அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று “மேல்மாகூட்டுரோடு” வந்து தங்கி இருந்தோம்.
இரவு 1.00 மணிக்கு நல்ல மழை. ஒருமணி நேரம் பெய்தது.
இன்று 57 ஆவது நாள், ஆடி 18 ( 03.08.2017) ஞாயிற்றுக் கிழமை.
அதிகாலை 3.15 மணிக்கு யாத்திரை தொடங்கியது.
சாலையெங்கும் மழைநீர் நிறைந்து கிடந்தது.
மீண்டும் மழை வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் குடையை எடுத்துக்கொண்டு நடந்தோம்.
ஆனால் மழை வரவில்லை.
வழியில் சாலையோரம் அமர்ந்து உளுந்தவடையும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு நடந்தோம்.
தூசி அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து காலை உணவு.
காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள விஜயலெட்சுமி திருமண மண்டபத்தை
11.00 மணிக்கு வந்து அடைந்தோம்.
ஓய்வு.
வேலூர் அன்பர் காசிஸ்ரீ சந்திரசேகரன் அவர்கள் குருசாமிக்கும், யாத்திரிகர்களுக்கும் வஸ்திரமும் காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்த ருத்ராட்ச மாலையும் வழங்கிச் சிறப்புச் செய்தார். தோபா சுவாமிகளைப் பற்றி இரு நூல்கள் வழங்கினார்.
மதிய உணவு அவரது உபயம்.
மாலை வழிபாடு.
மாலை நேர வழிபாடு முடிந்த பின்னர் சில யாத்திரிகர்கள் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சென்றனர்.
கள்ளக் கம்பரை வணங்கிக் கொண்டோம். திருமாலால் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர் என்றும் கூறினர். கள்ளக் கம்பரை வணங்குவோர் எதற்கும் மயங்கார் என்றனர்.
ஐந்து தலைகளும் பத்துக்கைகளையும் உடைய பிரமனின் உருவம் ஒரு தூணில் காணப்பட்டது. இங்குள்ள நல்லக்கம்பரைப் பிரமன் வழிபட்டதாகச் சொன்னார்கள்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக