05.06.2014
காசி பாதயாத்திரை (11 ஆவது நாள் மாலை)
யாத்திரை -
பயணத் திட்டத்தில் ஒரு சிறு மாற்றம். நாளை 06.06.2014 காலை பொன்னமராவதி வலையபட்டியிலிருந்து புறப்பட்டு கொப்பனாபட்டி, குழிப்பிறை, பனையப்பட்டி வழியாக நற்சாந்துபட்டி சென்று தங்குவது என்பது பழைய பயணத் திட்டம்.
இந்தப் பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாறுதலாக இன்று 05.06.2014 மதிய உணவிற்குப் பின் மாலை 5.00 மணிக்குப் படைப்பு வீட்டிலிருந்து யாத்திரை புறப்பட்டு கொண்ணம்பட்டி சென்று இரவு தங்கியிருந்து, நாளை காலை கொண்ணம்பட்டி யிலிருந்து புறப்பட்டு நற்சாந்துபட்டி செல்லாம் என்றும் குருசாமி அவர்கள் பயணத் திட்டத்தைச் சிறிது மாற்றி அமைத்தார்கள்.
புதிய பயணத்திட்டத்தின்படி, இன்று 05.06.2014 மாலை 5.00 மணிக்கு யாத்திரை தொடங்கியது. வலையபட்டி ஸ்ரீ துர்க்கை படைப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு பொன்னமராவதியைக் கடக்கும் போது நன்கு மழை பெய்யத் துவங்கியது. ஐயா பச்சைக்காவடி அவர்கள் அன்னதான வண்டியை நிறுத்தி அதிலிருந்து குடைகளை எடுத்து யாத்திரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடை வழங்கினார்கள். குடையைப் பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம். மழை பெய்த காரணத்தினால் சாலையில் நடந்தால் நடையன் வழுக்கியது. சாலையை விட்டுக் கீழே இறங்கினால் சேறும் சகதியும் நடையனில் ஒட்டிக் கொண்டு வேட்டி யெல்லாம் சேறு பட்டது.
கொன்னையூர் வந்து சேர்ந்தோம். இங்கே மழை இல்லை.
அருள்மிகு மாரியம்மன் கோயில் வழிபாடு. நல்லதொரு தரிசனம்.
கோயிலில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற் கெல்லாம் மழைமேகம் சூழ்ந்து இருட்டி விட்டது. மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி. பாதை சரியாகத் தெரியவில்லை. இருட்டுவதற்கு முன்னதாகவே சென்று சேர்ந்துவிடுவோம் என்ற கணிப்பில் கையில் டார்ச் லைட்டை யாரும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை.
கொண்ணம்பட்டி அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம். மண்டபத்தில் இருந்த ஒருவர், மண்படத்தைத் திறப்பதற்காகச் சாவி வாங்கி வருவதற்காகச் சென்றுவிட்டார். நாங்கள் யாத்திரிகர் அனைவரும் மண்படம் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.
கனமழை பெய்ய ஆரம்பித்தது. காற்றும் மழையும் மிகவும் அதிகமாக இருந்தன. அனேகமாக அனைத்து யாத்திரிகர்களும் நனைந்து விட்டோம். சுமார் 1மணி நேரத்திற்கும் கூடுதலாக மழை பெய்து ஓய்த பின்னரே, சாவியைக் கொண்டு வந்து மண்டபத்தைத் திறந்தனர். மழைத் தண்ணீர் ஜன்னல் கதவுகளின் வழியாக மண்டபத்தின் உள்ளே வந்து மண்டபம் முழுவதும் தண்ணீராக இருந்தது. மின்சாரமும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமையல் முடிந்து சாப்பாடும் முடிந்தது.
மண்படபத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த தண்ணீரைத் துடைத்து அவரவர்க்கு கிடைத்த இடங்களில் படுத்துத் தூங்கினோம். மின்சாரம் இல்லாமல் இருளாகவும், கனமழை பெய்திருந்ததால் கூதலாகவும் இருந்தது.
https://goo.gl/maps/6i7VNxtmhgwauQAT8
இன்றைய பயணம் சுமார் 7 கி.மீ.
தொடரும் ….. …..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக