05.06.2014 காசி பாதயாத்திரை (11 ஆவது நாள்)
வைகாசி 22 வியாழக் கிழமை.
வலையபட்டியில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை யம்மன் பங்காளிகள் படைப்பு வீட்டில் தங்கியிருந்தோம். நகரத்தார் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர். காலை உணவும், மதிய உணவும் வழங்கிச் சிறப்புச் செய்தனர்.
பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள் - இங்கு அன்னதான வண்டியில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் இறக்கி அவற்றை வகைப்படுத்தி எந்தெந்த உணவுப் பொருள் தேவையாக இருக்கும் என்பதை யெல்லாம் கணக்குப் பார்த்து, வரவிருக்கும் நாட்களில் யாத்திரைக்கு வேண்டிய அனைத்து உணவுப் பொருட்களையும் சேகரித்து அவற்றை அன்னதான வண்டியில் பத்திரமாக அடைந்து வைத்தனர். யாத்திர்கள் பயன்படுத்தும் பொருட்களை அவரவர் பைகளில் வைத்து, அந்தப் பைகளை யெல்லாம் ஒரு மூடையாகக் கட்டி அன்னதான வண்டியில் அடைந்து வைத்தனர். இதனால் நேற்றும் இன்றும் குருசாமி அவர்களுக்கு ஓயாத வேலையாக இருந்தது.
சமையல்காரரால் ஏற்படுத்திய சங்கடம் - சமையல்காரர்கள் மொத்தம் மூன்று பேர். தலைமைச் சமையல்காரர், உதவிச் சமையல்காரர், மற்றும் பாத்திரங்களைக் கழுவ வைக்க என ஒருவர். இதில் தலைமைச் சமையல்காரருக்குச் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்து மருத்துமனையில் சேர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இந்தத் தகவலை அவர் குருசாமியிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். இன்று உதவிச் சமையல்காரர் இதைக் குருசாமியிடம் சொல்லிவிட்டார். இந்த யாத்திரை மிகவும் கடுமையான பயணத்தைக் கொண்டது. வடநாட்டில் போய்க் கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போனால் வைத்தியம் பார்ப்பது சிரமம் என்பதைத் தலைமைச் சமையல்காரருக்குக் குருசாமி எடுத்துச் சொல்லி விளங்க வைத்தார். அவரது மகனுக்குப் போன் செய்து, அவன் வந்ததும் அவனிடமும் விளக்கிச் சொல்லி அவனது தந்தையாரை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு செய்தார். தலைமைச் சமையல்காரர் இதுவரை வேலைபார்த்த நாட்களைக் கணக்குப் பார்த்து அதற்கான சம்பளத்தைக் கொடுத்தார். மேலும் அவர் மூலமாகவே வேறொரு சமையல்காரரை யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். இதிலேயே குருசாமிக்கு நேரமும் காலமும் போனது. (சமையல்காரரைப் படம் எடுக்க வாய்ப்பில்லாமல் போனது)
கடந்த ஆண்டு காசிபாதயாத்திரையின் போது கலந்து கொண்ட அடியார் ஒருவர் வந்திருந்து குருசாமிக்கு சற்று ஒத்தாசையாகச் செயல்பட்டார்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக