வைகாசி 16 (30.05.2014) வெள்ளிக் கிழமை
காசி யாத்திரை (நாள் 6)
வைகாசி 17 (31.05.2014) சனிக்கிழமை,
யாத்திரை தொடரும் .... ....
காசி
யாத்திரை ( 27.05.2014
- 2ஆம் நாள்)
தங்கச்சி மடம் முருகன் கோயிலில், அதிகாலை 3.30 மணிக்கு அனைவரும் எழுந்து யாத்திரைக்குத் தயார் ஆனோம். விநாயகர் அகவலும், பெருமாள் போற்றியும் பாடி வழிபாட்டை முடித்துக் கொண்டவுடன், அனைவருக்கும் ஹார்லிக்ஸ் மற்றும் ரொட்டி கொடுத்தார்கள். 4.00 அளவில் அன்னதான வண்டிக்கு முன் அனைவரும் மூன்றுமூன்று பேர்களாக வரிசையில் நின்றோம். குருசாமி அவர்கள் வலம்வந்து சூடம் காட்டித் தேங்காய் உடைத்து அன்றைய யாத்திரையைத் தொடக்கி வைத்தார். சுமார் 4.05 இருக்கும் பாம்பன் பாலம் தொடங்கும் இடத்தில் கால்வைத்ததுதான் தாமதம். காற்று என்றால் காற்று, சும்மா சுழன்று சுழன்று அடித்தது, ஆளையே தூக்கிச் செல்லுவது போன்று பலத்த சூரைக் காற்று வீசியது. சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது. மழையில் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் நனைந்து விடாமல் பாதுகாப்பதே சிரமம் ஆகிப்போனது. சட்டையைக் கழற்றிச் செல்போனைச் சுற்றிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் மின்வெட்டு, பாலத்தில் விளக்குகள் எரியவில்லை. முழுவதும் நனைத்தபடியே அனைவரும் பாம்பன் பாலத்தில் கும் இருட்டில் கையில் வைத்திருந்த டார்ச்லைட் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தோம். மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பாலத்தில் ஓரத்தில் நடைபாதையில் நடந்து சென்றால், ஆங்காங்கே நடைபாதையில் இருந்த சிமிண்ட் ஸ்லாப்களை அகற்றி வைத்திருந்தனர். எனவே நடைபாதையில் நடப்பது மிகவும் ஆபத்தாக இருந்தது. சாலையில் அப்போதைக்கு அப்போது சில வண்டிகள் வேகமாகச் சென்றன.
ஒரு இருசக்கர வாகனத்தில் (பைக்கில்)
சென்ற இருவர், யாத்திரிகர் ஒருவர் மீது மோதும்அளவிற்கு மிகவும் அருகே சென்று, நல்லவேளையாக
விலகி விரைந்து சென்று விட்டனர். வாகனங்கள்
கடந்து செல்லும்போது சாலையிலிருந்த தண்ணீர் எல்லாம் யாத்திரிகர்மேல் அள்ளி இறைத்துச்
சென்றன. சிறிது நேரம் ஆகஆக சூரிய வெளிச்சம்
தெரியத் தொடங்கியது. சரியாகப் பாம்பம் பாலத்தைக்
கடந்து முடிக்கும் போது, மழையும் காற்றும் நின்று போயின.
யாத்திரையின் முதல்நாளில் வெயிலில் வறுத்து
எடுத்து, இரண்டாம்நாளில் கொட்டும் மழையில் குளிரக்குளிரக் குளிப்பாட்டி, இயற்கையானது
எங்களை இராமேசுவரம் தீவில் இருந்து வழியனுப்பி வைத்தது.
பாம்பன் பலம் முடியும் இடத்தில் இருந்த
ஒரு ஐஸ் கம்பெனியில் எனக்கு முன்னால் நடந்து சென்ற யாத்திரிகர்கள் அனைவரும் நின்று
கொண்டிருந்தனர். அனைவரும் அவரவர் வேட்டி துண்டுகளைப்
பிழிந்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
வழியில் மண்டபம் கடலோரக் காவல்படை குடியிருப்பு
அருகேயுள்ள பேருந்துநிறுத்தம் அருகே காலை உணவு சாப்பிட்டோம். அந்தப் பேருந்து நிறத்ததில் படுத்துக்கிடந்த ஒருவருக்குக்
குருசாமிஅவர்கள் உணவு வழங்கினார்.
காலை உணவு முடிந்தவுடன், அங்கிருந்து
புறப்பட்டு பிரப்பன்வலசையில் உள்ள பாம்பன்சுவாமிகள் கோயிலுக்குச் சென்று சேர்ந்தோம். சுமார் 26 கி.மீ. பயணம்.
கோயிலில் இருந்த சுவாமிகள் எங்களை வரவேற்று
உபசரித்தார். யாத்திரிகர் சிலர் முருகன் மீது
பக்திப்பாடல்களைப் பாடி வணங்கினர். யாத்திரிகள்
அனைவரும் அன்று அங்கே கோயில் வளாகத்திலேயே தங்கினோம். அன்று மதியம் சுவையான உணவு. சமையல்காரர்களுக்கு யாத்திரிகர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
பாம்பன் சுவாமிகள் பற்றிய கதைகளைக் கேட்டபடி
அங்கேயே அன்றைய பொழுது கழிந்தது.
அன்பன்
காசிசீர்,
முனைவர், நா.ரா.கி. காளைராசன்,