காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பாட்டன்பூரி என்ற ஊரில் உள்ள ராமர்கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம். நேற்று முழுவதும் நல்ல வெயில், மழை இல்லை.
இன்று 75ஆம் நாள் - ஆடி 23 (08.08.2014) வெள்ளிக் கிழமை.
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.30 க்கு பாட்டன்பூரி என்ற ஊரிலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
சாலையோரம் இருந்த சிறியதொரு கோயிலில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். இந்தக் கோயில் மிகவும் பழமையான கோயில் போன்று தோன்றியது. இராமாயணக் கதைநிகழ்ச்சிகளைச் சிற்பமாக ஒரு தூணில் செதுக்கி யிருந்தனர். இராமாயணக் கதை முழுவதும் விளங்குமாறு நான்கு பக்கமும் நான்கு சிற்பங்கள் என 16 சிற்பங்களில் இராமாயணக் கதை சொல்லப்பட்டிருந்தது.
தேநீர் சாப்பிட்டு முடித்தவுடன் யாத்திரையைத் தொடர்ந்தோம்.
வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது. சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்தது.
பிம்பல்குடி, சோனா என்ற ஊர்கள்வழியாக 8.00 மணிக்கு கீளாப்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
செகதாம்பாள் கோயில் உயரமான கருவறை விமானம்.
செகதாம்பாள் கோயிலில் தங்கல்.
8.30 க்கு காலை உணவு.
பெரிய மண்டபம்.
ஓய்வு.
திருவிழாக் காலங்களில் அடியார்கள் வந்து தங்கி வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
30 நிமிடத்தில் 100 சப்பாத்தி
மாலைநேரத்தில் ஒரு சமையல்காரரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமையல் காரர் மூன்று பாத்திரங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். அடுப்பில் குருமாவுக்கான பாத்திரைத்தை வைத்து அதில் காய்கறிகளை எடுத்துப் போட்டார். அது வெந்து கொண்டிருக்கும் போதே, 25 பேருக்கு எவ்வளவு கோதுமை மாவு தேவைப்படுமோ அவ்வளவு எடுத்துப் பிசைந்து தயாராக வைத்துக் கொண்டார். மாவைத் தட்டித் தட்டி அடுப்பில் காட்டிச் சுட்டு எடுத்தார். அவை அடுப்பில் இருக்கும்போதே, மாவை உருட்டி அதை வீசியெடுத்து அடுப்பில் சுடுவதற்குத் தயாராக வைத்துக் கொண்டார். இவ்வாறாக அரைமணி நேரத்தில் சுமார் 100 சப்பாத்தி தயாராகி விட்டது. அதிகமான பாத்திரங்களைப் பயன்படுத்தாமல், குறைவான நேரத்தில் ஒரேயொரு ஆள் 120 சப்பாத்திகள் செய்து சுவையான குருமாவும் தயார் செய்து யாத்திரிகர்களுக்கு வழங்கியது பற்றிய அனைவரும் வியந்து புகழ்ந்தனர். குருசாமி அவர்கள் அவரை ஆசிர்வதித்தார்.
https://goo.gl/maps/9towrPxRZdKGxAfW6
இன்றைய பயண தூரம் சுமார் 19 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக