காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று சுக்கிரி என்ற ஊர் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 93ஆம் நாள் - ஆவணி 10 (26.08.2014) செவ்வாய்க் கிழமை.
தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.15 க்கு சுக்ரி என்ற ஊரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம். மோஹை என்ற ஊர் வழியாக நர்மதா நதிக்கரையில் உள்ள நர்மதா தில்வாராகாட் என்ற ஊருக்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
வழி நெடுகிலும் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மலைத்தொடர்களின் வழியாக சாலை சென்றது. "ல" வடிவ வளைவுகளில் சாலை இறங்கியது. செங் குரங்குகள் நிறைந்து காணப்பட்டன.
விடியும்போது ஒருவர் மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டு வந்தார். பார்ப்பதற்குத் தமிழர் போன்று தோற்றம். அவருடன் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
காலை மணி 6.10க்குச் சாலையோரம் சிறிது நேரம் ஓய்வு.
காலை 7.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
வழியில் உள்ள சிவன் கோயிலில் காலை உணவு. மிகவும் பழைமையான சிவலாயம். அர்ச்சகர் இங்கிருந்த குரங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கடுமையான வெயில்.
அனைவரும் குடை பிடித்துக் கொண்டோம்.
9.04 am
மலை இறக்கத்தின் முடிவில் நர்மதா ஆற்றங்கரையை வந்து அடைந்தோம்.
நர்மதை ஆற்றைத் தடுத்து அணைகட்டி, தண்ணீரைச் சிமிண்ட் கால்வாய்கள் வழியாகக் கொண்டு சென்று பாசணம் செய்கின்றனர். நர்மதை ஆற்றின் தெற்கே உள்ள சிமிண்ட் கால்வாய் இந்த இடத்தில் ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தூம்பு வடிவக் கால்வாய் வழியாக ஆற்றைக் குறுக்காகக் கடந்து சென்று ஆற்றின் வடகரையில் உள்ள நிலங்களுக்குச் செல்கிறது. ஆற்றுநீர் ஆற்றின் குறுக்கே பாய்ந்தோடும் தூம்பின் மேலே சாலை அமைத்துள்ளனர். ஒரே பாலத்தைத் தண்ணீர்ப் பாசனத்திற்கும், சாலைப் போக்குவரத்திற்கும் பயன்படும் வகையில் வடிவமைத்துக் கட்டியுள்ளனர்.
காசிஸ்ரீ சரவணன் அவர்கள் தண்ணீர் பாய்ந்து வந்த கால்வாயைக் காணோம்? என்று பாலத்தின் மேல் நின்று தேடினார். அந்தக் கால்வாய் அந்தச் சாலையின் கீழே அமைந்துள்ளது என்பதை அறிந்து வியந்து பார்த்தார்.
காஞ்சி மகாப் பெரியவர் சீயோனி, மண்டோல், சப்ரா, லக்னோடூம், துமா, சுக்ரீ, பர்க்கீ, இவ்வூர்களின் மார்க்கமாக 1934-ஆவது வருடம் ஜுலை மாதம் 3-ந் தேதி ஜபல்பூரை அடைந்துள்ளார்கள். ஜுலை 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையில் ஸ்வாமிகள் நான்கு நாட்கள் ரயில்வே காலனியில் தங்கியிருந்துள்ளார். ஸ்வாமிகள் நர்மதை நதி கௌரி கட்டத்தில் விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு நீராடியுள்ளார். (ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் ....... பக்கம் 230 )
“புனிதமான கங்கை நதி கிழக்கு நோக்கி ஓடுகிறது. நர்மதை மேற்கே செல்லுகிறது. மகாநதி தெற்கிலிருந்து வடக்கே செல்கிறது. பல நதிகள் பல திசைகளில் ஓடுகின்றன. எல்லாம் முடிவில் கடலில் கலக்கின்றன. சேரும் இடம் ஒன்றே என்ற எண்ணம் நதிகளுக்கு இல்லை. அவை எங்குப் போனாலும் கடலும் அவைகளைச் சூழ்கிறது. அதைப்போல் நாம் பலவழிகளில் இறைவனை வழிபடுகிறோம். பாதைகளில் வேற்றுமை உள. ஆட்கொள்ளும் வஸ்து ஒன்றே. பல வழிகளில் இறைவனை அடைய நாம் முயற்சிக்கலாம். ஆனால் வேற்று வழிகளில் செல்கையில் ஒற்றுமையை மறந்து கடவுளின் ஏகத்வத்தைக் கைவிடக்கூடாது. வேற்றுமையை நினைத்தால் ஆனந்தம் இல்லை.” என்று காஞ்சி மகாப் பெரியவர் கூறியருளியுள்ளார்.
(ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் ....... பக்கம் 390 )
மேற்கு நோக்கிப் பாய்ந்து செல்லும் நர்மதையையும் காஞ்சி மகாப்பெரியவரையும் நினைந்து வணங்கிக் கொண்டேன்.
ஆற்றைக் கடந்து அங்குள்ள விருந்தினர் இல்லத்திற்குச் சென்று சேர்ந்து தங்கினோம்.
காலிஃபிளவர் சூப் வழங்கப்பட்டது.
10.37 am
குருஜியின் அடியார்கள் அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாக செய்திருந்தனர்.
ஓய்வு.
3.32 pm
மாலை நேரத்தில் நர்மதை ஆற்றங்கரையில் குருசாமி பச்சைக்காவடி அவர்களும் மற்றும் சில யாத்திரிகர்களும் முடியிறக்கிக் கொண்டனர். அனைவரும் நர்மதையில் தீர்த்தம் ஆடிக் கரையில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து கொண்டோம்.
நர்மதை ஆற்றில் யாரும் சோப்புப் போட்டுக் குளிக்கவோ துணி துவைக்கவோ அனுமதி யில்லை. ஆற்றங்கரை மிகவும் சுத்தமாக இருந்தது. ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணம் செய்வோர், அவர்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, நர்மதை ஆற்றில் மலர்களைத் தூவி வழிபாடு செய்வதைக் காண முடிந்தது.
நாங்கள் தீர்த்தமாடிய இடத்திற்குக் கிழக்கே பழைய பாலம் ஒன்று அப்படியே இருந்தது. அதில் பலரும் நடைப்பயிற்சி மேற் கொண்டிருப் பதைக் காண முடிந்தது.
7.10 pm
விருந்தினர் மாளிகையில் தங்கினோம்.
இங்கிருந்து காசி 473 கி.மீ.
https://goo.gl/maps/fLGMcZuvRzztVZPb8
இன்றைய பயண தூரம் 29 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக