மண்டை வெல்லம்
சிலவற்றை நினைத்தாலே இனிக்கும். அவற்றுள் ஒன்று வெல்லக்கட்டி. கருப்பைச் சாரு பிழிந்தெடுத்து அதைக் காய்ச்சி வெல்லக்கட்டி தயார் செய்கின்றனர். வெல்லக்கட்டி இரண்டு வகைப்படும். கையால் பிடித்து வைப்பதை மண்டைவெல்லம் என்றும், அச்சில் இட்டு வார்த்து எடுப்பதை அச்சுவெல்லம் என்றும் அழைக்கின்றனர். இதேபோல் பனைமரத்திலிருந்து பதனீரில் இருந்து கருப்பட்டியும், ஈச்சமரத்துப் பதனீரில் இருந்து பனங்கற்கண்டும் செய்கின்றனர்.
தெய்வங்களுக்குப் படையல் செய்யப்படும் அனைத்து வகை இனிப்புப் பண்டங்களுமே வெல்லத்தினால் செய்யப்படுகின்றன. அனைத்து வகையான இனிப்புப் பலகாரங்கள், கடலை உருண்டை, பாயாசம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் செய்யவும் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
தைத்தி
1960-70 ஆண்டுகளில் பள்ளியின் கோடைகால விடுமுறையின் போது எங்களது கிராமம் மாரநாட்டிற்குச் செல்வோம். எங்களது வயலில் கரும்பு வெட்டி, அவற்றைத் தலைச்சுமையாகத் தூக்கிச் சென்று சர்க்கரைஆலை (கிரசர்) அருகே போடுவார்கள். காளைமாடுகளால் இயக்கப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்திச் கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பார்கள். கருப்பஞ்சாற்றைக் கொப்பரையில் இட்டுக் காய்ச்சி, பாகு பக்குவம் வந்ததும் அச்சுக்களில் வார்த்து எடுத்து வெல்லக்கட்டி தயார் செய்வார்கள். வெல்லக்கட்டிகளை மூடைகளாகத் தைத்து மாட்டுவண்டிகளில் ஏற்றி மதுரை சென்று வெல்லமண்டியில் விற்பர்.
எங்களது கிராமத்தில் சர்க்கரையாலை நடத்துபவர்கள் அனைவரும் கோயம்பத்தூரில் அருகில் உள்ள ஊரார்களா இருப்பர். 1970-80 ஆண்டுகளில் கருப்பஞ்சாறு பிழிய, காளை மாடுகளுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சக்திசர்க்கரை ஆலை வந்த பின்னர், வெல்லம் தயாரிப்பது வெகுவாகக் குறைந்து, இப்போது இல்லையென்றே ஆகிவிட்டது. அனைத்துக் கரும்புகளும் சீனி தயாரிக்கும் தொழிற்சாலைக்கே சென்று விடுகின்றன.
கடந்த ஜய வருடம் வைகாசி மாதம் (மே - ஜுன் 2014) காசியாத்திரை செல்லும் போது சேலம் அருகே கமலாபுரம் என்ற ஊரில், சாலையோரம் கனவிலும் வராத கரும்புஆலை ஒன்றைக் கண்டேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது எடுத்த படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன். இப்போதெல்லாம் அச்சுவெல்லம் அதிகம் தயாரிப்பதில்லையாம். மண்டைவெல்லம் அதிக அளவில் விரைவில் விற்பனை ஆவதால் அவற்றையே அதிகம் செய்கிறோம் என்றனர்.
தைப் பொங்கலுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளன. மண்டைவெல்லம் தயார்.
அன்பன்
நா.ரா.கி.காளைராசன்google.com/+KalairajanKrishnan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக