ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

17.08.2015 காசி யாத்திரை

17.08.2015 காசி யாத்திரை

வலையபட்டி பச்சைக்காவடி அவர்களது தலைமையிலான இராமேச்சுரம் காசி பாதயாத்திரை குழுவினர் மத்தியப் பிரதேசம்  மௌகன்ஞ் என்ற ஊரிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டோம் .

வழியில் நல்ல மழை.
சாலையோரம் உள்ள கடையின் முன்பு அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.


11.00 மணிக்கு ம.பி., உ.பி. எல்லையில் உள்ள அனுமானா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். 

படத்தில் இருக்கும் அன்பர் வரவேற்று அவரது இல்லத்தில் தங்கச் செய்தார்.  நாளை மறுநாள் இங்கிருந்து  புறப்பட்டு உ.பி. எல்லைக்குள் நுழைவோம்.

காசி 145 கி.மீ. தொலைவு

அனுமானாவில் மாலை நேரத்தில், அடியார் ஒருவர் சாலையில்  நடந்து வந்து கொண்டிருந்தார். எங்களில் ஒருவர் அவரைப் பார்த்து, இவர் தமிழர் போல் தெரிகிறரே என்றார். எங்களது பேச்சைக் கேட்ட அந்த அடியாரும் எங்கள் அருகில் வந்து, தான் திருச்செந்தூர் என்றும்,  இராசபாளையம்  அருகே மடத்தில் இருந்ததாகவும், 14 வயதிலேயே பாத யாத்திரையாகப் பாரதம் முழுதும் சென்று வணங்கி வருவதாகவும், இம்முறை  இராமேச்சுரத்திலிருந்து புறப்பட்டு திருவாடாணை குடமுழுக்குப் பார்த்து கேதார்நாத் வந்ததாகவும், திரும்பும் வழியில் காசியில் இரண்டு நாட்கள் தங்கி, 15.08.2015 காசியிலிருந்து புறப்பட்டு இராமேச்சுரம் திரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த அன்பர் இந்த அடியாரையும் வரவேற்றார்.

பணம் வாங்க மறுத்து விட்டார். தீர்த்தங்கள் வைத்திருந்தார். தேவார திருவாசகம் புத்தகங்களும் பழங்களும் ரொட்டியும் வைத்திருந்தார்.

கழுத்தில் உத்ராட்சமும் காலில் செருப்பும் அணிந்திருந்தார். பிளாஸ்டிக் விரிப்பு வைத்திருந்தார்.  காலில் செருப்பு அணியாமல் பாதயாத்திரை செய்து வந்ததாகவும், ஒருநாள் கண்ணாடித்துண்டு ஒன்று குத்திக் கிழித்து விட்டதாகவும், அதிலிருந்து காலில் செருப்பு அணிந்து நடப்பதாகவும் கூறினார்.  

இவரது கையில் பணம் இல்லை,

பிரம்பு இல்லை.

டார்ச்லைட் இல்லை.

குடை இல்லை.

செல்போன் இல்லை.

வழியில் உள்ள கடைகளில் பணம் வாங்காமல் உணவு அளிப்பர்,  அதை உண்டு, சாலை ஓரங்களில்  தங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.  தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சாலைகளுக்கு நடுவே படுத்துக் கொள்வதாகவும் கூறினார்.  வேறு எந்த இடத்தில் படுத்துத் தூங்கினாலும்  விச சந்துக்களால் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென்றும்,  மேலும் வழிப்போக்கர்களும், காவல்துறையினரும், அருகில் உள்ள ஊராரும் அடிக்கடி எழுப்பி விசாரித்துத் தூக்கத்தைக் கலைத்து விடுவார்கள், எனவே யாத்திரையின் போது சாலைகளின் நடுவே உள்ள திண்டில் படுத்துத் தூங்குவதே பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உள்ளது என்று கூறினார்.  அயர்ந்து தூங்கும்வரை வண்டிகளின் சத்தம் மட்டுமே சற்று கேட்டுக்கொண்டிருக்கும் என்றார்.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்த யாத்திரிகரை ஆசிர்வதித்து   விபூதி அளித்தார்.

யாத்திரிகர் அவரது பயணத்தைத் தொடர்ந்தார்.

முற்றும் துறந்த யாத்திகர்  ஒருவரை முதன்முறையாகக் கண்டேன்.

படத்தில் அவர் முகத்தைச் சரியாக எடுக்க முடியாமல் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக