திங்கள், 1 ஜூன், 2020

01.06.2014 காசி யாத்திரை (7ஆம் நாள்)

01.06.2014 காசி யாத்திரை (7ஆவது நாள்)

வைகாசி 18 (01.06.2014) ஞாயிற்றுக் கிழமை.

தேவகோட்டை தர்மபரிபாலனசபையிலிருந்து புறப்பட்டு அமராவதிபுதூர், தேவகோட்டைசாலை வழியாகக் காரைக்குடி காசிசத்திரம் வந்து சேர்ந்தோம்.  இன்றைய பயணம் சுமார் 16 கி.மீ. தொலைவுதான் என்பதால் எப்போதும் போல் அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படாமல் 5.00 மணியளவில் புறப்பட்டு 9.30 மணியளவில் காரைக்குடி காசிசத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழியில் அமராவதிபுதூர் கடந்ததும் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  தேவகோட்டைசாலை இருப்புப் பாதையைக் கடந்ததும் சாலைக்குத் தெற்கே உள்ள கூட்டறவு கட்டிடத்தில் காலை உணவு. 

7 ஆம் நாள் - எனது அனுபவம்

தொத்தமாடு - இன்று நடைப்பயணம் தொடங்கிய உடனேயே பலரும் வெயிலுக்கு முந்திச் சென்றுவிட வேண்டும் என்று வேகவேகமாக நடந்து சென்றனர். செருப்புக் கடித்துக்  கால் பெருவிரலில் புண் ஏற்பட்டு அதன் காரணமாக மெதுவாக நடந்து, என்னுடன் வந்த சிவாப்பா (எண் 21) அவர்களும் இன்று வேகமாக நடந்து சென்று விட்டார்.   ஆனால் தொத்தமாடாக மாறிப்போன நானோ மிகவும் மெதுவாகவே நடந்து வந்தேன்.  காலை நேரத்திலேயே வெயில் சுள்ளென்று முதுகில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

யாத்திரை தொடங்கி 5நாட்கள் மட்டுமே நடந்துள்ளோம்.  6ஆவது நாள் நடக்கவில்லை.  இப்போதே இப்படி யிருக்கிறதே?  நான் எப்படி 103 நாட்கள் நடந்து காசிக்குப் போகப்போகிறோம் என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். 

அல்லது ஆற்றல் ஓம்புமின் - கிட்டாதாயின் வெட்டென மற …. ,  தகுதிக்கு மீறி ஆசைப்படாதே …. , என்பன போன்ற பல பழமொழிகள் நினைவிற்கு வந்து என்னை அமுக்கின.  இங்கேயே இப்படி யென்றால், இந்திதெரியாமல் மற்ற மாநிலங்களில் ஒத்தைமாடாக எப்படி நடந்து செல்வது?  பாதிவழியில் என்னால் நடக்கமுடியவில்லை என்றால் எனக்கும் சிரமம், குருசாமிக்கும் சிரமம், மற்றபிற யாத்திரிகர்களுக்கும் சிரமம் ஆகுமே என்று நினைத்து வருந்தினேன்.  உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் சோர்ந்து போனேன்.  தேநீர் குடித்தால் பரவாயில்லை என்பது போல் தோன்றியது.

காரைக்குடியில் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னைக் காண வருவார்கள்.  அவர்களைக் கொண்டு குருசாமியிடம் மெதுவாக எடுத்துச் சொல்லி,  யாத்திரையில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் காரைக்குடியுடன் பாதயாத்திரையை நிறுத்திக் கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

விதி மீறல் - பாதயாத்திரையின் போது, தேநீர் ரொட்டி மிட்டாய் உட்பட கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.  எது வேண்டுமானாலும் குருசாமியிடம் மட்டுமே கேட்கவேண்டும்.  அவர் வாங்கிக் கொடுப்பார்“ என்பது யாத்திரையில் முக்கியமான விதி.  எனக்கோ மிகவும் சோர்வாக இருந்தது.   தேநீர் குடித்தால் பரவாயில்லை என்பது போல் தோன்றியது.  அன்னதான வண்டி இன்னும் வரவில்லை.  அவர்கள் வந்தால் தான் தேநீரும் ரொட்டியும் கிடைக்கும். 
            திரும்பிப் பார்த்தேன். குருசாமி அவர்கள் வெகுதொலைவில் எனக்குப் பின்னால் வருவது தெரிந்தது.

நாம்தான் யாத்திரையை முடித்துக் கொள்ளப் போகிறோமே, அப்படியிருக்கக் கடையில் தேநீர் வாங்கிக் குடித்தால் என்ன? என்று மனத்தில் தோன்றியது.  அருகில் அமராவதிபுதூர் டீக்கடை கண்ணில் தெரிந்தது.  சற்று ஆறுதலாக இருந்தது.  கடைக்கு எதிரே ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தின் நிழலில் வந்து நின்று சற்று இளைப்பாறிச் சாலையைக் கடந்து டீக்கடைக்குச் செல்லத் தயாரானேன்.   முன்புபோல், ஒரே எட்டில் என்னால் இப்போது சாலையைக் கடக்க இயலாது என்பதை உணர்ந்திருந்தேன். சாலையைக் கடப்பதற்காக சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஏதும் வருகின்றனவா? எனப் பார்த்தேன். 

மூன்று சக்கர வண்டிக்காரர் - ஒரேயொருவர் மட்டும் மூன்றுசக்கர வண்டியைக் கையால் ஓட்டிக் கொண்டு எனக்குப் பின்னால் வந்து கொண்டிந்தார்.  அவரோ, கையால் மூன்றுசக்கர வண்டியை ஓட்டி வருகிறார், நாமோ நடக்க முடியாமல் நடக்கிறோம், எனவே அவர் நம்மைக் கடந்து சென்றதும் நாம் சாலையைக் கடந்து செல்வோம் என்று நினைத்து நின்றேன். அவரும் என்னைக் கடந்து செல்லாமல், என்னருகே வந்ததும் வண்டியை நிறுத்தி, நான் நின்ற மரநிழலில் அவரும் சற்று இளைப்பாறினார்.

ஒருசில நொடிகள் அவர் தாமதித்து இருந்தால், நான் சாலையைக் கடந்திருப்பேன்.  ஒருசில நொடிகள் நான் தாமதித்து இருந்தால், அவர் என்னைக் கடந்து சென்றிருப்பார்.

மிகவும் சோர்ந்து போயிருந்தார். குருட்டழுக்குப் பிடித்த ஆடை,  வண்டியைச் சுற்றிலும் பாட்டில்களும் பாத்திரங்களும் துணிகளும் தொங்கிக் கொண்டிருந்தன.  மூன்று சக்கர வண்டியின் முன்சக்கரம் சிறிது நெளிந்து கோட்டமாக இருந்தது.  பிரம்பு ஒன்றைச் சாய்த்துக் கட்டி வைத்திருந்தார்.  சுமார் 65 வயது இருக்கும். வடநாட்டவர் போல் தோன்றினார்.

பையா,  டீ சாப்பிடுகின்றீர்களா? எனக் கேட்டேன்.  முதலில் வேண்டாம் என்று தலையை ஆட்டினார்.  நான் எனக்காகச் சாப்பிடச் செல்கிறேன்.  அப்படியே ஒரு கப் உங்களுக்கும் வாங்கித் தருகிறேன்.  இதில் எனக்குச் சிரமம் ஒன்றும் இல்லை என்றேன்.  சிறிது நேர தயக்கத்திற்குப் பின், சரி என்று தலையை ஆட்டினார்.  தேநீர் வாங்கி வருவதற்காக வண்டியில் கட்டிவைத்திருந்த பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்தார்.  வண்டியைவிட்டுக் கீழே இறங்க முயற்சித்தார்.  

அதிர்ச்சி வைத்தியம் - செயற்கைக் கால் ஒன்றை எடுத்து மாட்டினார். அதைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போனோன், என் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு செயற்கைக் காலை எடுத்து மற்றொரு காலில் மாட்டினார்.  அவருக்கு இரண்டு கால்களுமே முழங்காலுக்கீழே இல்லை, இதைப் பார்த்ததும் பெரிதும் அதிர்ந்து போனேன்.

பையா, எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று கேட்டேன்.  இராமேசுவரத்தில் இருந்து வருவதாகக் கூறினார்.  அப்படியானால்,  உங்களது சொந்த ஊர் எது? என்று கேட்டேன்.   “மேதில்லி” என்றார், அப்படியானால் …. …? என்று சற்று இழுத்துக் கேட்டேன்.  தனக்கு வியாதி வந்து இரண்டு கால்களையும் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைத்தால் இராமேசுவரம் வந்து கும்பிடுகிறேன் என்று வேண்டிக் கொண்டதாகவும் கூறினார்.  அதன்படி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக புதுதில்லியில் இருந்து இந்த வண்டியில் இராமேசுவரம் வந்து சாமிகும்பிட்டு விட்டு, இப்போது புதுதில்லிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரது ஒவ்வொரு பதிலும் எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

என்னடா இது, இரண்டு கால்களும் இல்லாத மனிதன் புதுதில்லியிலிருந்து இராமேசுவரம் வந்து சாமிகும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார்.  நமக்கோ எல்லாமும் நன்றாக உள்ளன, சாப்பாடு சவரட்டைனையும் பிரமாதமாக உள்ளது.  நடந்துசெல்வதற்கு நமக்கு என்ன கேடு வந்தது?  என்று நினைத்தேன்.

