காளையார்கோயில் புராணம்
(12)
தேவதாசப் படலம்
தேவர்கள் எல்லாம் சோதிவனத்தில்
திகழ்கின்ற தேவதேவனாகிய காளீசரைப் பூசித்த கதையைச் சொன்னோம்.
இனி, தேவிசாலபுரம் என்ற ஊரை ஆண்டுவந்த செல்வந்தனாகிய தேவதாசன் என்பவன் காசி சென்று திரும்பி வந்த சரித்திரத்தைக்
கூறுவோம்.
நாடுகளுள் சிறந்தது பாண்டி
நாடு. பாண்டிய நாட்டின் வளம் அனைத்தையும்
தன்னகத்தே கொண்டு, தெய்வங்களின் திருவருளையும் பெற்று, நாடி வருகின்ற எவர்க்கும்
மிக்க அருளொடு வழங்குகின்ற செல்வர் வசிக்கும் மாடமாளிகை நிறைந்தது தேவிசாலபுரம் என்ற ஊர். அத் திருநகரில், வையத்தைக் காப்பவனும்,
சத்தியம் பொறை ஒழுக்கம் தயை புகழ் இவற்றில் நிகரில்லாதவனும், சைவபக்தியில் சிறந்து
தருமம் தானம் செய்வனும், பூதிசாதன நெறியினில் நிற்போனும், திக்கு எல்லாம் சென்று மீளும்
தேர்களை உடையவனும், மிகுந்த செல்வங்களை உடையவனும், சான்றோனும், சந்திரகுலத்தில் உதித்தவனும், மிகுந்த புகழுக்கு
உரியவனுமாகிய தேவதாசன் என்ற மாறன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அத்தகு பெருமை வாய்ந்த இந்த வேந்தன்,
சோதிவனத்தில் (காளையார்கோயிலில்) உறைந்துள்ள காளீச்சுரனொடு சொர்ணவல்லி, சோமேசன் சவுந்தரவல்லி இவர்களிடம் நிறைந்த பக்தி
மிகுந்தவன். ஆழ்ந்த உள் அன்பினோடு அவன்
ஒருநாள், காளீசர் சந்நிதி முன் வந்து நின்று கீழே விழுந்து
அடிபணிந்து வணங்கினான்.
அப்போது அவன்
உள்ளத்தில் உலகெல்லாம் புகழும் காசி நகருக்குச் சென்று கங்கையில் நீராடி, புனிதமான
கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து காளீசனுக்கு நீராட்ட வேண்டும் என்ற சிந்தனை
எழுந்தது. அவன் தனது தேவிசாலபுரத்தினில் தனது சிறுவயது மகனை அரசாள வைத்து விட்டு, நான்மறையோர்களிடம்
அனுமதியும் ஆசியும் பெற்றுத் தனது பரிவாரங்கள் சூழக்
காசிக்குப் புறப்பட்டான்.
காசியை நோக்கி நெடுந்தொலைவு
நடந்து, தான் காணாத நல்ல பல தேசங்களையும், வளமை மிகுந்த பல நகரங்களையும், நன்னீர்
ஓடும் பல நதிகளையும், விரிந்து பரந்த காடுகள் பலவற்றையும், நெடிதுயர்ந்த மலைகள்
பலவற்றையும் கடந்தனன். நடப்பதினால்
உண்டாகும் துன்பத்தை நோக்கான்.
நெடுந்தொலைவு நடந்தும் காசி நகரைக் காணோமே என்று தவித்து, முற்றும் இளைத்து மேனி
தளர்ந்து கண் துயின்றான்.
அப்போது, அவனது அன்பின்பால்பட்ட அருள் காளீசன் ஒரு
மறையோன் வடிவில் கனவில் தோன்றினான். கங்கை
நீராட்ட, நீ உன் உள்ளத்தில் கருதிய கடவுளுக்கு அக்னித் திசையில் அவராலே பாதாள கங்கை என்ற தீர்த்தம் உருவாக்கப் பட்டுள்ளது. அகத்தியமுனிவர் அப்பெரும் புனித நீர் கொண்டு,
கடவுளுக்கு ஆட்டிச் சித்தி பற்பல பெற்றுள்ளார்.
நீயும், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, உனது கடவுளையும் நீராட்டலாம். ஏமாற்றம் இல்லாமல் உள்ளம் தேறுக என்றனன். அதற்கு மன்னனும்,
நெடுந்தொலைவு கடந்தும், பாவங்கள் அனைத்தும் போக்க வல்ல, காசியினைக் கண்டு
மகிழ்ந்தனன் இல்லை, நொந்தேன், சொல்லிய வண்ணம் எவ்வாறு தொடர்ந்து அங்குச் செல்வேன்
என்று கூறினான். அந்த மறையோனும் அங்கு ஒரு குளத்தைக் காட்டி இதில் மூழ்கினால் எளிதில் சென்றிடலாம் என்று
கூறி மறைந்தான்.
தேவதாசனும் கனவில் இருந்து
விழித்து எழுந்தான். காளீசன் தாள் நினைந்து
வணங்கினான். வைகறைப்
பொழுதில், தான் கனவில்
கண்ட குளத்தை நோக்கிச்
சென்று அடைந்தனன். அப்போது, அங்கே, இரவு கனவில் தோன்றிய மறையோன் நேரில் தோன்றி, மன்னவ,
இங்கு இதில் மூழ்குக என்று மன்னனின்
கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அந்தத்
தீர்த்தத்தில் ஆழ்த்திவிட்டுச்
சென்றுவிட்டான். கணநேரத்தில் அங்கே சோதிவனத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில்
தீர்த்தமாடி எழுந்து காளீசன் ஆலயத்தைக் கண்டு களிப்புற்றான் மன்னன்.
அங்கு வந்தோரிடம் மன்னன் இந்த மகிமையைக் கூறினான்.
சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி, பூதிகண்டிகை நன்கு அணிந்து, செம்
பொன்னால் ஆன கலயத்தில் அத்தீர்த்தத்தை எடுத்து, அன்பினால் காளீசனுக்கு
நீராட்டினான். நறுமலர்களைக் கொண்டு
அருச்சனை செய்து, தூப தீபம் காட்டி,
நிவேதனங்கள், பதினாறு உபசாரங்களும் செய்து உள மகிழ்ச்சியோடு, ஐந்தெழுத்து
மந்திரத்தை நினைத்து, வலம் வந்து காளீசரைப் போற்றி நின்றான் மன்னவன். காளீசனும்
முன்போல் மறையோன் வடிவில் வந்து தோன்றினான். தேவதாசனும் அவரை நோக்கி ஆனந்தக்
கண்ணீர் மல்க, நிலம் கொள்ளத் தாழ்ந்து எழுந்து நின்று, மெய்சிலிர்த்து, “எங்கள்
நாயகன் காளீசனது ஆலயத்தின் பாதங்களையும் உங்களது பாதங்களையும் இடையறாது நினைத்து
வணங்கும் பக்தியைத் தந்து அருள்க“ என வேண்டினான்.
“அது தந்தோம் மற்றும் அன்பினால் நமது பேர் நினைந்து கங்கையில் நீராடுவோர்க்கும் அவர்கள்
கருதிய அனைத்தும் ஈவோம்“ என்று அருளிச் செய்து சூக்கும இலிங்கத்துள் மறைந்தான்.
அன்று தொட்டு இடைவிடாமல் அவன் அடிக்கு அன்பு பூண்டு, தனது தேவிசாலபுர நகரை அடைந்து
தனியரசு உரிமை ஏற்று மக்களது உள்ளம் மகிழும்படியாகப் பாண்டியன் வழுதி அரசு வீற்றிருந்தான்.
ஆதலினால் கங்கைக்கு நிகரான இச்சிவகங்கைத் தீர்த்தமாடி,
அகத்தியன் உண்டாக்கிய தீர்த்தத்திலும் மூழ்கினால் பாவங்கள் எல்லாம் அகன்று முத்தி
கிடைக்கும். மேலும் சிவகங்கைத் தீர்த்தத்திற்குத் தெற்கே உமையினால் உண்டாக்கப்பட்ட
அயர்வறு
தீர்த்தம் ஒன்று உள்ளது. அதில் மூழ்கினால் அயர்ச்சி நீங்கி முன்செய்த
தவப்பலன்கள் கிடைக்கும். சிவகங்கைத்
தீர்த்தத்திற்கு நிருதி திக்கில் காளிதீர்த்தம்
உள்ளது. அதில் தீர்த்தமாடினால், இன்னல்
போக்கும். அத் தீர்த்தத்திற்குத் தெற்கே பாரதி
தீர்த்தம் உள்ளது. அதில் தீர்த்தமாடினால், மனதிற்கு மகிழ்ச்சி
கல்வி முதலான அனைத்தும் அளிக்கும்.
அதற்குக் கிழக்கே பிரம்மதீர்த்தம்
உள்ளது. அதில் மூழ்கினால் பிரமஞானம் பெற்று நீண்டகாலம் வாழ்வர். சிவகங்கைத்
தீர்த்தத்திற்கு மேற்கே விட்ணு
தீர்த்தம் உள்ளது. அதில் மகாவிட்ணு
தீர்த்தமாடி, இத்தீர்த்தத்தினால்
காளீசனுக்கும் நீராட்டிப் பூசைகள் செய்து மகாலெட்சுமியை அடைந்தான். இதில் தீர்த்தமாடினால் மிகுந்த செல்வம்
கிடைக்கும். காளீசனுக்கு வாம திசையில் கவுரி உண்டாக்கிய ஒரு தூய தீர்த்தம் உள்ளது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் மனத்தில் நினைத்தன எல்லாம் நடக்கும். அத் தீர்த்தத்திற்குக் குணதிசையில்
சொர்ணவல்லியம்மை உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது.
இத்தகு தீர்த்த மேன்மை எடுத்து உரைப்பது அரிதாகும். பக்தியினால் இத்
தீர்த்தங்களில் மூழ்கினோரும், அந்தத்
தீர்த்தத்தை உடம்பில் தெளித்துக் கொண்டோரும், அவர்கள் நினைத்தன எல்லாம் பெற்று நலமுடன் வாழ்ந்து முத்தி அடைவர் என்று முனிவர்
அருளிச் செய்தார்.