வியாழன், 18 ஜூன், 2020

எப்போதும்வென்றான் கல்வெட்டு

எப்போதும்வென்றான் கல்வெட்டு

காசிஸ்ரீ.பச்சைக்காவடி அவர்களின் ஆறுபடைவீடு யாத்திரை. திருச்செந்தூர் வழிபாடு முடித்து பழநி செல்லும் வழியில், எப்போதும்வென்றான் என்ற ஊரில் உள்ள சோலைசாமி கோயிலில் 21.04.2016 அன்று யாத்திரிகர் தங்கினோம். அங்கிருந்த தூணில் ஒரு கல்வெட்டு. இது கூறும் செய்தி என்ன ?
நடைப்பயணக் களைப்பு, பொறுமையாகக் கல்வெட்டைப் படிக்கும் நிலையில் நான் இல்லை.  "ஆனி, சோலைசாமி" என்ற சொற்களைத் தவிர மற்ற பிற சொற்களை என்னால் வாசிக்க இயலவில்லை. 

எப்போதும் வென்றான், கல்வெட்டு

இந்தக் கல்வெட்டைப் படம் எடுத்து மின்தமிழ்க் குழுவில் பதிவு செய்தேன்.  நண்பர் சுந்தரம் அவர்கள் இந்தக் கல்வெட்டை வாசித்தளித்துள்ளார்.

dorai sundaram <doraisundaram18@gmail.com> to mintamil (22 Apr 2016, 21:43)
கல்வெட்டின் பாடம்:
முதல் வரியும் இரண்டாம் வரியும் சேர்ந்து தமிழ் எண்களில் தரப்பட்ட எண் 1512.  இந்த எண், கல்வெட்டில் அடுத்து வரும் தமிழ் ஆண்டுடன் பொருந்தவில்லை.
       3  யீசுபற வரு
       4   ஆனி மீ 10 தேதி
       5   கானிசா புறத்தி
       6   லிறுக்கு திருவ
       7    டி னாடாற்  மக
       8   ன் ராமசுவாமி னா
       9   டாற்  யெப்போது(ம்)
     10   வென்றான்  சோ
     11   லைசாமி கோ(வி)
     12   லுக்கு து/தூண் ..
செய்தி:  கானிசாபுரத்தைச் சேர்ந்த திருவடி நாடார் என்பவரது மகன் ராமசுவாமி நாடார் என்பவர் சோலைசாமி கோவிலுக்குத் தூண் கொடை அளித்துள்ளார். இடையின ரகரம் வரவேண்டிய
இடங்களில் வல்லின றகரம் வந்துள்ளது. எப்போதும் வென்றான் ஊர்ப்பெயர் “யெப்போதும் வென்றான்”  என அமைந்துள்ளது. பழங்கல்வெட்டுகளில் இவ்வாறு இகரத்துக்கு யிகரம் இட்டு
எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். . ”த்தி” , “க்கு”   ஆகிய எழுத்துகள் ஒரே எழுத்தாகக் கூட்டெழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன.  “போ” , “சோ”  ஆகிய நெடில்கள் குறில்களாக எழுதப்பட்டுள்ளன.
ஈசுவர வருடம் (கல்வெட்டில் யீசுபற)  1817, 1877  ஆகிய வருடங்களில் வருகிறது.
(சுந்தரம்)

dorai sundaram <doraisundaram18@gmail.com> to mintamil (25 Apr 2016, 10:28)
தமிழ் ஆண்டுகளுக்கு வரிசை எண் இல்லைதான். நான் குறிப்பிட்டது, கல்வெட்டுகளில் சாலிவாகன ஆண்டு என்னும் சக ஆண்டு குறிக்கப்பெறும்.  இந்தக்கல்வெட்டில் சக ஆண்டு என்னும் வாசகம் காணப்படாவிடினும்,  கல்வெட்டில் காணப்படும் எண்ணைச் சக ஆண்டாகக் கொண்டால்கூடத் தமிழ் ஆண்டுடன் பொருந்தவில்லை என்பதே என் கருத்து. ஈசுவர ஆண்டை மட்டிலும் கணக்கில் எடுத்துக்கொண்டால், கி.பி. 1817, 1877 ஆகிய இரு ஆண்டுகளைக் கல்வெட்டின் காலமாகக் கொள்ளும் வாய்ப்பு தோன்றுகிறது. அடுத்து வரும் ஈசுவர ஆண்டு 1937-இல் அமைவதால் மிகவும் அண்மைக்காலக் கல்வெட்டாகக் கருதநேரிடும்.
(சுந்தரம்)

நன்றி = மின்தமிழ் https://groups.google.com/forum/#!msg/mintamil/C7jEYJL0uFc/J2ED4G7TBQAJ

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக