திங்கள், 22 ஜூன், 2020

பயண அனுபவம் - இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 28ஆம் நாள் - ஆனி 8 (22.06.2014)

பாதயாத்திரை பயண அனுபவம் - 
காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.  
பாதயாத்திரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்.
எல்லாச் சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கிச் செல்கின்றன("All Roads Lead to Rome") என்பார்கள்.    ஆனால் உண்மையில், இந்தியாவில் வொவ்வொரு சாலையும் அருகில்  உள்ள கோயிலுக்குத்தான் செல்லும்.  இராமேசுவரம் - காசி பாதயாத்திரையின் போது, சில கோயில்களில் தங்கிச் சென்றோம். சாலையோரம் உள்ள பல கோயில்களின் வாயிலில் நின்று வணங்கிச் சென்றோம்.  கோயிலுக்கு உள்ளே சென்று வணங்கினால் காலதாமதம் ஆகிவிடும் என்பதால் வழியில் உள்ள எந்தவொரு கோயிலுக்கு உள்ளேயும் சென்று யாத்திரிகர் வணங்கியது இல்லை.  
இன்று 28ஆம் நாள் - ஆனி 8 (22.06.2014) ஞாயிற்றுக் கிழமை.  காவேரிபட்டிணத்திலிருந்து அதிகாலை பாதயாத்திரை  புறப்பட்டு  6.00 மணி அளவில் அவதானப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயில் வழியாகச் சென்றோம்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இந்தக் கோயிலில் மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றார். குருசாமி அவர்கள் கோயிலுக்கு உள்ளே சென்ற காரணத்தினால் அவருடன் நடந்து வந்த காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும், சரவணன் அவர்களும், அடியேனும் கோயிலுக்குள் சென்றோம்.

அந்த அதிகாலைப் பொழுதிலேயே, அடியார் ஒருவரின் குடும்பத்தினர் கோயிலைக் கழுவிவிட்டுக் கோலம்போட்டுப் பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.   

அருள்மிகு மாரியம்மனுக்குத் தீபம் காட்டும் நேரத்தில் மிகவும் கனகச்சிதமாக குருசாமி பச்சைக்காவடி அவர்கள் சென்று சந்நிதி முன் நின்று தீபம் பார்த்து வணங்கினார்.  நாங்களும் வணங்கிக் கொண்டோம்.  கோயிலைச் சுற்றி வந்தோம். கோயிலை விட்டு வெளியே செல்லும் போது நைவேதியம் செய்த பொங்கலை முதன்முதலாகக் குருசாமி அவர்களுக்கு கொடுத்து, அதன்பின்னர் எங்களுக்கும் கொடுத்து, மற்ற பிறருக்கும் கொடுத்தார்கள்.

இந்தக் கோயிலில் எல்லா நாளும் கூட்டம் அதிகமாக இருக்குமாம்.  அதிலும் குறிப்பாக ஞாயிறு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக இருக்குமாம்.   கோயிலுக்குள் சென்று தீபம்பார்த்துச் சுற்றிவந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வர வேண்டும் என்றால் குறைந்தது பத்துப்பதினைந்து நிமிட நேரம் ஆகிவிடுமாம்.  

ஆனால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கோயிலுக்குள் சென்று சந்நிதி முன் நின்ற அந்த நொடிப் பொழுது நேரத்தில் அபிஷேகம் அலங்காரம் நைவேத்தியம் முடிந்து  தீபம் காட்டியதும், சந்நிதியை வலம் வந்து முடித்துக் கோயிலுக்கு வெளியே செல்ல முயன்ற அந்த நொடிப்பொழுது நேரத்தில் வைவேத்தியப் பொங்கலைக் குருசாமி அவர்களுக்கு முதலாவதாகக் கொடுத்ததும் ஆச்சரியமாக அற்புதமாக இருந்தது.  அபிஷேக அலங்காரத்திற்கு முன்பே கோயிலுக்குள் சென்றிருந்தால்,  சந்நிதியில் திரை போட்டிருப்பார்கள்.  அபிஷேக அலங்காரம் முடிந்து வழிபாடு நடைபெறும் நேரம் வரை, குறைந்தது 15 நிமிட நேரமாவது காத்திருக்கும்படி ஆகியிருக்கும்.  ஆனால் 3 நிமிட நேரத்திலேயே அன்னை மாரியம்மன் எங்களுக்கு அனைத்தையும் அருளிச் செய்தார்.

அருள்மிகு மாரியம்மனின் திருவருள் கிடைத்த இந்த நிகழ்ச்சியினால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பெரிதும் மனம் நெகிழ்ந்து போனார்.  பாதயாத்திரைக்கு அன்னை அருள் புரிந்துள்ளாள் என்று புளகாங்கிதம் அடைந்து போனார்.


கோயிலை விட்டு வெளியே வரும்போது, அடியார் ஒருவர் புதிதாக வாங்கி வந்திருந்த வண்டிக்கு மாலை யணிவித்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்.  இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த அம்மனை வழிபட்ட பின்னரே தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.


அவதானப்பட்டி அருள்மிகு மாரியம்மன் திருவருளும், அருள்மிகு காசி விசுவநாதர் திருவருளும், காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவரும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக