திங்கள், 17 ஆகஸ்ட், 2020

18.08.2014 காசி பாதயாத்திரை 85ஆம் நாள் - ஆவணி 2

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று  பயோனி என்ற ஊர் வந்து சேர்ந்து இருந்தோம்.  

இன்று 85ஆம் நாள் - ஆவணி 2 (18.08.2014) திங்கள் கிழமை.

இன்று தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.20 க்கு பயோனி ஊரின் புறத்தே இருந்த கூட்டுறவு சங்கத்திலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.  அடர்ந்த காட்டுக்குள் பயணிக்கும் போது விடிந்து விட்டது.

6.05 am
சந்தனமரத்தை வணங்கிய சிவப்பா -
அடர்ந்த காட்டின் நடுவே சாலையோரம் ஒரு சந்தனமரம் இருப்பதைக் கண்டோம்.  யாத்திரிகர்  பலரும் விரும்பிச் சந்தனமரத்திற்கு அருகில் நின்று படம் எடுத்துக் கொண்டோம்.  

6.15 am

வழியில் காலை 6.15 மணிக்கு, டீலோபார் (Deolapar, Maharashtra 441401) என்ற ஊரின் அருகே நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு  பிரிவுச் சாலையில் அமர்ந்து காலை தேநீர்.

மூத்த யாத்திரிகர் காசிஸ்ரீ கந்தசாமி (72) அவர்கள் கால்களில் மருந்து தடவிக் கொண்டார்.  வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டார்.

6.47 am

7.40 am

தமிழ்ப் பெண் கட்டிய தர்கா -
மோர்பட்டா என்ற ஊரில் முகமதியர் தர்கா ஒன்று உள்ளது.   அவுலியா சகிபீர் பாபா அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்க்கைத் துணையாவும் வாழ்ந்த 
இசுலாமியராக மாறிய தமிழ்ப்பெண் ஒருவரால் இந்த தர்கா கட்டப்பெற்று நிருவாகம் செய்யப்பெற்றது என்று சொன்னார்கள்.  (Sakhi Peer Baba Dargah, AH43, Maharashtra 441401)  அவர்களுடைய புகைப்படங்கள் எல்லாம் தர்காவில் இருந்தன.

(https://goo.gl/maps/9gcMqXeWfutoFLqaA)  

தர்காவில் ஒரு பச்சைக்கிளி வளர்த்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தக் கிளிக்கு வாழைப்பழம் வழங்கினார்.

8.14 am

தர்கா அருகில் உள்ள கட்டிடத்தில் காலை உணவு.  தர்கா நிர்வாகிகள் யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று தேநீர் வழங்கினார்கள்.   இங்கு தேநீர் தயாரிக்கும் அடுப்பு வினோதமாக இருந்தது.  இரும்புக் கூடாரம் போன்று அமைத்து, அதற்குச் சிறு கதவு ஒன்றும் அமைத்து, அதனுள் தேநீரைச் சூடாக வைத்து இருந்தனர்.

காலைநேரத்தில் யாத்திரிகர்கள் சாப்பிடும் போது, குருசாமி பச்சைக்காவடி அவர்கள் தர்கா நிர்வாகி களையும் சாப்பிட வருமாறு அழைத்தார்.   அந்த அழைப்பை ஏற்றுத் தர்கா நிர்வாகிகளும் யாத்திகர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து யாத்திரிகளுக்கான காலை உணவைச் சாப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

8.37 am
இந்தியில் என்ன எழுதியுள்ளது?

8.37 am
மோர்பட்டா வுடன் மகாராட்டிரம் எல்லை முடிகிறது.

9.14 am

பயோனி என்ற ஊரில் இருந்து காவாசா வரை அடர்த்தியான காடு.  புலிகள் சரணாலயம் உள்ளது.


பயணத் திட்டத்தில் சிறு மாற்றமாக மோர்பட்டா வில் தங்காமல் அங்கிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ள கவாசா என்ற ஊருக்குச் சென்றோம்.

பாதயாத்திரையில் கூட வந்த வந்த பைரவர் -
பாதயாத்திரையில் 10 கி.மீ. தூரத்திற்கும் மேலாக, ஒரு யாத்திரிகரைப் பின்தொடர்ந்து ஒரு நாயும் கூடவே நடந்து வந்தது.  எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் போகவில்லை. 
20 யாத்திரிகர்களில் வேறுயாருடனும் சேர்ந்து நடக்காமல், இந்த யாத்திகருடன்  மட்டுமே சேர்ந்து நடந்து வந்தது.  “காசிக்குப் போறேன், நானும் வாரேன்” என்று சிறுவர்களாக இருக்கும் போது விளையாடும் விளையாட்டு நினைவிற்கு வந்தது.  கவாசா ஊரின் எல்லையில் மற்றபிற நாய்கள் வந்து சண்டை போட்டன.  அதன்பின்னர் இந்த நாயைக் காணவில்லை.  

9.19 am
நடந்து வந்த பாதைக்கு நன்றி -  கவாசா விலிருந்து மத்தியப்பிரதேசம் எல்லை ஆரம்பமானது.  பவந்ததி ஆற்றின் (Bawanthadi River) உபநதியாகச் சுமார் 30 அடி அகலத்தில் ஒரு சிறு காட்டாறு ஓடுகிறது.  அந்த ஆற்றிற்கு ஒருபுறம் மகாராஷ்டிர மாநிலமும், மறுபுறம் மத்தியப்பிரதேச மாநிலமும் உள்ளன. 
9.30 am
யாத்திரிகர் சிலர் நடந்துவந்த பாதைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலை எல்லையில் விழுந்து வணங்கினர்.  அதன் பின்னர் நதியை வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர்.

9.37 am
9.52 am
பயணத் திட்டத்தில் சிறு மாற்றமாக மோர்பட்டா வில் தங்காமல் அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள காசா என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
9.54 am
சண்டை போட்ட சமையல்காரர் -  கவாசா ஊரில் வனத்துறையினரின் சோதனைச்சாவடி உள்ளது.  அதனருகே வண்டியை நிறுத்துமாறு யாத்திரிகளில் ஒருவர் அன்னதான வண்டியை நிறுத்தினார்.  குருசாமி சொல்லிய  இடத்தில்தான் நாங்கள் வண்டியை நிறுத்துவோம்,  ஆளாளுக்கு வண்டியை எப்படி நிறுத்தலாம்? என்று சமையல்காரர் மிகவும் கோபம் கொண்டு அந்த யாத்திரிகருடன் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் அந்த இளைய சமையல்காரரைச் சமாதானப் படுத்தினார்கள்.
9.57 am
10.12 am
கவாசா தமிழர் -  கவாசாவில் ஈரோடு அன்பர் ஒருவர் டீ கடை வைத்துள்ளார்.  அவர் யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்றார்.  அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்குவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தார்.  பள்ளிக்கூடம் அருகில் இருந்தது.
10.15 am

பகல் 12.00 மணிக்கு வெண்டைக் காய் சூப் வழங்கப்பட்டது.   

குருவடியைத் தேடிய அடியார் -  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரையாக வந்து இன்றைய நாளில் மோர்பட்டாவில் தங்கியிருப்பார்கள் என்ற செய்தி அறிந்துள்ளார் குருசாமியின் அன்பர் ஒருவர்.  குருசாமி அவர்களைக் பார்த்து ஆசிபெற வேண்டுமென மோட்டார்பைக்கில்  தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு கவாசா வழியாக மோர்பட்டா சென்றுள்ளார்.  யாத்திரிகர்கள் மோர்பாட்டாவில் தங்காமல் கவாசா சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளனர்.   எனவே அங்கிருந்து கவாசா திரும்பி வந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றார்.  யாத்திரையின் போது அவரது வீட்டிற்கு வந்து தங்கிச் செல்லவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

பகல் 1.30 மணிக்கு மதிய உணவு.  ஓய்வு.

https://goo.gl/maps/DgWX72N7kAVVCBBn7

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக