சனி, 29 ஆகஸ்ட், 2020

30.08.2014 காசி பாதயாத்திரை - 97 ஆம் நாள், ஆவணி 14

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று முன்தினம் 28.08.2014  குனேறு கிராமத்திற்கு வந்து சேர்ந்து, நேற்றும் இங்கே தங்கியிருந்தோம்.



இன்று 97 ஆம் நாள் - 30.08.2014 ஆவணி 14 சனிக்கிழமை.

தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 2.15 க்கு குனேறுவில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.  வறட்சியான வானிலை. அதிகாலையில் இருந்தே கடுமையான வெயில்.

6.13 am

6.23 am

6.40 am

வழியில் ஸ்லீம்னாபேடு (Sleemanabad)  என்ற ஊரில் தேநீர். இங்கு புகழ்பெற்ற ஜெனகோயில் உள்ளது.  வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.  https://goo.gl/maps/bFieDJFq4bVgiRWV8

7.05 am

7.10 am

7.10 am

7.50 am

7.54 am

வழிநெடுக உள்ள ஊர்களில் பிள்ளையார் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதைக் காண முடிந்தது.

7.55 am

காலை 8.00 மணிக்கு டியோரி (Teori) என்று ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  


8.05am

8.06 am

8.18 am

தங்குவதற்கு இடமின்றித் தவித்தோம் - கடந்தவருடம் இங்கு தங்குதற்காகக் வசதி செய்து கொடுத்த அடியாரைத் தேடி அலைந்தோம்.    சுமார் 20 நிமிடத் தேடலுக்குப் பின்னர் அவரது வீட்டைக் கண்டுபிடித்து அங்கே சென்றால் அவர் இல்லை.   வீட்டில் இருந்தவர்களிடம் அவரது தொலைபேசி எண்ணைப் பெற்று, அவருடன் தொடர்பு கொண்ட போது, அவர் வெறொரு ஊரில் இருப்பதாகவும், மதியம் வந்துவிடுவதாகவும்,  ஊரில் உள்ள பழைய ஊராட்சிமன்றக் கட்டிடத்தில் தங்குமாறும் கூறினார்.   எனவே அங்கு சென்றோம்.

8.39 am
செல்லும் வழியில் ஜெயின் கோயில் இருந்தது.  வணங்கிக் கொண்டு நடந்து சென்றோம்.  https://goo.gl/maps/LGdXx3nasGWvTfDs6

8.41 am

ஒரு கடையில் ஒருவர் சீவல்பாக்கு தயாரித்துக் கொண்டு இருந்தார்.  யாத்திரிகர்களில் காசிஸ்ரீ மதுரை கந்தசாமி அவர்கள் எப்போதும் சீவல் பாக்கு போடுபவர்.  யாத்திரையின் போது போடுவதற்கு என்றே மதுரையிலிருந்து நிறைய பாக்குப் பொட்டலங்களைக் கொண்டு வந்திருந்தார். 

அருகில் ஒரு சிறிய டீக்கடை இருந்தது.  தமிழ்நாட்டில் டீக்கடையில் வடையும் விற்கின்றனர்.  இந்த ஊரில் டீக்கடையில் வடைக்குப் பதிலாகச்  ஜிலேபி விற்கின்றனர்.  வடையைக் காணோம்.  எல்லோரும் சர்வசாதாரணமாகச் ஜிலேபி எடுத்துச் சாப்பிடுகின்றனர்.  அருகில் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது.  குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

8.54 am

காலை 8.50 மணிக்கு டியோரி ஊர் பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்படாமல் மூடி வைக்கப்பெற்று சில வருடங்கள் ஆகியிருந்தது.   ஓரே தூசியும் குப்பையுமாக இருந்தது.  ஒட்டடை அடித்துக் கூட்டிப் பெருக்கிக் கழுவி விட்டால் மட்டுமே அங்கு தங்கமுடியும். யாத்திரிகர் அனைவருக்கும் மிகவும் பசியோடு இருத்தனர்.  எனவே இந்தக் கட்டடித்தின் முன் உள்ள இடத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.

இன்று ஒருநாள் பொழுது இந்த ஊரில் தங்க வேண்டும்.  எங்கே  தங்குவது?  யாரிடம் சென்று கேட்பது? என்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார்.  ஆனால் உருப்படியான வழிகாட்டுதல்  ஏதும் கிடைக்கவில்லை.  யாத்திரிகர் அனைவரும் மிகவும் களைப்பாகவும் சோர்வாகவும் அமர்ந்து இருந்தனர்.  சிறிது நேரம் சென்றால் உட்கார்ந்து இருக்கும் இந்த இடத்திற்கும் வெயில் வந்து விடும்.   என்ன செய்வதென்று தெரியாத நிலை.

9.38 am
சாலையின் மறுபுறத்தில் இருந்த மிகவும் பழமையான மரத்தில் உள்ள பட்டுப்போன கிளையில் இரண்டு அண்டிரில் பறவைகள் அமர்ந்து இருந்தன.  மற்றபிற பறவைகள் எல்லாம் இரை தேடிச் சென்றிருக்க, இந்தக் கடுமையான வெயிலில் இந்த இரண்டு பறவைகள் மட்டும் தனித்து இருந்தன.   

அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் அருகில் இருந்த டீக்கடையில் விசாரித்தார்.   சிறிது தூரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது,  அதனருகில் தாபா இருந்த கட்டிடம் ஒன்றும் உள்ளது.  சென்று கேட்டுப்பாருங்கள் என்று அந்த டீக்கடைக்காரர் சொன்னார். அதைக் கேட்ட காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள், காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களுடன் அந்தப் பெட்ரோல் பங்கிற்குச் சென்று, அந்தத் தாபா கட்டிடத்தில் தங்குவதற்கு அனுமதி பெற்று வந்தனர்.

10.27 am

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, அந்தப் பாரத் பெட்ரோல் பங்க்  அருகே உள்ள தாபா கட்டிடடத்திற்கு சென்று தங்கினோம்.  மிகவும் வசதியாக இருந்தது.   பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் வந்து மின்விசிறி மின்விளக்கு இவற்றைச் சீர் செய்து கொடுத்தார்.

ஓய்வு.

புழுங்கலரி பச்சரிசியாக மாறிய கதை -   யாத்திரிகர் அனைவரும் பயணக் களைப்பினால் படுத்துத் தூங்கி விட்டனர்.  மதிய சாப்பாடு செய்து கொண்டிருந்த சமையல்காரர்   வேகவேகமாக வந்து குருசாமியிடம் புழுங்கலரிசி இன்றோடு தீர்ந்துவிட்டது.  நாளைக்கு அரிசி வேண்டும் எனச் சொல்லிவிட்டு வேகவேகமாச் சென்று விட்டார்.  அருகில் இருந்த என்னைக் குருசாமி அவர்கள் அழைத்து, நாம்தான் யாத்திரைக்குத் தேவையான புழுங்கலரியைக் கணக்குப் பார்த்து நாக்பூரில் வண்டியில் ஏற்றி வைத்தோமே, அது எப்படி இல்லாமல் போகும்?  நீ சென்று பார்த்து வா, என்றார்.

வண்டி முழுதும் தேடிப்பார்த்தால்,  பச்சரிசி மூடைகள் இருந்தன,  ஆனால் புழுங்கலரிசி இல்லை.  குருசாமி அவர்கள் காசிஸ்ரீ அங்கமுத்து மற்றம் காசிஸ்ரீ சரவணன் இருவரையும் அழைத்து வந்து வண்டியில் ஏறித் தேடிப்பார்க்கச் சொன்னார்.  வண்டியில் பச்சரிசி இரண்டு மூடைக்குப் பதிலாக நான்கு மூடைகள் இருந்தன.  ஆனால் புழுங்கலரிசி மூடை இல்லை.  “ப அரிசி” என்று எழுதியது, சிறிது கோடு நீண்டு “பு அரிசி” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனால் இரண்டுமூடை புழுங்கல் அரிசிக்குப் பதிலாக, இரண்டுமூடை பச்சரிசி கூடுதலாக இருந்தது.  

புழுங்கலரிசி கொடுத்த பிள்ளையார் - 
இந்த யாத்திரையின் போது எப்போதும் குருசாமி அவருக்கு அருகே ஒரு பிள்ளையார் படத்தையும் உப்பிலியப்பன் பெருமாள் படத்தையும் வைத்துக் கொள்வார். விநாயகர் அகவலும், பெருமாள் போற்றியும் தினவழிபாட்டில் பாடப்பெறும்.  படுத்துத் தூங்கும்போதும் இந்தத் தெய்வங்களின் படத்திற்கு அருகேதான் படுத்துத் தூங்குவார்.  எழுந்தவுடன் பிள்ளையாரை வணங்கிக் கொண்டுதான் கண் விழித்துப் பார்ப்பார்.

இன்றும் குருசாமி அவர்கள் படுத்திருந்த இடத்திற்கு அருகே பிள்ளையார்படமும் பெருமாள் படமும் இருந்தன.  புழுங்கலரிசிக்குப் பதிலாகப் பச்சரிசி மூடையை ஏற்றி வைத்துவிட்டனர் என்ற தகவல் அறிந்து குருசாமி அவர்கள் பெரிதும் மனம் வருந்தினார்.  96 நாட்கள் நல்லமுறையில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் யாத்திரை நடைபெற்று வந்தது.  ஆனால் இன்று புழுங்கல் அரிசி இல்லாமல் பச்சரிசிச் சோறு போட முடியுமா?  யாத்திரிகர்களுக்குப் பச்சரிசிச் சோறு ஒத்துக் கொள்ளுமா?  இந்தப் பகுதியில் புழுங்கல் அரிசியும் கிடைக்காதே என்று வருந்தினார்.

“பிள்ளையாரைக் கும்பிட்டே இந்த யாத்திரையை நடத்துகிறேன். இது பிள்ளையாரால் நடத்தப்படும் யாத்திரை” என்று சொல்லிப் பிள்ளையார் அருகில் உள்ள விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டார்.  அந்த நொடிப் பொழுதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வேகவேகமாக ஓடிவந்து குருசாமியின் கால்களில் விழுந்து வணங்கினர்.    குருசாமி அவர்களுக்கும் விபூதி பிரசாதம் கொடுத்தார்.  குருசாமி வந்தவரை அடையாளம் கண்டு கொண்டு, “நீங்கள்தானே இந்த ஊரின் கிராமத் தலைவர்” என்று கேட்டார்.  “ஆமாம் ஆமாம்” என்று சொன்னபடி, வந்த இருவரில் ஒருவர் மட்டும் குருசாமி அவர்களிடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க,  மற்றொருவர் சென்று அவரது வண்டியில் கட்டப்பெற்றிருந்த இரண்டு அரிசி மூடைகளை அலேக்காகத் தூக்கி வந்து பிள்ளையார்படத்திற்கு முன் வைத்தார்.  

இதைக் கண்ட குருசாமி அவர்கள், இது என்ன? என்று கேட்டார்.  அவர்கள் இது “பாயில்டு ரைஸ்” என்றனர்.   இரண்டு புழுங்கலரிசி மூடைகளைக் கண்ட குருசாமி அவர்கள் பெரிதும் வியந்து போனார்.  இங்கே புழுங்கலரிசி கிடைக்காதே,  நீங்கள் இதை எங்கே வாங்கினீர்கள்? என்று கேட்டார்.   கடந்த வருடம் நீங்கள் யாத்திரை வரும் போது, புழுங்கலரிசிதான் சாப்பிடுவோம் என்று சொன்னீர்கள்,  அதனால் இந்த வருடம் நாக்பூர் சென்று அங்கு தமிழர்கள் அரிசி வாங்கும் கடைக்குச் சென்று வாங்கி வந்தேன் என்றார் அந்த கிராமத் தலைவர்.

குருசாமி அவர்களுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.   எது எப்படியோ,  “பிள்ளையாரிடம் கேட்டது கேட்டபடி நொடிப்பொழுதில் கொடுத்து விட்டார்” என்று மனம் நெகிழ்ந்து போனார்.    மீண்டும் மீண்டும் பிள்ளையாரைப் பார்த்துக் குருசாமி அவர்கள் கும்பிட்டுக் கொண்டே இருந்தார்.   “..... அற்புதம் நிறைந்த கற்பக் களிரே.....” என்று தினமும் பாடி வணங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடல்வரி நினைவிற்கு வந்தது.    விநாயகர் அகவல் பாடிலின் ஒவ்வொரு வரியும் வாழ்ந்து உணர்ந்து பாடப்பட்டுள்ளன என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.

கிராமத் தலைவரைக் குழப்பிய பயணத் திட்டம் -   குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அனுப்பிய கடிதங்கள் எல்லாமும் கிடைக்கப் பெற்றன என்றும், ஆனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் நாளைக்குத்தானே இங்கு வருவதாக உள்ளது?  நீங்கள் ஒருநாள் முன்கூட்டியே வருவது எனக்குத் தெரியாது. நீங்கள் அனுப்பி வைத்த பயணத்திட்டப்படி நீங்கள் அனைவரும் நாளைக்குத்தான் வருவீர்கள் என்று இருந்தேன் என்றார்.  பாதயாத்திரைப் பயணத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேதியை அடுத்துப் புறப்படும் ஊரின் பெயரும், அதையடுத்துத் தங்கும் ஊரின் பெயரும் போடப்பட்டுள்ளது.   இன்று குனேறுவில் இருந்து புறப்படுவதால், 30.08.2014 என்ற தேதிக்கு அருக்கில் குனேறு ஊரின் பெயரும்,  அதையடுத்துத் தங்கும் இடத்தில் டியோரி ஊரின் பெயரும் இடம் பெற்றுள்ளன.  நாளை 31.08.2014 அன்று டியோரியில் இருந்து புறப்படுகின்ற காரணத்தினால், 31.08.2014 அருகில் டியோரி என்ற பெயரும், அதை யடுத்து நாளை தங்கவுள்ள கட்னி என்ற ஊரும் இடம் பெற்றுள்ளன.   பயணத்திட்டத்தில் 31.08.2014 அருகில் டியோரி என்று எழுதப்பட்டிருந்த காரணத்தினால் நாளைதான் இங்கு வருவீர்கள் என்று கருதி, இன்று வெளியூர் சென்றிருந்தேன் என்று சொன்னார் அந்தக் கிராமத் தலைவர்.   எது எப்படியோ?  தங்குதவற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது.  நீங்களும் புழுங்கல் அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டீர்கள்.  எல்லாம் பிள்ளையாரின் செயல் என்று கூறி, குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கிராமத் தலைவருக்கும் அவருடன் வந்தவருக்கும் விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெட்ரோல் பங்கில் உள்ள மின்மோட்டாரில் யாத்திரிகர் அனைவரும் களைப்புத் தீரக் குளித்தோம். அருகில் இருந்த ரோஜாச் செடி அருகே அமர்ந்து அனைவரும் படம் எடுத்துக் கொண்டோம்.


01.04 pm



























தலைமைச் சமையல்காரரும் படம் எடுத்துக் கொண்டார்.

   
 
7.03 pm
மாலை நேரத்தில் பெட்ரோல் பங்கின் ஊழியர் இருவர் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.


https://goo.gl/maps/g6tzctiaQGdYvU2W6

இன்றைய பயண தூரம் 27 கி.மீ.

இங்கிருந்து காசி 388 கி.மீ. தூரத்தில் உள்ளது.  இன்னும் இரண்டு வாரப் பயணத்தில் காசிக்குச் சென்றுவிடுவோம் என்ற எண்ணம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

@sarvesh mishra

@Rajesh Mishra


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக