திங்கள், 22 ஜூன், 2020

பயண அனுபவம் - அறுபடைவீடு பாதயாத்திரை, 16ஆம் நாள் - ஆனி 9 (23.06.2017)

பாதயாத்திரை - பயண அனுபவம் - 
அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
3 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 16ஆம் நாள் - ஆனி 9 (23.06.2017) வெள்ளிக் கிழமை.   இன்று திருச்செந்தூரில் வழிபாடு.
திருச்செந்தூர் நகரவிடுதியில் தங்கல், ஓய்வு.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்செந்தூரில் வழிபாடு செய்வித்தார்.  


அருள்மிகு முருகப்பெருமானை வழிபட வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் முதலாவதாக நின்றார்.   அவரை அடுத்து காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் நின்றார்.  அவருக்குப் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன்.  வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.

முருகன் சந்நிதானத்தின் முன்நின்று, அருணகிரிநாதர் திருப்புகழ் பாட வேண்டும் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் விருப்பம் தெரிவித்தார்.
அருணகிரிநாதரின் பாடல்கள் சந்தம் மிகுந்து பொருள் நிறைந்தவை.  இப்பாடல்களை சந்தம் மாறாமல் பொருளறிந்து பிழையில்லாமல் பாட வேண்டும்.  சந்நிதி முன்நின்று பிழைபடப் பாடிவிடக்கூடாது என்று குருசாமி அவர்கள் கூறிவிட்டார். வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இவ்வாறு சொன்னதும், அங்கமுத்து அவர்கள் மிகவும் வருந்தினார்.  அறுபடைவீட்டிற்குப் பாதயாத்திரையாக வந்தும் ஆண்டவன் சந்நிதி முன் நின்று அருணகிரிநாதர் பாடலைப் பாடிடும் பாக்கியம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று மிகவும் வருந்தி மனம் வாடிப் போனார்.  அருணகிரிநாதர் பாடல்களைப் பிழையின்றித் தன்னால் பாடமுடியும் என்றும்,  ஆனால் குருசாமி அவர்களது வார்த்தையை மீறமுடியவில்லையே என்றும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் என்பக்கம் திரும்பிப் புலம்பினார்.  

அப்படியே சந்நிதியைப் பார்த்துச் சொல்லுங்கள், நீங்கள் சொல்ல வேண்டிய இடம் அதுதான் என்று கூறினேன்.  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் சந்நிதியைப் பார்த்துப், பாடல்களைப் பிழையின்றிப் பாடுவேன், சந்நிதி முன் நின்று பாடிட அருள வேண்டும் என வேண்டினார்.  அவரது முகம் மிகவும் வாட்டமாக இருந்தது.  இவரது “மனக்கவலை மாற்றல் அரிது” என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.

குருசாமி அவர்கள் சந்நிதி முன் நின்று அருள்மிகு சுப்பிரமணியசுவாமியை வணங்கிவிட்டு நகர்ந்து விட்டார்.  இப்போது காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் சந்நிதி முன் நின்று கும்பிட்டுவிட்டு நகர முயன்றார்.  அப்போது வரிசையைச் சீர் செய்யும் பணியில் உள்ளவர் அவரது கையைப் பாதையின் குறுக்கே நீட்டி, சந்நிதி முன் நிற்கும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் நகர்ந்து விடாதபடித் தடுத்து நிறுத்தினார்.

திரைபோட்டுவிட்டார்கள். அபிஷேகம் நடைபெறப் போகிறது. அபிஷேகம் முடிந்தவுடன் தீபம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்று வரிசையில் நிற்பவர்கள் நகர்ந்து சென்று விடாமல் வரிசையை நிறுத்தி விட்டார். 

ஒரு நொடி நேரம் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பிந்தியிருந்தால், அபிஷேகம் முடியும் நேரம்வரை அவரும் சந்நிதிமுன் நின்றிருப்பார்.
ஒரு நொடி நேரம் முந்தியிருந்தால் முருகப்பெருமானைக் கும்பிட்டுவிட்டுக் காசிஸ்ரீ அங்கமுத்துசாமிகளும் குருசாமி அவர்களுக்குப் பின்னாலேயே சென்றிருப்பார்.  ஆனால் மிகவும் சரியாகக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கும்பிட்டுவிட்டுச் சென்ற அந்த நொடிப் பொழுதில் கோயில் சிப்பந்தி அவரது கையை நீட்டி, அங்கமுத்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

இப்போது வரிசையில் முதல் ஆளாகச் சந்நிதிக்கு நேர் எதிரே காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் நின்று கொண்டிருந்தார்.  அவ்வளவுதான்,  அருணகிரிநாதரின் பாடல்களை அங்கமுத்து அவர்கள் அகம்மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து பாடினார்.  பாடலும் முடிந்தது, அபிஷேகம் முடிந்து திரையும் விலகியது.  தீபம் காட்டினார்கள்.

அருள்மிகு முருகப்பெருமானை வணங்கிக் கொண்டு குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தேடிக்கண்டறிந்து அவருடன் சேர்ந்து கொண்டோம்.

காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் வேண்டியது வேண்டியபடி வேண்டியவுடனேயே நடந்தது. 
குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு காட்சியளித்து, அவரை அனுப்பி வைத்துவிட்டு, அவருடன் வந்த தன்னை வரிசையில் நிற்கவைத்துச், சந்நிதி முன் அருணகிரிநாதரின் பாடலைப் பாடிடும் பாக்கியம் அளித்த அந்த பரமகருணையைச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தார் அங்கமுத்து அவர்கள்.  தனது வேண்டுதலுக்குச் செவிமடுத்த முருகப்பெருமானின் கருணையை நினைந்து நினைந்து உள்ளம் உருகிப் போனார்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக