02.06.2014 காசி பாதயாத்திரை (8 ஆவது நாள்)
வைகாசி 19 (02.06.2014) திங்கள் கிழமை.
காரைக்குடி யிலிருந்து காலை 3.30 மணிக்கு புறப்பட்டோம்.
உ. சிறுவயலைச் சேர்ந்த திரு. செந்தில் நாதன் (எண் 8) மற்றும் திரு. மெய்யப்பன் (எண் 12) இருவரும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்தனர். சிறுவயல் நகரத்தார் பலரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களை நேரில் சந்தித்து சிறுவயல் வழியாகக் குன்றக்குடிக்குச் செல்லுமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். எனவே காரைக்குடியிலிருந்து கோவிலூர் வழியாகக் குன்றக்குடிக்குச் செல்லாமல், சிறுவயல் வழியாகக் குன்றக்குடி சென்றோம். சிறுவயலில் காலை 5.45 மணிக்கு, நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு வரவேற்பு அளித்தனர். அருள்மிகு பொன்னழகி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்து வைத்தனர். குருசாமி அவர்கள் நகரத்தார்களை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார்.
உ. சிறுவயலில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் உள்ள சாளி ஸ்ரீ ஐநூற்றிவிநாயகர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டோம். அங்கிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் கோபுரம் அருமையாகத் தெரிந்தது கண்டு வணங்கிக் கொண்டேன்.
குன்றக்குடி வழியாகச் செல்லும் போது, குன்றக்குடி மடத்தின் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டேன். அப்போது இறையருளால் தவத்திரு அடிகளாரை வணங்கும் பேறு பெற்றேன். அடிகளார் அவர்கள் என்னை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார். (இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஓர் அற்புதம் என்றே கூற வேண்டும், இது பற்றி விரிவாகக் கீழே எழுதியுள்ளேன்).
10.00 மணிக்கு பிள்ளையார்பட்டி வந்தோம். வழியில், எதேச்சையாக எங்களை இராமசாமி தமிழ்க்கல்லூரின் மேனாள் முதல்வர் முனைவர் நா. வள்ளி அவர்கள் சந்தித்தார். குருசாமி அவர்களிடம் ஆசிபெற்றார். அம்மா வள்ளி அவர்கள் எனது முனைவர்பட்ட ஆய்வு நெறியாளர் ஆவார். அம்மா அவர்கள் என்னை ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது.
10.40 மணிக்கு வைரவன்பட்டி கோயில் அருகேயுள்ள நகரத்தார் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் யாத்திரிகர்களை வரவேற்று மதியஉணவும் இரவுஉணவும் வழங்கினர்.
வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் தங்கல், ஓய்வு.
இன்றைய பயணம் சுமார் 18 கி.மீ.
8 ஆம் நாள் - எனது அனுபவம் - முந்தைய நாட்களில் எனக்கு இருந்த உடல் அலுப்போ, மனச்சோர்வே இப்போது இல்லை. இருந்தாலும் மற்றபிற யாத்திரிகர்களைப் போன்று வேகமாக என்னால் நடக்க இயலவில்லை. குன்றக்குடிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போதே ஒரு குற்ற உணர்வு என் மனதில் தோன்றியது. குன்றக்குடி தவத்திரு அடிகளார் அவர்களது ஆசிகளைப் பெறவில்லையே என்று எண்ணம் எனக்கு வருத்தத்தை உண்டாக்கியது.
திருப்பூவணம் கோயிலமைப்பை ஆய்வு செய்து, “திருப்பூவணக்காசி” என்ற பெயரில் நூலாக்கம் செய்திருந்தேன்.
குன்றக்குடி தவத்திரு அடிகளார் அவர்கள் 24.09.2007 அன்று இந்த நூலைக் வெயிட்டுச் சிறப்புச் செய்தார்கள். திருப்பூவணக்காசி என்ற பெயரில் நூல் எழுதி வெளியிடும்போது, காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்று வழிபட வேண்டுமென வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுகோளின் பயனாகவே இந்தக் காசி பாதயாத்திரை சித்தித்தது.
குன்றக்குடி தவத்திரு அடிகளார் அவர்கள் 24.09.2007 அன்று இந்த நூலைக் வெயிட்டுச் சிறப்புச் செய்தார்கள். திருப்பூவணக்காசி என்ற பெயரில் நூல் எழுதி வெளியிடும்போது, காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்று வழிபட வேண்டுமென வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுகோளின் பயனாகவே இந்தக் காசி பாதயாத்திரை சித்தித்தது.
குன்றக்குடியைக் கண்டு மனம்குன்றியது -
குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைச் சந்தித்து, பாதயாத்திரை செல்வதற்கு அவரது ஆசிகளைப் பெறமுடியாமல் போனதே என்று மனம் வருந்தினேன். சிறிது வேகமாக நடந்தால், குன்றக்குடி மடத்தில் இருக்கும் யாரிடமாவது செய்தியைச் சொல்லிச் சென்றிடலாம் என்று எண்ணினேன். வேகமாக நடக்கத் தொடங்கினேன். என்னதான் நான் வேகமாக நடந்தாலும், எனக்கு முன்னால் நடந்தவர்களைப் பிடிக்க முடியவில்லை. குன்றக்குடி வந்துவிட்டோம். அடிவாரத்தில் கோயில் நுழைவாயில் நின்றுகொண்டு, அருள்மிகு சண்முகநாதனை நினைந்து வணங்கிக் கொண்டு நடந்தேன். குன்றக்குடி மடத்தின் வாயில் அருகே செல்லும் போது, மற்ற யாத்திரிகர்கள் எல்லோரும் வேகவேகமாக என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். செய்தி சொல்லிச் செல்வோம் என்று நினைத்தால், மடத்தின் வாயிலிலும் உள்ளே மண்டபத்திலும் யாரையும் காணோம்.
குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைச் சந்தித்து, பாதயாத்திரை செல்வதற்கு அவரது ஆசிகளைப் பெறமுடியாமல் போனதே என்று மனம் வருந்தினேன். சிறிது வேகமாக நடந்தால், குன்றக்குடி மடத்தில் இருக்கும் யாரிடமாவது செய்தியைச் சொல்லிச் சென்றிடலாம் என்று எண்ணினேன். வேகமாக நடக்கத் தொடங்கினேன். என்னதான் நான் வேகமாக நடந்தாலும், எனக்கு முன்னால் நடந்தவர்களைப் பிடிக்க முடியவில்லை. குன்றக்குடி வந்துவிட்டோம். அடிவாரத்தில் கோயில் நுழைவாயில் நின்றுகொண்டு, அருள்மிகு சண்முகநாதனை நினைந்து வணங்கிக் கொண்டு நடந்தேன். குன்றக்குடி மடத்தின் வாயில் அருகே செல்லும் போது, மற்ற யாத்திரிகர்கள் எல்லோரும் வேகவேகமாக என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். செய்தி சொல்லிச் செல்வோம் என்று நினைத்தால், மடத்தின் வாயிலிலும் உள்ளே மண்டபத்திலும் யாரையும் காணோம்.
குருமகா சந்நிதானம் முன் குறுகினேன் - சரி நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான், என்று எண்ணிக் கொண்டே மடத்தின் வாயிலில் நின்றுகொண்டு ஒரு கும்பிடு போட்டேன். அப்போது, மடத்தின் வாயிலைக் கடந்து குருமகா சந்நிதானம் அவர்கள் மடத்தின் உள்ளே சென்றார். எனக்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்போதுதானே குருமகா சந்நிதானத்தை நினைத்துக் கும்பிட்டோம். இதோ, அவரே மடத்தின் உள்ளே சென்று கொண்டிருக்கிறாரே என்று வியந்து, அடிகளாரைப் பின் தொடர்ந்தேன். அடிகளார் அவர்களின் பின்னே வந்த மடத்தின் சிப்பந்தி ஒருவர் என்னைத் தடுத்தார். சாமி பூஜையை முடித்துக் கொண்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவார். இங்கேயே இருங்கள் என்று சொன்னார்.
அடிகளார் அவர்கள் நிச்சயம் நம்மைப் பார்த்திருப்பார்கள். ஒருவேளை காவிஉடையில் நாம் இருப்பதால் அடையாளம் தெரியாமல் போய்விட்டதோ, என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அடிகளார் அவர்கள் சிறிது நேரத்திலே பூஜையை முடித்துவிட்டு வந்துவிட்டார்கள். அடிகளாரின் அடிகளில் விழுந்து வணங்கி எழுந்தேன். அடிகளார் அவர்கள் ஆச்சரியத்துடன், இது என்ன இந்தக்கோலம் என்பது போன்று வியந்து என்னைப் பார்த்தார்கள்.
திருவருள் - காசிக்குப் பாதயாத்திரை செல்கிறேன் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்து விபூதி பிரசாதம் கொடுத்தார்கள். உங்களது குருசாமி யார்? மொத்தம் எத்தனைபேர் செல்கின்றீர்கள்? எத்தனை நாள் பயணம்? எங்கே தங்குவீர்கள்? என்ற விபரங்கள் எல்லாம் மிகவும் ஆம்வமாகக் கேட்டறிந்து கொண்டார்கள். அவரது உதவியாளரிடம் கும்பாபிஷேகப் பிரசாதம் 20 பைகள் கொண்டுவரச் சொல்லி என்னிடம் கொடுத்து, குருசாமி முதலான யாத்திரிகர் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்கள்.
மடத்தின் வாயிலில் நின்றுகொண்டு கைகளை உயர்த்திக் கும்பிட்ட அந்த ஒரு நொடிப் பொழுது நான் முந்தியிருந்தால், அடிகளார் அவர்களைப் பார்த்திருக்க மாட்டேன். சிறிது நான் பிந்தி வந்திருந்தாலும் அடிகளார் அவர்களை நான் பார்த்திருக்க மாட்டேன். மிகவும் கனகச்சிதமாகச் சொல்லி வைத்ததுபோல், நொடிப்பொழுது நேரத்தில் அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பெரும்பேற்றை அருளிய அருள்மிகு சண்முகநாதனை நினைந்து வணங்கிக் கொண்டு பிள்ளையார்பட்டி நோக்கி நடக்கத் தொடங்கினேன். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் சற்று தொலைவில் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார். 20 பிரசாதப் பைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாக நடப்பது எனக்குச் சற்று சிரமமாக இருந்தது.
குருவருள் - சற்று தூரம் சென்று கொண்டிருக்கும் போது, என்னைக் கடந்து சென்ற வாகனம் (Car) ஒன்று நின்றது. அதிலிருந்து அம்மா வள்ளி அவர்கள் இறங்கியதைக் கண்டதும் மிகவும் அதிசயித்துப் போனேன். அம்மாவிடம் குருசாமிஅவர்கள் நடந்து செல்வதைச் சுட்டிக்காட்டினேன். அம்மா அவர்களும் வண்டியில் ஏறிச் சென்று குருசாமி அவர்களிடம் நின்று ஆசிபெற்றார்கள்.
இன்றை தினம் எனக்குச் சற்றும் எதிர்பாரதவிதமாகத் திருவளும் குருவருளும் கிடைத்தது. குன்றக்குடி மலையைப் பார்த்து நினைத்து வேண்டியது வேண்டியபடியே உடனடியாக நடைபெற்றது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
எப்படி இப்படி யெல்லாம் நடைபெற்றது என்று இன்றளவும் என்னால் நம்ப முடியவில்லை.
குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்கள் வழங்கிய கும்பாபிஷேகப் பிரசாதப் பைகளைக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்து, யாத்திரையின் நிறைவு நாளில் யாத்திரிகர் அனைவருக்கும் கொடுத்து ஆசிர்வதித்தார்.
குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக