திங்கள், 11 மே, 2020

30.05.2016 அறுபடைவீடு யாத்திரை திருத்தணியில் நிறைவு

அறுபடைவீடு யாத்திரை 
பயணக் கட்டுரை - நிறைவுப் பகுதி

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய  ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி வைகாசி – 15 (28.05.2016) சனிக் கிழமை
இன்று காலை 02.30 மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 13 கி.மீ. நடந்து காலை 07.00 மணிக்கு அரக்கோணம் சோதிநகரில் இருக்கும் குமாரராசா திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.  இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் திரு. பத்மநாபன் அவர்கள், அவருடைய நண்பர் அரக்கோணம் திரு.சோமசுந்தரம் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்.  ஆந்திராவிலிருந்து காசிஸ்ரீ சிவாப்பா அவர்களும் அவரது நண்பரும் அதிகாலையிலேயே திருத்தணிக்கு வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றனர்.  இன்று இரவு தினமணி பத்திரிக்கையின் நிருபர் வந்திருந்து பச்சைக்காவடி அவர்களைப் பேட்டி எடுத்துச் சென்றார்.

துன்முகி வைகாசி – 16 (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை


காலை மணி 05.40க்கு திருத்தணிகை சென்றடைந்தோம்.  திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.  திருத்தணிகை பரம்பரை குருக்கள் அவர்கள் நகரவிடுதிக்கு வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார்.

துன்முகி வைகாசி – 17 (30.05.2016) திங்கள் கிழமை




இன்று காலை 06.15 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்டு மலைக்கோயிலுக்குச் சென்றோம். காலை 8.00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்கு பெற்று சுவாமி தரிசனம் செய்தோம். அபிடேகத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்த மண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம். சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.
இந்த ஏற்பாடுகளை எல்லாம் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மேலும் பஞ்சாமிர்த அபிடேக காணிக்கையையும் அவர்களே செலுத்தினார்கள்.  காலை 09.30 மணிக்கு விடுதிக்குத் திரும்பி வைந்து காலை உணவு சாப்பிட்டோம். பிறகு குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரும் ஊருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

மதியம் 12.30 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி, காசிஸ்ரீ தியாகராசன், ஓட்டுனர் ஆறுமுகம் மூவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு 01.00 மணிக்கு அன்னதான வண்டியில் திருத்தணியிலிருந்து திரும்பிப் புறப்பட்டனர். இரவு 11.00 மணிக்கு வலையபட்டியை அடைந்து வண்டியில் இருந்த சமான்களை எல்லாம் இறக்கி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர்.

திருத்தணியில் விடுதியில் இருந்த யாத்திரிகர்களும் சமையல்காரர்களும் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி தொடரி நிலையம் வந்து அங்கிருந்து 04.55 மணிக்கு புறப்பட்ட மின்வண்டியில் பயணித்து இரவு 07.30 மணிக்கு சென்னை மத்திய தொடரி நிலையத்தை அடைந்தோம். பின் அங்கிருந்து வண்டி மாறி சென்னை எழும்பூர் நிலையத்தை இரவு 08.00 மணிக்கு அடைந்தோம்.

எழும்பூர் நிலையத்தில் காசிஸ்ரீ தனசேகரன் அவர்களது மனைவி திருமதி.குமாரி அவர்கள் சாமிகளுக்கு வடை போண்டா குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்கள். இரவு பலகாரத்தை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் மருமகள் திருமதி.சாந்தி அவர்கள் கொடுத்து உபசரித்தார்கள்.
அனைவரும் சென்னை இராமேச்சுரம் விரைவு வண்டியில் காரைக்குடிக்குப் பயணித்தோம்.

துன்முகி வைகாசி – 18 (31.05.2016) செவ்வாய்க் கிழமை







காலை 05.00 மணிக்கு குருசாமி பச்சைக்க்காவடி அவர்கள் வலையபட்டியில் இருந்து அன்னதானவண்டியில் புறப்பட்டு காரைக்குடி தொடரி நிலையத்திற்கு வந்து காத்திருந்து விரைவு வண்டியில் வந்த யாத்திரிகர்களை வரவேற்று ஆசிர்வதித்தார். காரைக்குடி தொடரி நிலையத்திலிருந்து ஒரு சிற்றுந்து மூலம் யாத்திரிகர்கள் அனைவரும் புறப்பட்டு காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது இல்லத்தை அடைந்தோம். அங்கே அனைவரும் குளித்து காலைஉணவு சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு ஆலத்துப்பட்டிக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
பின்னர் வயிரவன்பட்டி வந்து வழிபாடு செய்து கொண்டு, நகரவிடுதிக்கு வந்து மதியஉணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தோம். மாலை 04.15 மணிக்கு வயிரவன்பட்டியில் இருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி வந்து அங்கு காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் வீட்டில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டோம். பிறகு பிள்ளையார்பட்டி சென்று அருள்மிகு கற்பகவிநாயகருக்கு நடந்த மாலைநேர அபிடேகத்தைப் பார்த்து சுவாமி தரிசனம் செய்து கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம்.

“வாழ்கமன்னவன்செங்கோன்மழைமுகில்
வாழ்கநான்மறைவாணவர்கணானிலம்
வாழ்கவைதிகசைவமலர்த்திரு
வாழ்கவஞ்செழுத்துண்மைநன்மந்திரம்“

அறுபடைவீடு பாதயாத்திரை இறையருளால் இனிதே முற்றிற்று.
ஓம் சரவணபவ.
சுபம்
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

ஆறுபடைவீடு முருகனின் திருவருள் இந்தப் பயணக்கட்டுரையைப் படித்தோருக்கும் ஆகுக.



இவண்,
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 10 மே, 2020

20, 21.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை

20, 21.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை சென்று கொண்டிருந்தோம்.

1) துன்முகி வைகாசி – 7 (20.05.2016) வெள்ளிக் கிழமை
இன்று காலை 03.00 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு 14 கி.மீ. நடந்து தவளக்குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் குடும்பத்தினர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்று மைசூர்போண்டா தேநீர் கொடுத்து உபசரித்தனர்.













அன்னதான வண்டியின் சக்கரத்தில் காற்று குறைந்து விட்டதால் அந்தச் சக்கரத்தைக் கழட்டிச் செப்பனிட்டு மாற்றிப் புறப்படத் தாமதம் ஆனது.
பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தின்ர் தவளக்குப்பத்திற்கு வந்து யாத்திரிகர்களை வரவேற்று வழிகாட்டி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சுமார் 5 கி.மீ. நடந்து பாண்டிச்சேரி முருங்கம்வாக்கத்தில் உள்ள நகரத்தார் விடுதியை அடைந்தோம்.

உடல்நலத்தைப் பாராது ஊர் ஊராய்த் தேடித் திரிந்து ஏடுகளைச் சேகரித்த பெரும் புண்ணியவான். மின்தமிழ் வழி நண்பர் ஐயா அண்ணாமலை சுகுமாரன் அவர்களும் அவரது நண்பரும் வந்து என்னை நலம் விசாரித்தனர். பின்னர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றனர்.
மாலை நேரத்தில் பாண்டிச்சேரி மணக்குளம் விநாயகர் கோயிலுக்குச் சென்று யாத்திர்கள் அனைவரும் வழிபாடு செய்து கொண்டோம். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பச்சைக்காவடி அவர்கள் 12 முறை இராமேச்சுரம்-காசி பாதயாத்திரை செய்தவர் என்பதை அறிந்து அவரை வணங்கி ஆசிகள் பெற்றனர்.
இன்று காலை மதியம் இரவு என மூன்று வேலை உணவும் நகரத்தார் விடுதியில் உண்டோம்.

2) துன்முகி வைகாசி – 8 (21.05.2016) சனிக் கிழமை
இன்று புதுச்சேரியில் ஓய்வு நாள். இன்று காலை மதியம் இரவு உணவைப் பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தினர் சார்பில் வழங்கி யாத்திரிகர்களை உபசரித்தனர்.  யாத்திரிகர்கள் குளிக்க எண்ணெய் வழங்கப்பட்டது. யாத்திரிகர்கள் பலரும் அவரவர் துணிகளைத் துவைத்துக் காயவைத்து, எண்ணைய் தேய்த்துக் குளித்து ஓய்வு எடுத்தனர்.  ‘Super Hero‘ அவர்கள் நகரத்தார் விடுதிக்கு எழுந்தருளி யாத்திரிகர்களைக் கண்டு மகிழ்ந்து காளைராசன் அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார்.


குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

22, 23, 24.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


22.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


Kalairajan Krishnan
10 மே, 2017, பிற்பகல் 8:53 · Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பழமுதிர்சோலை  திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

வைகாசி 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடந்த பயணக் குறிப்புகள் -
துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை









இன்று காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் பஞ்சவடி கோயில் எதிரே தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும், திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

மாலை 04.00 மணிக்கு யாத்திரிகர்கள் சிலர் புறப்பட்டுச் சென்ற தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து திரும்பினர்.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன். கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி. கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.

துன்முகி வைகாசி – 10 (23.05.2016) திங்கள் கிழமை
இன்று காலை 03.00 மணிக்கு தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு 20 கி.மீ. நடந்து திண்டிவனம் அரிகிருஷ்ணன் கல்யாண மண்டபத்தை காலை 07.45 மணிக்கு அடைந்து அங்கு தங்கினோம்.






வழியில் திண்டிவனம் எல்லையில் சிறிதுநேரம் தங்கி ரொட்டியும் தேநீரும சாப்பிட்டோம்.  இந்த மண்டபத்தை தேவகோட்டை உயர்திரு. இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்களின் பங்காளி திரு.என்.நடேசன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மண்டப வாடகையை அவரே கொடுத்துவிட்டார். மேலும் யாத்திரிகர்களுக்குத் தேவையான தண்ணீர் சமையல்வாயு காய்கறி முதலானவற்றையும் கொடுத்து உபசரித்தார்.

துன்முகி வைகாசி – 11 (24.05.2016) செவ்வாய்க் கிழமை

இன்று காலை 02.15 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு 29 கி.மீ. நடந்து அச்சிறுபாக்கம் ஆதிபராசக்தி பள்ளிக்கூடத்தைக் காலை 09.15 மணிக்கு அடைந்து தங்கினோம்.

வழியில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரபுரீசுவரர் திருக்கோயில் வாயிலில் சிறிது நேரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு தொழுபேடு என்ற இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.
தங்கும் இடத்தையும் காலை உணவையும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் தவத்திரு. சிவபெருமான் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
மிகக் கடுமையான வெயில். தங்கியிருந்த இடம் சற்று வசதிக் குறைவாக இருந்தது. எனவே மாலை 04.45 மணிக்குப் புறப்பட்டு 5 கி.மீ. நடந்து மேல்மருவத்தூர் வழியாக சோத்துப்பாக்கம் NVM திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.












இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அச்சிறுபாக்கம் சிவ.ராசேசுவரி அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 5 மே, 2020

05.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை வேடசந்தூர்

 05.05.2016  
அறுபடைவீடு பாதயாத்திரை 
வேடசந்தூர்



Kalairajan Krishnan
5 மே, 2016, பிற்பகல் 2:39 · Vedasandur, தமிழ்நாடு ·

12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடகவீடு பாதயாத்திரை. பழனியில் வழிபாடு முடித்து சுவாமிமலை செல்லும் வழியில் 05.05.2016 காலை மணி 8.30 க்கு வேடசந்தூர் ஐயனார் சந்நிதியில்.

15.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை திருவாலங்காடு

15.05.2016 
அறுபடைவீடு பாதயாத்திரை  
திருவாலங்காடு

 

Kalairajan Krishnan
5 மே, 2017, பிற்பகல் 3:05 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை
ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
பாண்டிச்சேரி சிதம்பரம் வழியாக திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி வைகாசி – 2 (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை




இன்று காலை 02.45 மணிக்கு சுவாமிமலை விடுதியில் இருந்து புறப்பட்டு 28 கி.மீ. நடந்து திருவாலங்காட்டில் இருக்கும் கணேஷ் திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

காலை 6.50 மணி அளவில், வழியில் சாலையோரம் ஸ்ரீ சீத்தாராமர் கோயில் இருந்ததைக் கண்டு நின்றோம். கோயில் வாயிலில் யாத்திரிகர்கள் நிற்பதைக் கண்ட அந்த வீட்டினர் யாத்திரிகர்களைப் பெரிதும் வரவேற்று, கோயிற்கதவைத் திறந்து அங்கே தங்கச் சொல்லித் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். ஸ்ரீ சீத்தாராமரை வணங்கிக் கொண்டோம். கோயிலில் தங்கியிருந்தபோது அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

வழியில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானம் கோயிலைக் கண்டு வணக்கிச் சென்றோம். அதற்கடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி 59ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் அதிட்டானம் இருந்தது. குருமகா சந்நிதானத்தை நினைந்து வணங்கிக் கொண்டோம். அடுத்து திருவாவடுதுறை ஆதீனம் இருந்தது. குருமகா சந்நிதானம் அவர்களை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

திருவாலங்காட்டில் கணேஷ் திருமண மண்டபத்தை குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.


யாத்திரிகர்களில் சிலர் திருவாலங்காட்டில் அருள்மிகு வண்டார்குழலி உடனாய வடவாராண்யேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வ்ணங்கி வந்தனர். மிகவும் பழைமையான கோயில். திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக கருதப்படுகிறது.


திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்திருந்தன.
இன்று மதியம் 02.45 மணிக்கு திருவாலங்காட்டில் இருந்து புறப்பட்டு 5 கி.மீ. நடந்து குத்தாலத்தில் பெரியகோயில் அருகே இருக்கும் லலிதா கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் அருள்மிகு அரும்பன்னவனமுலை அம்மை (அமிர்த முகிழாம்பிகை, ஸ்ரீ பரிமளசுகந்த நாயகி) உடனாய ஸ்ரீ உக்தவேதீஸ்வர சுவாமி (சொன்னவாறு அறிவார்) கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அவரது நண்பர் திரு. திருநாவுக்கரவு மைத்துனர் திரு. கரிகாலன் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  குத்தாலம் திருமதி கமலா அவர்கள் யாத்திரிகர்களுக்கு இரவு உணவு அளித்து உபசரித்தார்கள்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

15.05.2016 திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன்

திருவாலங்காட்டில் 
மூன்றாம் குலோத்துங்கன்


Kalairajan Krishnan
5 மே, 2017, முற்பகல் 10:53 ·
Karaikkudi, தமிழ்நாடு ·

திருவாலங்காட்டில் மூன்றாம் குலேத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)
கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும். இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும். இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது. ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோயினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும்.

திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான். எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான். மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னது சிலையும் நமக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்களின் பெருமை சாதாரண ஒன்றா? பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராச்சோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கண் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதை காணும் போது....

“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“

என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்கலால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்கு கொணர்கின்றன.
(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன். அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்