இப்போது, சற்று தொலைவில் அன்னதான வண்டியைச் சாலையோரம் நிறுத்தி, ஓட்டுநர் குருசாமியுடன் பேசிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. 

அவ்வளவுதான், வேகவேகமாகச் சாலையைக்கடந்து சென்று ஒரு கப் டீ வாங்கிக் கொண்டுவந்து அந்த அன்பரிடம் கொடுத்தேன்.  பின்னால் வருபவர் எங்களது குருசாமி, எனவே நான் விடை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

முன்பு இருந்த அலுப்பு சலிப்பு ஏதும் இப்போது என்னிடம் இல்லை.  தொத்தல் மாடாக இருந்த நான், திடீரென மஞ்சவிரட்டு மாடாக மாறி, வேகமாக துள்ளிக்குதித்து வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டேன்.  தேவகோட்டை சாலை தொடரிநிலையம் அருகே மற்ற எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.   வேகவேகமா நடந்து அவர்களுடன் சென்று சேர்ந்து விட்டேன்.  சற்று நேரத்தில் குருசாமி அவர்களும் வந்துவிட்டார்கள்.  காலை உணவை முடித்துக் கொண்டு, காரைக்குடி நோக்கி நடந்தோம். 

சிறிது நேரத்தில் காரைக்குடி நடராஜா திரையரங்கம் வந்து சேர்ந்து விட்டோம். குருசாமி அவர்கள் மட்டும் வரவேண்டும்.  அவர் வந்தவுடன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து காசிச்சந்திரத்திற்குச் செல்ல வேண்டும்.  அதற்காகக் காத்திருந்தோம்.

குருசாமி வருகிறாரா? எனச் சாலையைப் பார்த்தேன்.  ஆனால் சாலையில் அந்த மூன்றுசக்கர வண்டிக்காரர் வருவதைப் பார்த்தேன்.  அவரும் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்த அதே வேப்பரத்தின் நிழலில் வந்து சேர்ந்து இளைப்பாறினார்.  உங்களது வண்டியைப் பழுது நீங்கித் தருகிறேன், அதன்பின் பயணத்தைத் தொடருங்கள் எனக் கூறினேன்.  “வேண்டாம் வேண்டாம்” என்ற பலமாகத் தலையை ஆட்டினார்.  இந்தியில் பேசுவதைக் கேட்ட அருகில் இருந்த ஆட்டோக்காரர் வேகவேகமாக வந்து அவரிடம் அருமையாக இந்தியில் பேசினார்.  நாங்கள் செல்வதை எல்லாம் அவரிடம் அருமையாக இந்தியில் எடுத்துக் கூறினார்.  வண்டியை முழுவதும் சரிசெய்து, புதுவண்டிபோல் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்றுகூறி பணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்தேன்.  உடனிருந்த யாத்திரிகர் சிலரும் பணம் கொடுத்தார்கள்.  அந்த வடநாட்டு யாத்திரிகர் இந்த உதவியை ஏற்க மறுத்தார்.

குருசாமி அவர்கள் இப்போது அருகில் வந்து விட்டார்.  நாங்கள் அவருடன் சேர்ந்து புறப்படத் தயாரானோம்.  இவரது மூன்று சக்கர வண்டியை முற்றிலும் சரிசெய்து, புதுவண்டிபோல் ஆக்கி இவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்கிறேன் என்று ஆட்டோக்காரர் எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்து பொறுப்பு ஏற்றுக் கொண்டு, எங்களை வழியனுப்பி வைத்தார்.

யாத்திரிகர் பலரும் இந்த வடநாட்டுக்காரர் பற்றியே பேசி இன்றைய பொழுதைக் கழித்தோம்.

இன்றைய பயணத் தூரம் 16 கி.மீ.
 

https://goo.gl/maps/VuzQJmxdfs9jFNYa9

பயணங்கள் தொடரும் …..

அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக