத்திற்காகக் காத்திருந்தனர். பொது மக்களிடம் இந்த வைத்தியசாலை பிரபலமடைந்துள்ளதைக் காண முடிந்தது. இணையத்தில் தென்னமரக்குடி எண்ணை என்ற பெயரில் இப்போது வேறுசிலரும் எண்ணை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தென்னமரக்குடி எண்ணை என்று இணையத்தில் தேடியபோது கிடைத்த இந்த விளம்பர ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன்.
https://youtu.be/MeT8ajnGtto

சனி, 16 நவம்பர், 2019

29.06.2014 ஐயப்பன் புலி வாகனனா?

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் புலி வாகனனா?


2014ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி 110நாட்கள் பாதயாத்திரை.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் 20 யாத்திரிகர்களை உடன் அழைத்துச் சென்றார்.  இந்தப் புனிதமான பாதயாத்திரையில் கலந்துகொண்ட சில யாத்திரிகர்கள் ஐயப்பகுருசாமிமார்கள்.  எங்களை யெல்லாம் பாதயாத்திரையாகக் காசிக்கு அழைத்துச் சென்ற குருசாமி பச்சைக்காவடி அவர்களும் ஐயப்பகுருசாமி ஆவார்.  ஆனால் எனக்குத்தான் 57 வயதாகியும் ஐயப்பனை ஒரு முறையேனும் தரிசிக்கும் பேறு கிடைக்கவில்லை.

காசி பாயாத்திரையில் வழிநெடுகிலும் பல ஐயப்பன் கோயில்களில் தங்கும் பேறு பெற்றோம்.  அதிலும் குறிப்பாக பெங்களூரு எலகங்கா ஐயப்பன் கோயிலில் 28 & 29.06.2014 இரண்டு நாட்கள் தங்கும் பெரும் பேறு பெற்றோம்.

அப்போது அங்கிருந்த ஐயப்பன் படத்தைக் காட்டி "புலி வாகனன் " என்றனர்.  மஹிஷியை வதம் செய்தார் ஐயப்பன்.. அவருக்கு நன்றி செய்யும் பொருட்டுத் தேவேந்திரனே புலியாக உருமாறி, ஐயப்பனுக்கு வாகனமானார்.
சுவாமி ஸ்ரீஐயப்பன் சரிதம் இதை விரிவாகச் சொல்கிறது என்றனர்.

என்னிடம் கேட்டால்?!

தாயின் உடல்நலனுக்காகப் புலிப்பால் கொண்டுவரக் கானகத்துள் செல்கிறார் ஐயப்பன்.  "புலிப்பால்"  வேண்டும் என்றால், குட்டி போட்ட புலி வேண்டும்.  குட்டி போட்டுள்ள எந்தவொரு மிருகமும் வேறெந்த  மிருகத்தையும்  அருகில் அண்ட விடாது.  குட்டி போட்டுப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்புலியின் அருகில் யாரேனும் செல்லமுடியுமா?

ஸ்ரீ தர்மசாஸ்தா சென்றார்.  புலிப்பால் வேண்டிக் குட்டிபோட்டுப் பால்கொடுக்கும் பெண்புலியை அழைத்துவந்தார்.

ஆனால் குட்டி போட்டுப் பால்கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்புலிமேல் யாரேனும் சவாரி செய்வார்களா?
தானமாகப் பால்கொடுக்க முன்வந்த பெண்புலிமேல் சவாரி செய்வது தர்மம் ஆகுமோ?
வாயில்லா ஜீவனை வதைத்திடுவார்களோ?
தர்மசாஸ்தா இத்தகைய அதர்மத்தைச் செய்வாரோ?

எனவே என்னிடம் கேட்டால் .....
1) ஐயப்பன் சொல்லுக்குப் புலி அடங்கி நடக்கும் என்பதே சரியாகலாம் !
2) ஐயப்பன் பால் கொடுக்கும் பெண்புலி மேல் ஏறி வந்தான் என்பதும், ஐயப்பனை "புலி வாகனன்" என்பதும் தவறாகலாம் !
3)படத்தில் புலியுடன் அதன்  குட்டிகளைக் காட்டுவது சரியாகலாம் !
4) படத்தில் ஐயப்பனுடன் பல புலிகளைக் காட்டுவது தவறாகலாம் !
5) அல்லது புலிப்பாலைத் தானமாகக் கொடுக்க முன்வந்த பெண்புலியின் ஜோடிப்புலியான ஆண்புலியின் மீது ஐயப்பன் ஏறி வந்தார் என்பது சரியாகலாம் .

எனது கருத்து சரியா ....?
“குட்டிபோட்டுப் பால்கொடுத்துக் கொண்டிருந்த பெண்புலியை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறி ஸ்ரீ ஐயப்பன் வந்தானா?” என்ற  எனது இந்த ஐயத்தை, ஸ்ரீதர்மசாஸ்தாவின் வரலாற்றை நன்கு அறிந்த  ஐயப்பசுவாமிகள் யாரேனும்  நீக்கி அருள வேண்டுகிறேன்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனின் திருவடி தரிசனம் வேண்டி,
https://groups.google.com/forum/#!topic/thiruppuvanam/bFMRHvFPO7U

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 1 (17112019) ஞாயிற்றுக் கிழமை.
---------------------------------------
புராண விளக்கம் -
எனது இந்தப் பதிவை வாட்ஸ்ஆப் செய்தி வழியாக அறிந்த நண்பர் காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு 29.06.2020 அன்று விளக்கம் அளித்தார்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் வாகனமாக உள்ளது பெண்புலி அல்ல என்றும்,  மஹிஷியை வதம் செய்தவுடன் இந்திரன் தலைமையிலான தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஸ்ரீ ஐயப்பனைக் கண்டு வழிபட்டனராம்.  அப்போது தேவர்தலைவனான இந்திரனே புலியாகமாறி ஸ்ரீ ஐயப்பனுக்கு வாகனம் ஆகியுள்ளார்.   தேவர் பலரும் புலியாக மாறி உடன் வந்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் பெண்புலியாக மாறிப் புலிப்பால் கொடுக்க வந்துள்ளார்.  இதுவே புராணம் கூறும் கருத்து ஆகும். எனவே  குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பெண்புலியை ஸ்ரீ ஐயப்பன் வாகனமாகப் பயன்படுத்தவில்லை என்ற விளக்கத்தை அளித்தார்.

நீண்ட காலமாக என் மனதில் நிலைத்திருந்த ஐயத்தைப் போக்கிய காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆனி 16 (30.06.2020) செவ்வாய்க் கிழமை.
---------------------------------------

புதன், 16 அக்டோபர், 2019

08.10.2014 இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு


குருவருளாலும் திருவருளாலும் இராமேசுவரம் - காசி முதலாம் பாதயாத்திரை முடிந்தது.
குருசாமி பச்சைக்காவடி அவருடன் அழைத்துச் சென்ற பாதயாத்திரிகர்கள் நாங்கள் எல்லோரும் இராமேசுவரம் - காசி யாத்திரை நிறைவடைந்தவுடன், காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் தொடரியில் பயணம் செய்து, இராமேசுவரத்தில் வழிபாடு செய்து வணங்கிக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்து குலதெய்வங்களை வணங்கிக் கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை முடிவடைந்தவுடன், அன்னதான வண்டியில் (Tata 407)  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் திரும்பினார்.  அப்போது என்னையையும் கோட்டையூரிலிருந்து இராமேசுவரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இராமேசுவரத்தில் வழிபாடு செய்த பின்னர், திரும்பும் வழியில் 08.10.2014 அன்று, கோட்டையூரில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து என்னை இறக்கிவிட்டுவிட்டு, தங்கிச் சென்றார்.

கோட்டையூரிலிருந்து பொன்னமராவதி வலையபட்டிக்குச் செல்லும் போது எடுத்த படம் இது.

(படத்தில் குருசாமி பச்சைக்காவடி, அடியேன், இரண்டாவது பேரன் சர்வேசுவரன், எனது மனைவி நாகலெட்சுமி)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

20.09.2014 புனித பாத யாத்திரை நிறைவு

20.09.2014
புனித பாத யாத்திரை நிறைவு 



குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம் .
12.09.2014 அன்று அதிகாலை காசி மாநகர் வந்து சேர்ந்தோம் .
இன்று 20.09.2014 சனிக்கிழமை
யாத்திரிகர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .
மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக
2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபட்டு வந்தோம் .
இத்துடன் பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது .
நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு .

இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .

அருள்மிகு திருப்பூவணம்காசிநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து ,
குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி , அன்னபூரணி , காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் சித்திப்பதாக ...

அன்பன்
காசிஶ்ரீ கி.காளைராசன் .
20 செப்டம்பர், 2014 ·


வெள்ளி, 13 செப்டம்பர், 2019

காசியில் அவசியம் வழிபட வேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?

குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .

யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.

இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .

அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.

1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11  நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .

மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

புதன், 11 செப்டம்பர், 2019

கால்வலி, மூட்டுவலி நிவாரணி

புளியும் வேம்பும் ....
எதற்குப் பயன்படும் ?

இவற்றின் இலைகளை ஆய்ந்து சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சூடாக இருக்கும் போது துண்டை நனைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். கால் மூட்டு வலிக்குச் சிறந்த வைத்தியம்.

வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்துக் குளிப்பது போன்று, மாதம் ஒருமுறையாவது புளியஇலையையும் வேப்பயிலையையும் போட்டு வேகவைத்து இளஞ்சூட்டில் குளிக்கலாம். உடல் அசதி ஓடிப்போய் விடும்.
காசிஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் 2013ஆம் ஆண்டு இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செய்தார். இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வரும்போது கால்கள் இரண்டும் வீக்கம் ஆகிவிட்டன. திருச்சியோடு பாதயாத்திரையை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் யாத்திரைக்கு வந்திருந்த சமையல்காரர் வேப்பயிலை புளியயிலையை வேக வைத்து ஒத்தடம் கொடுத்துள்ளனர். இப்படி ஒத்தடம் கொடுத்துக் கொண்டே தினமும் நடந்து சென்றார். இராமேசுவரம் காசி பாதயாத்திரையை நிறைவு செய்தும் விட்டார்.

வேப்பயிலையும் புளியயிலையும் இருக்கும் போது மூட்டுவலி கால்வீக்கம் உடல்அசதி என்றால் கவலைப்படவே வேண்டாம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை. அலகாபாத் ஆசிரமத்தில் உள்ளபடி...






காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015 · 

புதன், 28 ஆகஸ்ட், 2019

காசிராசாவின் சின்னம் மீன்சின்னம்




காசிராசா அரண்மனை கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!  ஆனால் அந்த அருங்காட்சியகத்தில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.  அதனால் பல்லக்கு சிங்காசனம் இவற்றில் பொறிக்கப் பெற்றிருந்த மீன்சின்னங்களைப் படம் எடுக்க இயலாமல் போனது.

28.08.2015, காலை 11.00மணிக்கு,
காசியிலிருந்து கி.காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015

புதன், 7 ஆகஸ்ட், 2019

திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரை

தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.
இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.
படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?


சனி, 20 ஜூலை, 2019

பொந்த புளி

பொந்த புளி



2014 இராமேசுவரம் காசி புனித பாதயாத்திரை
யாத்திரையின் முதல்நாள்.

இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் இருப்பதைப் கண்டேன்.

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.  அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  புளியமரம் போன்று மரப்பட்டைகள் இல்லை.  மேலும் இலையும் புளியஇலை போன்று இல்லை. பெயரில்தான் ‘புளி‘ உள்ளது. 
மரத்தின் விதைகள் எதையும் என்னால் காண இயலவில்லை.  மரத்தைப்பார்த்தால் புளியமரம் போன்று இல்லை.  மிகவும் பருத்து, வினோதமான ஒரு மரமாக இருந்தது.   ஆனாலும் மரத்தில் எழுதப்பட்டுள்ள “பொந்த புளி மரம்“ என்ற பெயரைக் கொண்டே இது ஒருவகைப் புளிய மரமாக இருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 13 ஜூன், 2019

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

Kalairajan Krishnan
13 ஜூன், 2014, பிற்பகல் 8:52 ·

இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மிகமிகப் பழமையான பிள்ளையார் சிலை உள்ளது.  இது ஒருவகையான படிமப்பாறையால் (sedimentary rock) ஆனது.



பழைமையான இந்தப் பிள்ளையார் சிதிலமடைந்துள்ளதால், இதனைத் தூக்கி அரசமரத்தடியில் வைத்துவிட்டுப் புதிதாகக் கோயில் ஒன்று கட்டிப் புதியதொரு பிள்ளையாரை வைத்து வழிபடும் முயற்சியில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இந்தப் பிள்ளையார் மிகவும் பழைமையான படிகப்பாறையால் செய்யப்பட்டது என்ற தெரியவில்லை.  இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே படிமப்பாறை  (sedimentary rock) யால் செய்யப்பெற்ற தூண் ஒன்றும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 


புதிய கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பழமையான பிள்ளையார் சிலை தொல்லியல் துறையினராலும், இந்து அறநிலையத் துறையினராலும் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று .







2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது நான் பார்த்து வழிபட்ட கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

பிரப்பன்வலசை உள்ளுர் அன்பர்களும், மாவட்ட நிருவாகமும், இந்து அறநிலையத் துறையினரும், தொல்லியல்துறையினரும், புவியியல்துறையினரும் இந்தப் படிமப் பாறையினால் செய்யப்பெற்றுள்ள இந்தப் பழைமையான பிள்ளையாரையும் கோயில்தூணையும் மீட்டெடுத்துப் பாதுகாத்திட வேண்டுமென வேண்டுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்